சித்திரைத் திருவிழா போட்டிக்கதை: முதியவளின் குரல்

by admin
144 views

எழுத்தாளர்: செ.உ.தீபிகா                

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே மக்கள் அவரவர் ஊருக்குச் செல்லும் பேருந்திற்காக காத்திருந்தனர்.

அதில் பாபநாசம் என்ற நடைமேடையில் திருநெல்வேலியில் இருந்து பாபநாசம்  செல்லும் பேருந்து வந்து நின்றது.

அந்த பேருந்தில் இருந்து மக்கள் இறங்கும் முன்பே அவர்களை இறங்கவிடாமல் உள்ளே ஏறுவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

“யம்மா! ஏன் இப்படி தள்ளுறீங்க? இறங்கிக்கிறோம், அப்புறமா ஏறுங்க”

என்று மிகவும் கடினப்பட்டு கூட்ட நெரிசலில் இருந்து விடுபட முயன்றவாறு ஒருவர் கூற அதையெல்லாம் காதில் வாங்காமல் ஏறுபவர்கள் ஏறிக் கொண்டுதான் இருந்தனர்.

“ஏய்! ஏறு புள்ள. சோப்புலாங்கி மாதிரி நின்னுகிட்டே இருக்காத”

என்று ஒரு பெண் அவரது மகளிடம் கூறி அதன் பிஞ்சு கையைப் பிடித்து மேலே ஏற்றிவிட்டார். ஏற்கனவே மக்களால் நிரம்பி வழிந்த அந்த பேருந்தினுள்  மேலும் ஒரு பெண் கையில் சிறு குழந்தையுடன் அடித்து பிடித்து உள்ளே ஏறினார்.

“யம்மா! கொஞ்சம் தள்ளுங்களேன். பச்ச புள்ளையை கையில வச்சுக்கிட்டு அந்த புள்ள நிக்குது. இப்படியா இடிச்சு புடிச்சுட்டு நிப்பீங்க? கொஞ்சம் அந்த புள்ளைக்கு உட்கார இடம் கொடுக்கலாம்ல?”

என்று ஒரு வயதான பெண்மணி அக் கூட்ட நெரிசலை பார்த்து தன் தளர்ந்த குரலில் கூற

“ஆமாமா இங்க அவ அவளுக்கு நிக்கவே இடம் இல்லையாம். இதுல இந்த கிழவி வேற”

என்று சொன்னது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நடுத்தர வயது பெண்மணி.  மாமியார் கொடுமை போல அதனால் எந்த முதியோரை பார்த்தாலும் பிடிப்பதில்லை அவருக்கு.

அந்த பேருந்தில்தான் கல்லிடைக்குறிச்சியில் உள்ள தன் ஆச்சி  அதாவது பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக அந்த கூட்டத்தில் நிற்க முடியாமல் நின்றிருந்தனர் லாவண்யாவும் அவரது தாய் லட்சுமியும்.

“யப்பா என்னா கூட்டம்!”

என்று தன் புடவை தலைப்பால் முகத்திற்கு காற்று வீசியவாறும் வாயால் ஊதியவாறும் லட்சுமி கூற

“அம்மா! நெறிக்கிறாங்க மா. கால் வலிக்குது”

என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு பாவமாக கூறினாள் லாவண்யா.

“யம்மா கொஞ்சம் தள்ளி நில்லுங்க. புள்ள நிக்குது, நெறிக்காதீங்க”

என்று எரிச்சலுடன் லட்சுமி கூறியதும் தள்ளி நிற்க முயற்சித்தும் தோல்விதான் அடைந்தனர் அனைவரும். பாவம் அவ்வளவு கூட்டம், அவர்களாலும் என்னதான் செய்ய முடியும்.

பேருந்து சத்தமான ஒலி எழுப்பி  அங்கிருந்து புறப்பட்டதும் பயணியர் அனைவரும் திடீர் இயக்கத்தின் காரணமாக முன்னோக்கி சென்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினர்.

அப்பொழுது அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் சில கூட்டம் வடிந்துவிட்டது.

நடந்துநர் கடைசி படியில் நின்றுக் கொண்டு வாயில் விசிலை வைத்து,

“பாபநாசம், பாபநாசம்”

என்று சத்தமிட்டுக் கொண்டிருக்க

“ஐயா! வி.கே‌. புரம் போகுமா?”

என்று ஒரு வயதான பெண்மணி அந்த நடத்துநரிடம் கேட்டார்.

