படைப்பாளர்: S முத்துக்குமார்
பம்பு செட்டை ஆன் செய்து, நீர் பாய்ச்சி, வரப்பில் களை எடுத்து, வேப்ப மரத்து அடியில் இருக்கும் கயிற்றுக் கட்டிலில் கால் நீட்டி உட்கார்ந்தேன். இதமான காற்றில் கண்கள் செருகியது…திடீரென்று காற்று சுழன்று அடிக்க, எழுந்து பார்ப்பதற்குள் என் முகத்தருகே..என்ன இது? ஆயிரம் மடங்கு பெரிதாக்கிய பச்சைக் கலர் ஓணான்..அதன் கண்களில் ஒரு நட்பு தெரியவே, எச்சில் விழுங்கி..”நீ..நீங்கள் யார்?”
“பயம் வேண்டாம்..நான் வேற்று கிரகத்தான்.. நேற்று இரவு வந்திருந்தோம்..அழகான இடம், ரம்மியமான சூழ்நிலை..அடிக்கடி வரலாமா..?”
“வந்திருந்தோம் னு சொல்றீங்க..யார் யாரு..உங்க பேர்…என்னைத் தெரியுமா உங்களுக்கு?”
“நான் XD.. XT க்கு உங்க கிராமம் பிடிக்கலை..நகரத்து கூட்டத்தை பார்க்க போயிட்டான்…நான் உன் பக்கத்துல உட்காரலாமா..இது என்ன..?” என்று மாம்பழத்தை கையில் எடுத்தான் XD.
பிரமிப்பும் திகைப்பும் குறையாமல், “இது என் தோட்டத்து மாம்பழம்…இனிப்பா இருக்கும்.” என்றேன்…
“எனக்கு இனிப்பு, திகைப்பு, பிரமிப்பு உண்ணும் கிடையாது..என்னைச் சுற்றி நடப்பதை இது ரெகார்ட் பண்ணும் ..” நெற்றியருகே ஒரு கருப்பு பொத்தானைக் காட்டினான் XD…”இதோ இந்த பட்டனை அழுத்தி..இடது கையை மேலே தூக்கினால் சார்ஜ் ஆயிடுவேன்..” பேசியபடி மாம்பழத்தை தான் வந்த ஊர்தியில் எறிந்தான்…வேப்ப மரத்து கிளையில் தொங்கினான், பம்பு செட் நீரை இறைத்தான்…மண்ணை சுரண்டினான்… அவன் கண்கள் வாஞ்சையோடு சிரித்தன…
“பூமியில் இங்கே நடப்பதை ரெகார்ட் செஞ்சு என்ன பண்ணுவே? XT டவுன்ல போய் ரெகார்ட் பன்றானா..?” நான் கேட்டவுடன் நின்று அருகே வந்து, “அதெல்லாம் எங்களுக்கு தெரியாது, எங்க கேப்டன் கட்டளை..” என்று சொல்லிக் கொண்டிருந்த போதே…சர்ரென்று இன்னொரு கலம் இறங்க, ஏதோ சிக்னல் தெரிந்து, XD ஊர்தி ஏற, பறந்து காணாமல் போனார்கள்.
சிறிது நேரத்தில் பெரும் கூட்டம் கூடியது. நிருபர்கள் போட்டோ பேட்டி எடுத்துக் கொண்டார்கள். அடுத்த நாள் காலை செய்தித் தாளில் தலைப்புச் செய்தி.. “மாம்பழம் சாப்பிட்ட ஏலியன்!”
முற்றும்.