எழுதியவர்: உஷாராணி
சாளரம் வழியாக மிதமான காற்று வர, நாற்காலியில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் எங்கோ பார்வையை வெறித்தபடி அமர்ந்திருந்தார்.
தன் கைகளை கோர்ப்பதும், விடுவிப்பதுமாக இருந்தார். அவரின் செய்கைகளுக்கு அர்த்தம் மற்றவர்களுக்கு புரிவதுமில்லை. அதைப்பற்றி அவர்கள் கவலைப்டுவதும்மில்லை.
அவரின் நினைவுகள் எல்லாம் ஒரு மூலைக்குள் அடைந்திருந்தன.
பெயர்…
வயது…
வாழ்ந்த வாழ்க்கை ….
இவை எதுவும் அவருக்கு நினைவில்லை.
நினைவிழப்பால் அருள் பாதிக்கப்பட்ட பிறகு , வாழ்க்கை அவருக்கு வெற்று நிழலாய் இருந்தது. உறவுகள் சம்பவங்கள், முகங்கள் அனைத்தும் பிளவுப்பட்ட கண்ணாடி தகடுகள் போல இருந்தது.
அவர் வாழும் வீடு, அவர் ஆசையாக பார்த்து பார்த்து கட்டிய வீடு பரிச்சியமில்லை. அவருக்கென்று இருந்த அறையில் எப்போதும் முடங்கிக் கிடந்தார்.
அந்த அறை அவரின் ராஜ்ஜியமாக இருந்தது. அந்த அறையில் சுவற்றில் குடும்ப புகைப்படங்கள் மங்கலாக தொங்கிக் கொண்டு இருந்தது.
அவர் படித்த புத்தகங்கள் வரிசையாக இல்லாமல் தாறுமாறாக இறைந்து கிடந்தது.
ஓர் அலமாரி பூட்டிக் கிடந்தது. திறக்க வேண்டும் என்ற உந்துதலில் திறந்தார். திறந்ததும், உள்ளே இருந்து அடைத்து வைக்கப்பட்ட துணிகள் குவியலாக விழுந்தது.
அந்த துணி குவியலிடையே சிகப்பு வண்ண புத்தகம் இருந்தது.. அது கண்கவரும் வகையில் தங்க நிற வேலைபாடுகளுடன் மெல்லிய இசையை எழுப்பியது. அதன் இசையில் கவரப்பட்டு அதனை கையிலெடுத்தார்.
அந்த புத்தகத்தை கைநடுங்க திறந்தார். முதல் பக்கத்திலே சந்தன நிறத்தில் அகண்ட கண்களோடு சிரித்தபடியே ஒரு பெண் .
மனதை மயக்கும் குரலில் ‘அருள் என்று கூப்பிட்டாள்.
அந்த வசிய குரல் … அவரை என்னவோ செய்தது. நெஞ்சில் உலுக்கி, மூளையை தாக்கியது.
மஞ்சரி என்று அவரின் வாய் முணுமுணுத்தது.
அந்த மாய புத்தகத்தின் அடுத்த பக்கத்தை திறந்தார்.
இவருக்கு பிடித்த மஞ்சள் வண்ண சேலையில் ஓய்யாரமாக ஒரு பக்கம் தலை சாய்த்து உதட்டை சுழித்து சிரித்து, கொஞ்சும் குரலில், “ நீ மீண்டும் என்னை நினைக்கும் போது, இந்த காதல் உயிர்க்கும். அப்போது நீ உணர்வாய். நம்மை பிரித்தது இந்த சமூக மே ஒழிய நம் காதல் இல்லை. “ என்ற வாசகம் இருந்தது.
மற்ற எல்லா நினைவுகளும் நீங்கியபடி இருக்க, மஞ்சரியின் நினைவுகள் மட்டுமே சுடர்விட்டது:
அடுத்த பக்கத்தை தன் நடுங்கும் கரங்களால் திறக்க, அதில் வெள்ளி தூவானமாய் மேகங்கள் வீசும் மழை நாளில் அவளின் கை கோர்த்துக் கொண்டு, ஆள் அரவமற்ற தெருவில் நடந்த காட்சி வந்ததும் உடம்பு சிலிர்த்தது.
