எழுத்தாளர்: முனைவர் அ.இலங்கேஸ்வரன்
“காரைக்கால் காரைக்கால்…எறங்கு…எம்மா சீக்கிரம் எறங்கும்மா…வேடிக்கப் பாக்காத எறங்கு…”
பேருந்தில் இருந்து சந்திரனும் அவன் அப்பா சந்தானமும் இறங்கினார்கள். இறங்கியதும் சந்திரனின் பசித்த வயிறுக்கும் காதுக்கும் கண்ணுக்கும் விருந்தாக சரவணபவன் ஓட்டல் தெரிந்தது. கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூரிகள் காற்றடைத்த குட்டித் தலையணையைப் போலக் காட்சியளித்தன. ஓட்டலின் உள்ளே இருந்து வந்த பலகார வாசனையையும் முந்திக்கொண்டு காபியின் வாசம் மூக்கைத் தொலைத்தது. வேளாங்கண்ணிக்குப் போகவேண்டும் என்று அப்பா விடியற்காலை 4 மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டார். அம்மா நீராகாரம் கொடுத்தாள். அத்தோடு கும்பகோணத்தில் பேருந்து ஏறி மணி ஏழு மணிக்கெல்லாம் காரைக்கால் வந்தடைந்தாயிற்று. எனவே பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது அந்தப் பதிமூன்று வயது சிறுவனுக்கு. வயிற்றுக்குள் பசி மோட்டார் ஓட்ட ஆரம்பித்துவிட்டது. அப்பா அடித்தாலும் பரவாயில்லை என நினைத்துக்கொண்டு,
“எப்பா பசிக்கிதுப்பா” எனக் கேட்டே விட்டான்.
“ஏய்! சும்மா வரமாட்ட? தீனிப் பண்டாரம். எப்பப் பாத்தாலும் துன்னுக்கிட்டே இருப்பியா? வீட்லருந்து எதாவது எடுத்துட்டு வரவேண்டியது தான? கைய வீசிட்டு வந்துட்டு என்ன பசிக்கிதுன்னு சொல்ற?” எனக் கோபத்தைக் கக்கினார்.
“இந்தாங்க! இதுல அரிசி உண்ட இருக்கு. தம்பிக்கு பசிக்கும் போது கொடுங்க”
“ஏய் தின்னிப் பய மொவளே! கோயிலுக்கு சாமி கும்புடத் தானே போறோம்? திங்கவா போறோம்?” எனக் கத்தியது பக்கத்துத் தெரு வரைக்கும் கேட்டிருக்கும். அந்த உருண்டைகளை எடுத்து வந்திருந்தால் கூட, பசிக்கு அதனை உண்டிருக்கலாம். ஆனால் அப்பா அதற்கும் வழிவிடவில்லை. பசியில் வாடிக்கொண்டிருக்கும் அப்பாவுக்குப் பசிக்குமா பசிக்காதா? என எண்ணிக்கொண்டே,
“எப்பா”
“என்னடா?”
“எப்பப்பா வேளாங்கண்ணிக்குப் போவோம்?”
“சும்மா வரமாட்டியா? எந்நேரமும் நை நைன்னு கேள்வி கேட்டுக்கிட்டு வர்ர? ஒன்னய ஊட்லயே வுட்டுட்டு வந்திருக்கலாம். வாய மூடிக்கிட்டு வா!”
அவ்வளவுதான் எப்பப் போவோம்னு ஒரு கேள்விக்கு நான்கு வரிகள் வந்து விழுந்துவிட்டன. இனி பேசினால் அப்பா வைக்கும் கொட்டில் மண்டை அப்பளம் போல நொறுங்கிவிடும். எனவே பசியையும் பலகாரத்தின் மீதான ஆசையையும் அமுக்கிக் கொண்டு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கட்டையில் அமர்ந்துகொண்டான்.
சந்தானம் வேளாங்கண்ணிக்குப் போகும் பேருந்து வருகிறதா என்று பேருந்து நுழைவு வாயிலையே பார்த்துக்கொண்டிருந்தார். யாரோ ஒருவர் அப்பாவை இடித்துத் தள்ளிவிட்டு அவசராமாகச் சென்று கொண்டிருந்தார். அவரைப் பின் பக்கமாக சட்டையைப் பிடித்து இழுத்து,
“மாடா நீ இடிச்சித் தள்ளிட்டுப்போற”
“அண்ணே! மன்னிச்சிடுங்கண்ணே! பஸ்ஸ_ போவுதுண்ணே! அவசரத்துல இடிச்சிட்டேன்.”
