ஒரு பக்க போட்டிக்கதை: காத்திருக்கும் காளியம்மா

by admin
86 views

எழுத்தாளர்: சேவற்கொடி செந்தில்

“இந்தா பாரும்மா… டபரா, தட்டு எல்லாம் சீக்கிரமா கிளீன் பண்ணுங்க.. எவ்வளவு நேரம்” என சமையல் காண்ட்ராக்டர் சேட்டு காளியம்மாவிடம் சிடுசிடுவென கத்துகிறான். அது ஒரு ஜெயின் குடும்பத்து விழா சேட்டுகள் உணவு காண்ட்ராக்ட் எடுப்பார்கள். சம்பளமாக ரூ.450 கொடுப்பார்கள். அதில் வேலைக்கு அழைத்து செல்லும் ஆள் ரூ.50 எடுத்துக்கொள்வார்கள். அப்படி தான் அன்று வேலைக்கு காளியம்மாவும் வேலைக்கு சென்றாள். காளியம்மா சிறு வயது முதல் கஷ்டத்தை மட்டுமே பார்த்த பெண். பள்ளி படிப்போ பாதியில் நிற்க காளியம்மா அப்பா சொல்லிக்கொடுத்த கைத் தொழிலான பூ கட்டும் தொழிலை செய்து வந்தாள். ஆனால் அதிலும் சொற்ப வருமானம் தான். 250 ரூபாய்க்கு முதல் போட்டால் 100 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இந்த வருமானத்திற்கு ஐந்து முதல் ஆறு கிலோ மீட்டர் நடக்க வேண்டி இருக்கும். அப்படிபட்ட நேரங்களில் இந்த சமையல் வேலை காளியம்மாவிற்கு உதவியாக இருந்தது.

அன்று வேலை சற்று அதிகம் காய்கறி நறுக்குவது மட்டுமின்றி, பாத்திரமும் கழுவ வேண்டும். காளியம்மா அகண்ட பாத்திரத்தை எடுத்து வைத்து சபீனா பவுடரை தூவி, முதலில் கைகளால் தேய்த்து விட்டு,பின்னர் தேங்காய் நாரை கொண்டு தேய்த்துக் கொண்டிருந்தாள். அப்போது, காளியம்மாவிற்கு போன் வருகிறது. பச்சை பட்டனை அழுத்தி காதில் வைக்கிறாள் “ஹலோ.. ம்மா, நான் தான் பேசுறேன்” என குரல் ஒலித்தது. அது காளியம்மாவின் மகன் சந்தோஷின் குரல். “சொல்லு தம்பி, ஹாட்பாக்ஸ்ல சாப்பாடு செஞ்சு வச்சுட்டு வந்தேனே குழம்ப சூடு பண்ணி சாப்ட்டியா என்றாள். கொஞ்சம் அமைதியாக அனைத்தையும் சந்தோஷ் கேட்டுவிட்டு “அதெல்லாம் சாப்ட்டேன், எனக்கு நாளைக்கு இன்டர்வியூ இருக்கு. இப்போ தான் போன் வந்துச்சு”என்று கூறினான். காளியம்மா பேசிக்கொண்டிருக்கும் போதே சமையல் காண்ட்ராக்டர் சேட்டு வந்துவிட்டான். “ஏம்மா.. இது உங்க வீடு நினைச்சிட்டியா வேலைய பார்க்காம போன் பேசிட்டு இருக்க, ஒழுங்கா வேலை பாக்கலேன்னா சம்பளம் கிடைக்காது’’என கறார் காட்டினாள். கலங்கி நின்ற காளியம்மா “சரி, நீ கிளம்பி சத்திரம் வந்துடு” என கூறிவிட்டு போனை ஆப் செய்துவிட்டு வேலையை தொடங்கினாள். பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி வைத்து விட்டு சாப்பாடிற்கு சக ஊழியர்களுடன் காத்திருந்தாள்.

அது ஜெயின் சமூக மக்கள் நடத்தும் துறவறம் விழா. துறவறத்துக்கான முதல் நாள் நிகழ்வு, ஆடல், பாடல் என்று ஒரு திருமணத்துக்கு முந்தைய நாள்போலவே இருக்கும் . அடுத்த நாள் துறவறம் செல்லும் நிகழ்வு நடைபெறும். விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு செல்ல தற்போது வேலையாட்கள் சாப்பிட செல்கிறார்கள். அவர்களுடன் காளியம்மாவும் செல்கிறாள். தட்டை கையில் எடுத்துக் கொண்டு வரிசையில் நிற்க , முதலில் ஸ்வீட், பின்னர் ஒரு துண்டு வெள்ளரிக்காய், ஒரு துண்டு கேரட், அப்பளம், சப்பாத்தி, கீ ரைஸ் , சாம்பார் , ஊறுகாய் என ஒவ்வொன்றாக வைக்கப்படுகிறது.”சேட்டு, தம்பி இந்த ஸ்வீட் இன்னொன்னு கொடுப்பா, என் மகனுக்கு இது புடிக்கும்” என காளியம்மா ஆசையாய் கேட்கிறாள். தட்டை வெடுக்கென்று இழுத்த சேட்டு, ”உன் புருஷன் சாப்பிட, புள்ள சாப்பிட அவுங்க பங்சன் வைக்கல புரியுதா, கொடுக்குற சாப்புடு” என சத்தம் போட்டான் சேட்டு. அந்த சத்தம் மண்டபத்தின் வாசல் வரை கேட்டது. காளியம்மா தட்டில் இருந்த ஸ்வீட்டை எடுத்து பேப்பரில் சுற்றி முந்தானையில் சொருகி வைத்துக்கொண்டாள்.

