எழுதியவர்: திவ்யாஸ்ரீதர்
மகிழினி வழக்கமாகச் செல்லும் நூலகத்திற்கு அன்றும் சென்றாள். புத்தகங்களை மாற்றிக்கொண்டு, புதியவற்றைத் தேடிக் கொண்டிருந்தபோது, அவளின் கண்களில் ஒரு விசித்திரமான புத்தகம் தென்பட்டது.
அது மிகவும் பழமையாக இருந்தது. அதிலிருந்த தூசியைத் தட்டி, மெதுவாகத் திறந்தாள். உள்ளே மிகவும் பழமையான தமிழ் சொற்கள் இருந்தன.
ஒவ்வொரு வரியாகப் படிக்கப் படிக்க, ஏதோ ஒரு சுவாரஸ்யமான செய்தி அதில் புதைந்திருப்பதாகத் தோன்றியது.
புத்தகத்தை மூடி வீட்டிற்கு எடுத்துச் சென்றாள்.
அன்றிரவு உணவு முடிந்ததும், மகிழினி தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.
மேசையின் மீது புத்தகத்தை வைத்து, படிக்கத் தொடங்கினாள். அது ஒரு மாயாஜால உலகில் வாழ்ந்த இளவரசியைப் பற்றிய கதை.
அது அவளை மிகவும் ஈர்த்தது. அவள் படிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவளின் கண் முன் உயிர் பெறுவது போல ஒரு பிம்பம் ஏற்பட்டது.
அந்தப் புத்தகத்தை விட்டு வெளிவரவே அவளால் முடியவில்லை.
புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் அவள் புரட்ட, இளவரசி நீலாவின் சாகசங்கள் அவளை மெய்மறக்கச் செய்தன.
ஒரு கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தில் மகிழினி ஒரு மந்திரக் கண்ணாடியைப் பற்றிப் படித்தாள். அந்தக் கண்ணாடி கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் காட்டும் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்து முடித்ததும், அவள் கண்களுக்கு ஒருவித மயக்கம் ஏற்பட்டது.
புத்தகத்தில் இருந்து ஒரு மெல்லிய நீல நிற ஒளி கிளம்பி, அவள் கண்களை நோக்கிப் பாய்ந்தது. அடுத்த கணம், அவளது அறை மறைந்து, ஒரு பழமையான அரண்மனை மண்டபம் அவள் கண் முன் தோன்றியது!
திகைத்துப் போன மகிழினி தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். உயர்ந்து நிற்கும் தூண்கள், சுவரெங்கும் வரையப்பட்ட ஓவியங்கள், நடுவில் தங்கத்தால் இழைக்கப்பட்ட சிம்மாசனம் என அனைத்தும் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
“நான் எங்கே இருக்கிறேன்?” என்று அவள் முணுமுணுத்தாள். அப்போது, அவளுக்குப் பின்னால் மெல்லிய காலடியோசை கேட்க, அவள் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே, அவள் புத்தகத்தில் படித்த அதே இளவரசி நீலா, கம்பீரமாக நின்று கொண்டிருந்தாள்! அதே ஒளிரும் கண்கள், அதே நீண்ட கூந்தல், அதே ராஜ உடைகள்…
மகிழினிக்கு உடல் முழுவதும் சிலிர்த்தது. இது நிஜமா, கனவா என்று அவளுக்குப் புரியவில்லை.
“நீ… நீலா இளவரசியா?” என்று தயக்கத்துடன் கேட்டாள் மகிழினி.
நீலா ஒரு புன்னகையுடன் அவளைப் பார்த்தாள். “ஆமாம், நான் தான் இளவரசி நீலா! நீ யார்? எப்படி இங்கு வந்தாய்? வானத்திலிருந்து குதித்த தேவதையா?” என்று குறும்பாகக் கேட்டாள்.
மகிழினி தன் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்தாள். “நான்… நான் இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று… ஒரு மாயக்கண்ணாடி பற்றிய அத்தியாயத்தைப் படித்ததும், அடுத்த நொடி இங்கு வந்துவிட்டேன்,” என்று மூச்சுத் திணறியபடி சொன்னாள்.