“போய்த் தொல”
அப்பாவின் கோபம் இன்னும் அதிகமாக இருந்தது. இனி பசியென்று வாயைத் திறந்தால் அப்பா நம்மைக் கடித்துவிடுவார். அத்தனை கோபக்காரர் அவர் என நினைத்தவன் பாவமாக உட்கார்ந்துகொண்டான்.
“டேய்! அங்கப்போய் அது வேணும் இது வேணும்னு நச்சரிச்சன்னு வச்சிக்க…அங்கயே உன்ன வுட்டுட்டு வந்துடுவேன் பாத்துக்க”
“எனக்கு எதுவும் வேணம்பா”
என கால் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். சட்டைப் பையில் அம்மா திணித்த நூறு ரூபாய் இருந்தது. எதாவது விளையாட்டுப் பொருள் வாங்கிக்கோ என்று அம்மா கொடுத்தது அது. தனக்கு தண்டவாள ரயில் பொம்மை வாங்கியது போக,
“அண்ணே! எனக்கு ஒரு சுங்கு வாங்கிட்டு வாண்ணே!” என்று கேட்ட ஏழு வயது தங்கைக்கும் அதை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.
ஆனால் அவரும் வாங்கித் தரப் போவதில்லை. தன்னையும் வாங்கிக் கொள்ள விடப்போவதில்லை. எதற்காகத் தன்னை அழைத்துச் செல்கிறார் அப்பா என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அப்பா மொட்டை அடிக்கும்போதும் குளிக்கும்போதும் அவர் துணிமணிகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ள ஒரு ஆள் வேண்டுமே. அதற்காகத் தான் தன்னை அழைத்துச் செல்கிறார் எனத் தெரிந்தும் வேறு வழியில்லாமல் வந்தான். அப்பா, அம்மா, பாட்டி, தங்கை என எல்லோரும் சேர்ந்து ஒரே ஒரு முறை குலதெய்வம் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள். அதுவும் சித்தப்பாவின் பிள்ளைகளின் காதணிவிழாவிற்கு அழைத்துச் சென்றிருந்தார். தன்னுடைய தம்பிப் பிள்ளைகளுக்கான விழா அது. மேலும் சிற்றுந்தில் சித்தப்பா செலவில் அழைத்துச் சென்றார். இல்லையென்றால் நிச்சயம் அப்பா அழைத்துச் சென்றிருக்கமாட்டார். செலவாகிவிடுமாம். தினமும் சீட்டுக் கட்டு ஆடிவிட்டு வரும்போது இருநூறு ரூபாய்க்கு மேல் கோட்டை விட்டுவிட்டு கோபத்துடன் வீட்டுக்கு வந்து எல்லாரிடமும் அந்தக் கொபத்தைக் காட்டுவார்.
“ஞாயித்துக் கெழம ஒருநா தான் லீவுன்னு வேளாங்கண்ணிக்குப் போலாம்னு வந்தா நம்ம நேரம் கும்பகோணத்துலயும் பஸ் வரல. மாறி வந்து புடிக்கலாம்னா, இங்கயும் ஒரு பஸ்ஸயும் காணோம். எல்லாம் நேரம். காலங்காத்தலயே மூதேவி என் மூஞ்சி முன்னாடி வந்து நிக்கிறாளே! எல்லாம் அவ மூஞ்சில முழிச்ச நேரந்தான்”.
மனதிற்குள் தனது மனைவியைக் கரித்துக்கொட்டிய நேரமோ என்னவோ தெரியவில்லை. ஒரு பேருந்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் வந்தது புலப்பட்டது. தனியே நின்று சாலையைப் பார்த்தவன் பின்னாலிருந்து, தபதபவென்று ஐம்பது பேர் இவனை முண்டியடித்துக்கொண்டு பேருந்தைப் பிடிக்க ஓடிவந்தார்கள்.
“ஏய் வேளாங்கண்ணி பஸ்ஸேதான்…ஓடியாங்க!”
பயணிகள் பலர் உடன்வந்தவர்களை எச்சரித்தபடி ஆயத்தமாக, பேருந்து நாகப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் ஐம்பது மீட்டர் முன்னமே நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தது.