காளியம்மா சக ஊழியர்களுடன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, மண்டபத்தின் பின் வாசல் வழியாக சந்தோஷ் வந்து கொண்டிருந்தான். காளியம்மா மகனை பார்த்ததும், அவசர அவசரமாக சாப்பிட்டு கைகளை கழுவிக்கொண்டு முந்தானையில் சுருட்டி வைத்திருந்த ஸ்வீட்டை கொண்டு போய் கொடுத்தாள். சந்தோஷ் ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்க,” என்ன கம்பெனி, எவ்வளவு சம்பளம் சொன்னாங்க, இன்டர்வியூ எங்க…” என காளியம்மா ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். படித்து முடித்தவுடன் வேலை கிடைத்துவிடும் என்று நம்பியவர்களில் காளியம்மாவும் ஒருத்தி. சந்தோஷ் கல்லூரி படிப்பை முடித்து ஆறு மாதமாக வேலை கிடைக்காமல் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறான். ஸ்வீட்டை சாப்பிட்டு விட்டு , ”ம்ம்மா… என்ட்ரி பீஸ் 300 ரூபா கட்டணுமாம். அது போக பயோ டேட்டா ஜெராக்ஸ் எடுக்கணும். ஆட்டோல தான் போகணும். அதான் காசு கேட்கலாம்னு வந்தேன்” என நீண்ட பட்டியலை போட்டான். இந்த முறை எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காளியம்மா, ”சரி, நீ வீட்டுக்கு போ.. போய் டிரஸ் தேய்ச்சி வை. நைட்டு வந்து பேசிக்கலாம்” என கூறி அனுப்பி வைக்கிறாள்.

மறுநாள் காலை எட்டு மணி, இன்டர்வியூக்கு புறப்பட்ட சந்தோஷ்க்கு கேட்ட பணத்தை சாமி படத்திற்கு முன்னால் வைத்து கொடுக்கிறாள். காளியம்மா கை இடுக்குகளில் புண்கள், சபீனா பவுடர் பயன்படுத்தி அதிக நேரம் தண்ணீரில் கைகள் இருந்ததால் வந்தது. நேரம் கடந்தது மணி 12.30ஐ நெருங்கியது. கைகளுக்கு மருந்து போட்டுவிட்டு சமையலுக்கு தயார் செய்து கொண்டிருந்தாள் காளியம்மா. காலையில் நம்பிக்கையுடன் சென்ற சந்தோஷ் , சோகத்துடன் வந்து சேரில் அமர்கிறான். காளியம்மா கையில் காபி டம்பளருடன் சென்று, ” என்னப்பா ஆச்சு, எதுவும் சொல்லாம இருக்க” என பேச்சு கொடுத்தாள். காபி டம்ளரை கையில் வாங்கியவன் குடிக்காமல் டம்ளரை பார்த்துக்கொண்டிருந்தான். காளியம்மா கொஞ்சம் அதட்டி, ”டேய், உன்ன தான். இன்டர்வியூக்கு போன என்னாச்சு” என்று கேட்டாள். மெல்ல மெல்ல, ”அது ஏதோ, மார்க்கெட்டிங் கம்பெனியாம், உங்களுக்கு கீழ ரெண்டு பேர் சேர்க்கணும். அதுக்கு முன்னாடி 3000 கொடுத்து நம்ம கம்பெனில பொருள் வாங்கணும். அப்படின்னு 3 மணி நேரம் மீட்டிங் போட்டாய்ங்க. அதுக்கு தான் 300 ரூபா அப்ளிகேஷன் சார்ஜ்னு வாங்குனாய்ங்க” என வேலை கேட்டு போன இடத்தில் ஏமாற்றப்பட்டதை கூறினான். ஏதும் பேசாமல் இருந்த காளியம்மா,”ம்ம்ம்… சரி, போய் அவ்வா கிட்ட போய் அம்மா வேலைக்கு வர்றேனு சொன்னாங்க அப்படின்னு சொல்லிட்டு வா” என பெருமூச்சு விட்டு சமையல் வேலையை தொடர்ந்தாள்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!