ஒருவரை ஒருவர் அதீத பிரியத்தோடு காதலித்தார்கள்.
காதல் கனவில் இருந்த அவனுக்கு திடீரென்று தந்தை இறந்ததும், நோய் பட்ட தாயையும், தம்பி, தங்கைகளையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டான்.
ஒரு நாள் அவன் தன் காதலை சொல்ல ,அம்மா அழுதாள்.
உன் காதல் திருமணத்தால் தம்பி தங்கைகளின் வாழ்க்கை சீர்கெட்டு போகும். நம் உறவுகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று மறுத்தாள்.
தம்பி தங்கைகளும் இவனை ஏக்கமுடன் பார்த்தார்கள்.
எங்களை கைவிட்டு விடாதே என்று இறைஞ்சுவது போல் இருந்தது..
அங்கே பணம் படைத்த மஞ்சரி வீட்டில், சாதியையும், தராதரத்தையும் காரணம் காட்டி நிராகரித்தர்கள்.
அவள் அவனிடம் “” நாம் திருமணம் செய்துக் கொள்ளலாம்”. என்று மன்றாடினாள் –
குடும்ப பிணைப்பு வேலை சுமை, மற்றும் வாழ்க்கை மீதான பயத்தாலும் அவளை ஏற்க வில்லை.
அவளோ, ஒன்றும் செய்வதறியாது தன் கனவான மருத்துவம் படிக்க சென்று விட்டாள்.
காலம் போன போக்கில், அவளை மெல்ல மறந்தார். தன் குடும்பத்திற்காகவே திருமணமும் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்தார்.
இப்போது, தன் கண்களை இடுக்கிக் கொண்டு சாளரம் வழியாக பார்த்தார். மழை பெய்துக் கொண்டு இருந்தது.
அந்த மாய புத்தகத்தின அடுத்த பக்கத்தை திறந்தார்.
அதில். அவள் கடைசியாக அவருக்கு எழுதப்பட்ட கடிதம் இருந்தது.
என் பிரியமான அருளுக்கு
உன் அன்பு மஞ்சரி கண்ணீரில் எழுதும் கடைசி கடிதம்.
நம்மை பிரித்தது நம்ம தாய் மொழி அல்ல. நம் மதம் அல்ல. நம் பாசமும் அல்ல.
அவர்கள் என்ன சொல்வார்களோ “ . என்பதிலிருந்து வரும் பயம் நம்மை பிரித்தது, பாரம்பரியம் என்ற பெயரில் பேதங்களை உண்மை என்று நம்பும் மூட நம்பிக்கையே.
நீயும் உன் காதலும் என் வாழ்க்கையின் அழகான பகுதி. உன் நினைவில் நான் என்றும் இருப்பேன் என்று நம்புகிறேன்…i
இப்படிக்கு
உன் பிரிய காதலி மஞ்சரி.
படித்தபடியே கீதம் பாடும் அந்த மாய புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.
யாருக்காக தன்னை விரும்பும் அவளை ஒதுக்கினரோ இப்போது அவர்கள் யாரும் அருகில் இல்லை.
அருள் மெதுவாக விழித்தபடி சிரித்தார்.
பெய்து கொண்டியிருந்த மழை விட்டு, சில்லென்று மனதை நிரப்பும் குளிர்ந்த காற்று சாளரத்தின் வழியாக தாலாட்டியது.
மெல்ல அவர் காதில் மஞ்சரியின சிரிப்பொலி கேட்டது.
அது நிஜமா..? மாயமா..? என்று அறிய முற்பட வில்லை.
அவருக்கு அது தேவையும் இல்லை.
அவர் மனதில் தோன்றிய மஞ்சரியின் நினைவுதான் உண்மை..
அருள் புத்தகத்தை அருகில் வைத்தார்.
அவர் வாழ்ந்தார். அவளின் நினைவுகளோடு.
காதல் மறக்கப் படலாம். ஆனால், உண்மையான காதல் ஒரு மாயம் போல் நம்முள் , நம் ஆன்மாவுடன் மறைந்தும் இருக்கலாம்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.