“பொறுக்கிப்பய! அங்கனயே வண்டிய நிறுத்திட்டான் பாரு…”
கூட்டத்தப் பாத்தா போதுமோ அங்கனயே நிறுத்துடுவான்”.
“இவனுக்க இதே பொழப்பு”
“நாமதான் ஓடிப்போய் சீட்டப் புடிக்கணும்”
எனப் பலர் பலவாறு சொல்லிக் கொண்டே இருக்கையைப் பிடிக்க ஓடினார்கள். பத்துப் பதினைந்துபேர் கையில் மூங்கில் கழிகளை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணிக்குச் செல்ல ஒன்றரை நேரம் பிடிக்கும். எனவே சந்தானமும் தனக்கும் தன் மகனுக்கும் சீட்டைப் பிடிக்க வேகமாக ஓடினான். அப்பாவைப் பிடித்துக்கொண்டே சந்திரனும் ஓடினான். பேருந்தின் இரண்டு வாயிலிலும் மக்கள் அடித்து நெருக்கிக்கொண்டு ஏறினார்கள். சந்தானத்திற்கு முன் கிட்டத்தட்ட பத்துபேர் இருந்தார்கள். நிச்சயம் இருக்கை கிடைக்காது என்ற எண்ணம் எழவே கையில் இருந்த பையை சன்னல் வழியாக இருவர் இருக்கையில் போட்டான். மகனைக் கையில் பிடித்தபடி ஒருவழியாக பேருந்தில் ஏறியாயிற்று. அப்பா கைப்பையைப் போட்டிருக்கும் இருக்கையிடம் செல்லவிடாமல் கூட்டம் பேருந்தை அடைத்துக்கொண்டிருந்தது. ஒருகையில் சந்திரனைப் பிடித்துக்கொண்டு மக்கள் அலையை நீங்திக் கடந்தான் சந்தானம். தான் பையைப்போட்டு இருக்கை பிடித்த இடத்திற்கு வந்த சந்தானத்திற்குப் பெருத்த ஏமாற்றம். பைக்கு அருகே வேறு ஒரு பெரியவர் அமர்ந்திருக்க முகத்தில் கடுகடுப்புப் பொங்கியது சந்தானத்திற்கு.
“யோவ் பெருசு! பையப் போட்டு இருக்கனே கண்ணுக்குத் தெரியல!”
“பையை விட்டுட்டுதானப்பா ஒக்காந்து இருக்கேன். வா நீயும் ஒக்காரு” எனப் பெரியவரும் கொஞ்சம் சூடாகத்தான் பேசினார்.
“யோவ்! எனக்கும் எம்புள்ளக்கும் சேத்துதான்யா சீட்டப் போட்டேன். எந்திரியா!”
“இந்த வயசுல இவ்ளோ கஷ்டப்பட்டு படியேறிவந்து சீட் போட்டு ஒக்காந்திருக்கேன். நீ என்னன்னா ஜன்னல் வழியா பையப் போட்டுட்டு வித்தயா காட்ற? எடத்த வுட முடியாது போப்பா!”
“ஏய்! கெழவா என்ன ரொம்ப ஓவரா பேசுற? எந்திரி இல்ல பல்ல ஒடச்சிடுவேன்!”
என சந்தானம் முதியவரின் சட்டையைப் பிடிக்க, அடுத்த நொடி முதியவரின் இடது கையின் நான்கு விரல்கள் சந்தானத்தின் வலது கன்னத்தில் பதிந்திருந்தன.
“ஏய்! யார் சட்டயப் புடிக்கிற? ஆசான்… சொல்லுங்க! சிலம்பக் கழியால மண்டய ஒடச்சிடுறேன்.” எனப் பின் வரிசையில் இருந்த இளைஞர்கள் பலர் குரல் கொடுக்க,
“விடுங்கடா! காதோரம் கொஞ்சம் முடி நரச்சிருக்கக் கெழவன்னு சட்டயப் புடிச்சிட்டான்? கன்னத்துல அடையாளம் வச்சிருக்கன்… அதுபோதும்?”
வாங்கின அடியில் சர்வமும் அடங்கி என்ன நடந்ததென்றே புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தான். பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் இவனையே பார்த்தார்கள்.
