படைப்பாளர்: அருள்மொழி மணவாளன்
கருமையான வானில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை பார்த்தவாறு மொட்டை மாடியில் மல்லாக்கபடுத்திருந்தான் கோபு.
அயலான் படத்தில் வந்தது போல் ஏலியன் என்னுடன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கணக்கு வாத்தியார் இடமிருந்து அடி வாங்காமல் தப்பிக்கலாம், அப்பாவிற்கு நல்ல வேலை கிடைக்க வைக்கலாம், நினைத்ததும் நினைத்த இடத்திற்கு போகலாம் என்று நினைத்தான்.
அப்போது ஒரு நட்சத்திரம் வேகமாக நகர்ந்தது. எதிர்வீட்டு பாட்டி, ஓடும் நட்சத்திரத்தை பார்த்து ஏதாவது நினைத்தால், நினைத்தது நடக்கும் என்று கூறியது நினைவுக்கு வர, ஏலியன் என் கண் முன் வர வேண்டும் என்று நினைத்தான்.
நகர்ந்து கொண்டிருந்த நட்சத்திரம் அப்படியே நின்றுவிட்டது. உடனே நான் நினைத்தது எங்க நடக்க போகிறது என்று சோகமானான்.
சட்டென்று அவனின் எதிரே அந்தரத்தில் நின்றது ஒரு முக்கோண வடிவ விண்கலம். பறக்கும் தட்டு என்றால் தட்டையான வட்டமாக இருக்கும். இதுஎன்ன 7 அடி உயரத்தில் கூர்மையான முக்கோண வடிவில், கண்ணாடி போல் பளபளத்துக் கொண்டு இருக்கிறது என்று ஆச்சர்யமாக பார்க்க,
திடீரென்று அதனுளிருந்து முக்கோண உடம்பின் மீது முக்கோண தலையுடன், உச்சியில் ஒரே ஒரு கண் 360 டிகிரியும் சுழலும்படி வந்த ஏலியனை பார்த்ததும் எலிபோல் சுவற்றில் ஒண்டிக்கொண்டுடான்.
அது அவனருகே வந்து அவன் உச்சந்தலையில் ஒரு விரலை வைத்தது மட்டும்தான் அவனுக்கு நினைவிருந்தது. அவன் நினைவு திரும்பும் பொழுது பால்வழி அண்டத்தில் பறந்து கொண்டிருந்தான் ஏலியனின் விண்கலத்தில்.
தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஏலியினை பார்த்து அலறி அடித்து எழுந்தான். “நீ வேண்டினாய் அல்லவா? அதனால் தான் உன்னை பார்க்க வந்தேன்” என்று சிரித்தது எதிர்வீட்டு பாட்டியின் குரலில். பாட்டியை சுற்றும் முற்றும் அவன் தேட, “உனக்கு கணக்கெல்லாம் சரியாக தெரிய வேண்டுமா?” என்றது கணக்கு வாத்தியாரின் குரலில்.
அதன் பிறகு தான் கோபுவுக்கு தெரிந்தது, அவன் நினைத்ததெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்று. ‘ஆனால் நான் ஏலியன் என்னுடன் இருக்க வேண்டும் என்று தானே நினைத்தேன்’ என்று பயந்து அதை பார்க்க, “ஃபார் த சேஞ்ச். நீ என் கூட வா” என்று சொல்லி சிரித்தது அவனது குரலிலேயே.
அவனின் பயந்த முகம் கண்டு பயப்படாதே கோபு, இன்னும் ஒரு நிமிடத்தில் எங்கள் கோளுக்கு சென்று விடலாம் அது சொல்லி முடிக்கும் பொழுது பிரகாசமான ஒளி அவன் கண்ணை தாக்கியது. கண் சிமிட்டி பார்க்க, எங்கும் முக்கோண உடம்பில் முக்கோண தலையுடன் ஜீவராசிகள் அலைந்து கொண்டிருந்தது.
விண்கலத்திலிருந்து இறங்கியதும், ஒவ்வொருவரும் வந்து கோபுவை சுற்றி பார்த்து சென்றார்கள். அந்த இடமே விசித்திரமாக இருக்க “என்னால் எப்படி ஆக்சிஜன் இல்லாமல் வாழ முடிகிறது” என்றான் கோபு.
அவன் கையில் இருந்த வாட்ச்சை காண்பித்து, “இது உனக்கு உதவுகிறது” என்று கூறி, பால்வழி அண்டத்தில் 1019847 ஆவது கோள் எங்கள் ட்ரிக்கோன் கோள். இது பூமியிலிருந்து 54,682 பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அரைமணிநேரம் பயணித்தால் நீ இங்க வந்து விடலாம். அப்படி என்றால் நம் வேகத்தை கணக்கு போட்டுக் கொள் (பாபு ஏற்கனவே கணக்கென்றால் காத தூரம் ஓடுபவன் இதை எப்படி புரிந்து கொள்வான்) என்று கணக்குகளை எல்லாம் கோபுவிற்கு கூறியது.
ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு தெரிந்தது, தன் வீட்டைவிட்டு ரொம்ப தூரம் வந்துவிட்டோம் என்று. அதை நினைத்ததும் அழுகை வந்துவிட்டது. அவனின் அழுகை கண்டு, அவன் உச்சந்தலையில் விரலால் அழுத்தம் கொடுத்தது ஏலியன்.
அவன் கண் திறந்து பார்க்கும் பொழுது மொட்டை மாடியில் தூக்கத்திலிருந்து எழுவது போல் எழுந்தான். எழுந்ததும் சுற்றும் மற்றும் பார்க்க, ஒன்றையும் காணும். வேகமாக கீழே ஓடி தன் தாய் தந்தையிடம் தன் கண்ட அனைத்தையும் கூறினான்.
கனவு கண்டு எதையும் உளராதே என்று விட்டார்கள்.
பள்ளியில் வந்து நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் அவனை கிண்டல் செய்தார்கள்.
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் சோகமாக அமர்ந்து விட்டான்.
கணக்கு வாத்தியார் பாடம் நடத்த, அனைத்திற்கும் விடை கூறினான். அதில் அனைவரும் ஆச்சரியமாக அவனைப் பார்க்க, அவனுக்குமே அது அதிர்ச்சியாகதான் இருந்தது. அப்பொழுதுதான் அந்த ஏலியன் தன் உச்சந்தலையில் கை வைத்தது நினைவுக்கு வர அதற்கு மனதார நன்றி கூறினான்.
மகிழ்ச்சியாக அவன் வீட்டிற்கு வர அவனது தந்தையும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் அவருக்கு உயர்ந்த பதவி கிடைத்தது என்று. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவனது தந்தை நீ என்ன படிக்கணுமோ படி கோபு. உன்னை நான் படிக்க வைக்கிறேன் என்று கூற,
“நான் விண்வெளி ஆராய்ச்சி பற்றி படிக்கிறேன் அப்பா” என்று பெருமையாக கூறினான் கோபு.
முற்றும்.