“ம்.. போகும். ஏறு பாட்டி, ஏறு”

என்று அந்த நடந்துநர் கூறியவுடன் அந்த பாட்டி ஏறிவிட அடுத்ததாக வந்த ஒரு வயதான பெண்மணி,

“யப்பா! இது தென்காசி போவுமா?”

என்று நெற்றியின் மேல் கைவைத்து கண்களைச் சுருக்கிக் கேட்டதற்கு

“அதெல்லாம் போவாது. பாபநாசதுக்கு  போகுது”

என்று அந்த பாட்டியிடம் கூறிய நடந்துநர் பேருந்தில் தட்டி விசில் அடித்தவாறு உள்ளே ஏறியவர்

“டிக்கெட் டிக்கெட்”

என்று சத்தமிட பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.

அந்த நேரத்தில் கையில் குழந்தையுடன் முந்தைய நிறுத்தத்தில் ஏறிய அந்தப்  பெண்ணை பார்த்து,

“அம்மா! தாயி! இப்போ உக்காருத்தா”

என்று அந்த வயதான பெண்மணி காலியாக இருந்த இருக்கையை சுட்டிக் காட்டி கூறியதும் கையில் குழந்தையுடன் இருந்த அந்தப் பெண் அந்த இருக்கையில் அமர்ந்ததும் அந்த வயதான பெண்மணியைப் பார்த்து,

“உக்காந்துட்டேன் மா. ரொம்ப நன்றி”

என்று சிறியதாக புன்னகைத்தார்.

“சரித்தா”

என்று அழகாக சிரித்த அந்த பாட்டியோ தள்ளாடியபடி பேருந்தில் மேலிருக்கும் கம்பியை பிடிக்க முடியாத அளவுக்கு குள்ளமாகவும் கூன் விழுந்தும் காணப்பட்டார்.

உடலிலுள்ள தோல் தளர்ந்து வறண்டு போய் இருந்தது. மேலிருக்கும் கம்பியை பிடிக்க முடியாததால் இருக்கைக்கு அருகில் இருந்த அந்த கம்பியை பிடித்து தள்ளாடியபடி நின்று கொண்டிருந்தார்.

அங்கிருந்த இளைய சமுதாயம் அனைவரும் மனசாட்சி என்ன விலை என்று கேட்பார்கள் போலும். ஏனென்றால் அவரை அந்நிலையில் பார்த்தும் சிறிதும் நகராமல் கல்லை போல் இறுக்கமாக அமர்ந்துக் கொண்டு காதுகளில் வேறு செவி அடைப்பான் பொருத்தி நிச உலகை மறந்து நிழல் உலகில் சஞ்சரித்தனர்.

அந்த வயதான பெண்மணியோ அங்குள்ள அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அப்படியே நின்று கொண்டார். பின் பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நிற்க ஒரு இருக்கை காலியானது.

அதைப் பார்த்த லட்சுமி ஏற்கனவே இருந்த கூட்ட நெரிசலின் காரணமாக அவள் உடலெங்கும் வியர்வை பூத்திருக்க தன் புடவை தலைப்பால் முகத்தை துடைத்தவள் தன் மகள் லாவண்யாவை பார்த்து,

“ஏய் உக்காரேண்டி. அடுத்த ஆள் யாராவது வந்துர போறாங்க”

என்று கூறி அவளை பிடித்து அந்த இருக்கையின் அருகே தள்ளியதும் இருக்கையின் மேல் இருக்கும் கம்பியை பிடித்த லாவண்யா,

“சரிமா உட்காருதேன். அதுக்கு ஏன் இப்படி தள்ளுறீங்க?”

என்று எரிச்சலுடன் முகம் சுழித்தவாறு  அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

ஆனால் அவள் பார்வையோ ஒரு இருக்கையின் அருகில் நின்று கொண்டு அந்த கம்பியை பிடித்தவாறு கையில் ஒரு கூடையை வைத்து பரிதாபமாக நின்றிருந்த அந்த வயதான பெண்மணியின் மேல்தான் இருந்தது.

அந்த வயதான பெண்மணி லாவண்யாவை பார்த்து அழகாக புன்னகைக்க அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள்.

பேருந்தும் புறப்பட்டது. அடுத்து எந்த பேருந்து நிறுத்தத்திலும் நிற்காமல் பேருந்து அந்த இரவு நேர இயற்கை சூழலில் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி பயணம் செய்து கொண்டிருந்தது.

