எழுதியவர்: நாபா.மீரா
பாக்தாத் தீவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது அந்தக் கப்பல். விலை உயர்ந்த பொருட்கள் பலவும் ஏற்றுமதிக்காக அந்தக் கப்பலில் குவித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தன .
ஊம் …இந்த முறை நம் பாடு கொண்டாட்டம்தான் .சரியாய் நள்ளிரவு நெருங்கும் வேளையில் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு , பிறர் அறியாமல் நம்மைத் தொடர்ந்து வரும் கப்பலில் சேர்த்துவிட்டுத் தப்பிவிடணும்… திட்டம் தீட்டியவாறே சுற்றிலும் நோட்டமிட்டான் பூவரசன் .
அதே சமயம் , அந்தக் கப்பலின் மற்றொரு முனையில் நின்றிருந்த எழில்பாவை தன திட்டம் நிறைவேற நெருங்கும் நேரம் எண்ணித் தவிப்புடன் காத்துக் கொண்டிருந்தாள்.
நள்ளிரவு ….
அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ஓசையெழுப்பாமல் வெளியே வந்த பூவரசன் கப்பலின் நாலாபுறமும் பார்வையைச் சுழற்றினான் . தனக்கு நேர் எதிர்முனையில் தன்னைப் போலவே தயாராக நின்ற இளம்பெண்ணைக் கண்டு திடுக்கிட்டான். தாங்கள் நின்று கொண்டிருந்த திசைக்கு எதிர்ப்பக்கமாக நகர்ந்து பின்புறம் சென்று அவளை வளைக்கத் திட்டமிட்டான்.
வர வர பொண்ணுங்களுக்கு எவ்வளவு தைரியம் ?…எண்ணிக்கொண்டே துரிதமாகச் செயலில் இறங்கினான் பூவரசன்.
மறுநாள் காலை போலீஸ் படை கொள்ளைக் கும்பலை வளைத்துப் பிடிப்பதற்காக வந்தது .அந்தக் கப்பலின் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த எழில்பாவையை நெருங்கிய போலீசார் ….
உன் பொருள் ஏதாச்சும் கொள்ளை போயிடிச்சாம்மா ..கவலைப்படவேண்டாம் . நாங்க எப்படியும் அந்தக் கொள்ளைக் கும்பலைப் பிடிச்சிடுவோம் . என்னென்ன பொருள் கொள்ளை போச்சுன்னு லிஸ்ட் குடும்மா.
சுதாரித்த எழில்பாவை அழுகையை நிறுத்தி ஒன்றும் இல்லையெனச் சமாளித்தாள்.
இவனுங்க வேற.. கால நேரம் புரியாம..நானே நாடு இரவுல கடலோட அழகை ரசிக்க …யாருக்கும் தெரியாம இந்தக் கப்பல்ல ஏறி …
தற்கொலை பண்ணிக்கப் போறேனோங்கற சந்தேகத்துல என்னைப் பின்பக்கமா அணைச்சு வளைச்சவங்கிட்ட என் இதயத்தைக் கொள்ளை குடுத்துட்டேன்.. சொன்னா மீட்டுத் தருவாங்களாக்கும் …
மனத்துக்குள் நொடித்துக் கொண்டவளின் எண்ண அலைகள் பூவரசனின் பிடியில் இருந்த தருணங்களைச் சுற்றி வட்டமிட்டன.
பாவம்..அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை , அவனைத்தான் போலீசார் தேடுகின்றனர் என்று.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.