எழுதியவர்: திவ்யாஸ்ரீதர்
மாயா நடுக்கடலில் ஒரு படகில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
பௌர்ணமி நிலவு வானில் சிரிக்க, நட்சத்திரங்கள் அதற்கு காவலாய் இருக்க, அது ரம்மியமான இரவாக இருந்தது.
ஆனால் மாயாவின் மனதில் அந்த இரவு பயத்தை விதைத்தது. தனிமையின் பிடியில், நடுக்கடலில் எப்படி வந்தோம் என்று தெரியாமல் அவளின் இதயம் படபடத்தது.
அவள் ஏன் இங்கு வந்தாள்? எப்படித் தனியாக மாட்டிக்கொண்டாள்? எப்படி இங்கிருந்து தப்பிக்கப் போகிறோம் என்று எண்ணிக்கொண்டிருக்க, அவளின் சிறிய படகு வேகமாய் ஆடியது.
எதிரில் ஏதோ ஒரு பெரிய கப்பல் வருவது போல் தெரிந்தது.
மனம் கொஞ்சம் இன்பமாய் உணர்ந்தது, ஆனால் அந்தக் கப்பல் அருகில் வரவர அது கொள்ளைக்காரர்களின் இருப்பிடம் என்று அவளுக்குத் தெரிய வந்தது.
உடைந்த மண்டை ஓடுகளும், கிழிந்த பாய்மரமும் பார்க்க வினோதமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் இருந்தது.
அது நெருங்கி வர வர அவளின் இதயம் வெளியில் வந்துவிடும் போல் இருந்தது. அந்தக் கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு உயிரை விடுவதை விட, கடலில் குதித்து உயிரை விட்டு விடலாம் என்று எண்ணியவள் குதித்துவிட்டாள்.
“வீல்” என்று ஒரு கத்தல் எழ, “எருமை எருமை! நீ காலையில சீக்கிரமா எழுந்திருச்சா நான் ஏன்டி உன்மேல தண்ணி ஊத்தப் போறேன்? அதுக்காக எப்படி கத்துற?” என்று மாயாவின் அம்மா புலம்பிக் கொண்டே சென்றாள். கனவு கலைந்தது.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.