அந்த பயணம் பலருக்கு ரசிக்கும் படியாகவும், சிலருக்கு தூங்கும் நேரமாகவும், சிலருக்கு அதுவும் அலைபேசி பார்க்கும் நேரமாகவே  கடந்தது.

ஆனால் அந்த மூதாட்டிக்கோ கால் வலி, தலைவலி என அனைத்து வலிகளும் அதிகமாக இருக்க அந்த 80 வயதிலும் உழைத்தும் சாப்பிடும் எண்ணம் உள்ளவர் போலும்.

ஏனென்றால் அவர் இப்பொழுது கொத்தனாருக்கு கையாளாக வேலைக்கு சென்று வேலை முடிந்ததும் அவர் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் வயதான பெண்மணி அல்லவா?  பாவம் எவ்வளவு நேரம்தான் அப்படியே நிற்பார்? ஓரளவிற்கு மேல் அவரால் நிற்க முடியவில்லை போல.

“எம்மா இந்த கால் வேற என்னமா வலிக்குது? என்னத்த மாத்திர மருந்து தின்னாலும் சரியா வர மாட்டிக்கு. ஒரு பைய உட்கார இடம் தர மாட்டானுவோ,  என்ன புள்ளேளோமா”

என்று பெரியதாக சலித்துக் கொண்டார் அந்த வயதான பெண்மணி.

அப்பொழுது அவருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த மிகவும் அதிகமாக இரக்க குணம் கொண்ட ஒரு இளைஞனோ அலைபேசியில்  புலனத்தின் வழியாக முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தான்.

பாவம் அருகில் இருந்த அந்த வயதான பாட்டி அவன் கண்களுக்கு தெரியவில்லை போல. என்ன செய்வது? இப்பொழுது இருக்கும் இளைஞர்களே பல நோய்களுக்கு ஆட்பட்டுதான் இருக்கிறார்கள்.

அப்பொழுது பத்து வயதே நிரம்பிய லாவண்யா தன் அருகில் நின்ற தாய் லட்சுமியைப் பார்த்து,

“அம்மா! அந்தப் பாட்டி பாவம். ரொம்ப நேரம் நிக்கிறாங்கல? நான் சின்ன புள்ளதான? நான் எந்திரிச்சுட்டு அவங்களுக்கு உக்கார இடம் கொடுக்கட்டுமா?”

என்று தலையை ஆட்டி ஆட்டி மழலை குரலில் கேட்க

“என்னது? அடி வாங்கப் போறியா நீ? பேசாம உட்காரு. இடம் கொடுக்குறாளா இடம். நாமளும் இன்னும் ரொம்ப தூரம் போகணும். எவ்ளோ நேரம் நிப்ப?”

என்று லட்சுமி கோபமாக கேட்டதும் லாவண்யாவும் உதட்டைப் பிதுக்கி அழுவதைப் போல் பாவணை செய்தவள் கண்கள் நீர் பொங்க எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்து கொண்டாள்.

ஆனால் அவள் பார்வை அந்த வயதான பெண்மணியின் மேல் இருக்க சிறிது நேரம் வரை தாயின் அதட்டலுக்கு பயந்து அமர்ந்திருந்த அந்த பிஞ்சு மொட்டோ அந்த வயதான பெண்மணியின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு உடனே எழுந்தாள்.

“லாவண்யா! உக்காரு”

என்று லட்சுமி அதட்ட

“போமா”

என்ற லாவண்யா அந்த வயதான மூதாட்டியின் அருகே சென்று,

“பாட்டி! நீங்க வந்து அங்க உட்காருங்க”

என்று அவர் கையைப் பிடித்து அழகாக தன் மழலை குரலில் கூறி அவள் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி இழுத்தாள்.

“அடியே தங்கம்! ராசாத்தி! வேண்டாம்டா. நீ போய் உட்காரு”

என்று அந்த பாட்டி அவள் கண்ணம் பிடித்து முத்தமிட்டு கூறியதும்

“இல்ல பாட்டி! பரவால்ல. நான் சின்ன புள்ளதான! நின்னுக்குவேன். நீங்க போய் உட்காருங்க”

என்று லாவண்யா கூற அங்கிருந்த இளைஞர்கள் சிலர் இவர்களை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தனர்‌. ஆனால் பலன் என்னவோ இருக்கையை விட்டு துளி கூட அசையவில்லை.