நீலா ஆச்சரியத்துடன் புத்தகத்தை வாங்கிப் பார்த்தாள். “இது… இது என் தாத்தா எனக்குக் கொடுத்த மாயப் புத்தகம்! இதில் எங்கள் ராஜ்யத்தின் ரகசியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
இதை யாராலும் திறக்க முடியாது என்று நினைத்தேன், நீ ஒரு சிறப்பு வாய்ந்தவளாகத்தான் இருக்க வேண்டும்!” என்று நீலா வியப்புடன் கூறினாள்.
“நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் என் உலகத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்,” என்று மகிழினி குழப்பத்துடன் கூறினாள்.
நீலா அவளது கைகளைப் பற்றிக் கொண்டாள். “பயப்படாதே. நீ இங்கு வந்ததற்கு ஒரு காரணம் இருக்கும். வா, என் தந்தையிடம் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்,” என்று கூறி அவளை அழைத்துச் சென்றாள்.
மகிழினிக்கு இது ஒரு கனவாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அந்த அரண்மனையின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு காட்சியும் அத்தனை நிஜமாக இருந்தன.
நீலா அவளின் தந்தையிடம் மகிழினியை அழைத்துச் சென்று நடந்த அனைத்தையும் கூறினாள். மன்னரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
அதன் பின்பு மகிழினிக்கு வழங்கப்பட்ட ராஜபோக விருந்துகள் அவளை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
ஒவ்வொரு உணவும் அவளது சுவை மொட்டுகளைத் தூண்டியது. இதுவரை கண்டிராத பழங்கள், அருந்தாத பானங்கள் என அனைத்தும் புதிய அனுபவமாக இருந்தன.
ஆனால் அவள் மனம் முழுவதும், “நான் எப்படி இங்கு வந்தேன்? இந்தப் புத்தகம் ஒரு நுழைவாயில்தானா?” என்ற கேள்விகளே ஓடிக் கொண்டிருந்தன.
விருந்து முடிந்ததும், இளவரசி நீலா அவளை அரண்மனையின் தனிப்பட்ட நூலகத்திற்கு அழைத்துச் சென்றாள்.
அது ஒரு பிரம்மாண்டமான மண்டபம். அங்கு சுவர்களெங்கும் பழங்காலச் சுருள்களும், மாயாஜாலப் புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
“இங்குள்ள ஒவ்வொரு புத்தகமும் ஒரு தனி உலகத்திற்கு உன்னைக் கூட்டிச் செல்லும். நீ இப்போது வந்த புத்தகம் போலத்தான் மற்றவையும்,” என்று நீலா கூறினாள்.
அவள் கூறியதைக் கேட்டு மகிழினிக்கு மிகவும் ஆச்சரியம்.
நீலா அவள் உலகத்தின் சிறப்புகளை அவளிடம் கூறினாள். பதிலுக்கு மகிழினியும் அவள் உலகத்தைப் பற்றி விவரித்தாள். அவர்கள் இருவரும் நல்ல தோழிகளாக மாறினர்.
நீண்ட நாள் கழித்து இளவரசி நீலாவிற்கு ஒரு நல்ல தோழி கிடைத்ததால் அவள் மிகவும் மகிழ்ச்சியில் திளைத்தாள்.
இப்போது அவர்கள் இருவரும் பிரியும் நேரம் வந்தது. மீண்டும் நீலா ஒரு புத்தகத்தை மகிழினிடம் கொடுக்க, மகிழினி கேள்விக்குறியோடு அவளைப் பார்க்க, நீலா புன்னகைத்தபடி,
“இது உன் உலகத்திற்குப் போவதற்கான சாவி. எப்போது வேண்டுமானாலும் நீ வரலாம், செல்லலாம். நம் நட்பு தொடரும்!” என்று கூறி அவளை ஏக்கத்துடன் பார்த்தாள்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.