“தங்கமான புள்ள”

என்று லாவண்யாவை புகழ்ந்து மற்றொரு வயதான பெண்மணி அருகிலிருந்த நபரிடம் கூறினார்.

இங்கு லட்சுமியின் முகம் கோபத்தில் எள்ளும் கொள்ளுமாக வெடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவரும் அந்த இருக்கையில் அமரவில்லை.

“வாங்க பாட்டி”

என்று அந்த வயதான பெண்மணி மறுக்க மறுக்க அவரை அந்த இருக்கைக்கு அருகில் அழைத்து வந்தாள் லாவண்யா.

அந்தப் பாட்டி அவர்கள் அருகில் வந்ததும் அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டதும் மனதார அவர் லாவண்யாவை  வாழ்த்தினார்.

ஆனால் லட்சுமியோ ஆத்திரம் தாங்காமல் லாவண்யாவின் தலையில் ஒரு கொட்டு வைத்தார். அதில் மீண்டும் லாவண்யாவின் கண்கள் சிவந்துவிட

“அம்மா! வலிக்கி”

என்று தன் தாயை நிமிர்ந்துப் பார்த்து தன் தலையை தேய்த்தவாறு லாவண்யா கூறியதும்

“ம். வலிக்கட்டும். போசாம நில்லு”

என்று அவளை அதட்டி லட்சுமி பற்களை நரநரவென கடித்துக் கொண்டார்.

“ஆமா உன் பேரு என்னத்தா?”

என்று அந்த வயதான பெண்மணி லாவண்யாவை பார்த்து கேட்டதும் தன் பிஞ்சுக் கையின் ஐந்து விரல்களையும் சேர்த்து வைத்து கண்களை அழுத்தித் துடைத்து,

“என் பேரு லா லாவண்யா”

என்று தான் அழுதது தெரிந்து விடக் கூடாது என்று கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு பாவமாக கூறினாள் லாவண்யா.

பாவம் அவள் முகம் அழுததில் நன்றாக சிவந்துவிட்டது. அதைப் பார்த்த அந்தப் பாட்டி,

“ஏன் ராசாத்தி அழுவுற?”

என்று கேட்க

“ஒன்னுல்ல பாட்டி”

என்று தலையை அப்படியும் இப்படியும் அசைத்தாள் லாவண்யா.

“தங்கக்கட்டியெல்லாம் அழக் கூடாது. நல்லா படிக்கணும் இன? படிச்சு தாய், தகப்பன் பெயரை காப்பாத்தணும். ஆட்டுமா?”

என்று அந்த பாட்டி கேட்க

“ஆம். சேரி பாட்டி”

என்ற லாவண்யாவிற்கு நெட்டி முறித்த பாட்டி,

“நல்லா இருப்ப நீ”

என்று அவளை வாழ்த்தினார். அவர் தன் மகளை மனமார வாழ்த்தியதைக் கேட்டதும் லட்சுமிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

அப்பொழுது பாட்டி இறங்கும் நிறுத்தம்  வந்துவிட லாவண்யாவிற்கு மட்டும் ‘டாட்டா’ என்று கையசைத்துவிட்டு புன்னகையுடன் அங்கிருந்து சென்றார் அந்த பாட்டி.

சிறு குழந்தைக்கு இருக்கும் மன பக்குவமும் அவளுக்குள் எழுந்த மாற்றமும் இப்பொழுது உள்ள இளைய சமுதாயத்தினர் பலரிடம் உருவாவதில்லை.

இதற்கு காரணம் உதவி செய்ய மனமிருந்தும் வேண்டாம் என்று தடுக்கும் லட்சுமி போன்ற பெற்றோரினால் அவர்களுக்குள் இருக்கும் அந்த உதவும் மனப்பாண்மை தவறோ என்று எண்ணி உதவுவதே இல்லை.

அதுமட்டுமின்றி இப்பொழுதெல்லாம் உதவும் குணமுடையவர்கள் கேலிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதனால் என்னவோ அவர்கள் உதவுவதையே விட்டுவிடுகின்றனர்.

சிலர் வேண்டுமென்றே உதவுவதில்லை. இந்த நிலை எப்பொழுது மாறும்? லாவண்யாவிற்கு மட்டும் கேட்ட அந்த முதியவளின் குரல் நமக்கு எப்பொழுது கேட்கும்?

முற்றும்.

அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள்  கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://aroobi.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/

You may also like

Leave a Comment

error: Content is protected !!