“வயசானவரப் போய் மரியாத இல்லாம சட்டயப் புடிச்சிட்டான் பாரு”
“ஒரு சீட் இருக்கே பத்தாதா? புள்ளய மடியில வச்சிக்கிட்டு ஒக்காந்தா என்னவாம்?”
எனச் சில குரல்கள் சந்தானத்தின் செவியில் அறைய, இனிப் பேசி ஒன்றும் பலனில்லை எனப் புரிந்து கொண்டு முதியவரின் அருகில் தோளொடு தோள் உரசாமல் ஒடுங்கி உட்கார்ந்து மகனை மடியில் உட்கார வைத்துக்கொண்டான். இது எதுவும் நடக்காத மாதிரி நடத்துநர் சீட்டைக் கொடுத்துப் பணத்தை வாங்கிக் கொண்டிருந்தார். பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறி தொடர்வண்டி நிலையத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தது.
அப்பா அடிவாங்கியது சந்திரனுக்கு ஏதோ பண்ணியது. அப்பா வாங்கிய அடிக்கு அவன் வருத்தம் கொண்டவனாகத் தெரியவில்லை. மாறாக அவன் முகத்தில் குறுநகை எட்டிப்பார்த்தது.
அப்பா அடிவாங்கி குறுகிக் கொண்டு வந்திருக்கும் சரியான சூழலில்,
‘நான் அடிச்சா தாங்கமாட்ட நாலு மாசம் தூங்கமாட்ட’ பாடல் பேருந்தில் ஒலித்துக்கொண்டிருந்தது.
எத்தனை முறை அம்மாவின் கன்னங்கள் இப்படி சிவந்திருந்திருக்கும் என தனக்குள் நினைவுபடுத்திக் கொள்ள முயற்சி செய்தான். ஆனாலும் அவனுக்குத் தோல்விதான். அம்மா அப்பாவை எதிர்த்துப் பேசி அவன் பார்த்ததே இல்லை. எல்லாவற்றுக்கும் அறை வாங்கியே பழக்கப்பட்டவள் அவள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எத்தனையோ முறை வெளியில் உள்ள கோபத்தை தன் அம்மாவின் முகத்தில் காட்டியிருக்கிறார் அப்பா.
ஒரு முறை சித்தி திருமணத்திற்குச் சென்றபோது, விருந்துச் சோற்றில் ஆட்டுக்கறி குறைவாக இருந்ததற்காக அம்மாவை அறைந்தார் அப்பா. தாத்தா கேட்டதற்கு அவரையும் நன்றாகத் திட்டித்தீர்த்து அதற்கும் அம்மாவை அறைந்தார். அன்று அம்மா சொந்தக்காரர்கள் மத்தியில் வெட்கித் தலை குனிந்தது இன்றும் இவன் கண்ணை விட்டு மறையவில்லை.
அப்பா எவ்வளவு பெரிய கோவக்காரர்? பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் பெற்றோர் கூட்டத்திற்கு அழைத்தபோது பள்ளிக்கு வந்தவர்,
“நீங்க கூப்ற நேரத்துக்கு வர்ரதுக்கு வேல வெட்டியில்லாம வூட்லயா ஒக்காந்துட்டு இருக்கோம்”னு சண்டையிட்டபோது வெட்கித் தலை குனிந்து நின்றதை, வேலியில் படுத்துக் கிடந்த ஓணான் கூடப் பார்த்துத் தன்னைச் சிரித்ததாக எண்ணிக் கொண்டான் சந்திரன்.
அப்பா வீட்டில் உள்ள பாட்டியைக் கூட விட்டுவைக்கவில்லை.
“எப்பா ஒரு பத்து வெத்தல வாங்கிக் குடுத்துட்டுப்போயேன்”
“ஏன் பென்சன் வாங்கி ஒம்மொவளுக்குத் தான கொடுக்ற? எங்கிட்டயா கொடுக்ற”
“ஏம்பா இப்டி பேசுறு? புருசன் இல்லாம ரெண்டு புள்ளய வச்சினு கஷ்டப்படுது. அதுக்கு நாங்குடுக்காம யாரு கொடுக்றது. நீ எனக்கு சும்மா வாங்கித் தரவேணாம். நானே காசு தர்ரேன். எனக்கு வெத்தல வாங்கிக்கொடுத்துட்டு மீதிய நீயே வச்சிக்க!”
“ஏய்! கெழவி எனக்கே பிச்சப்பேடுறியா? இந்தா உன் பிச்சக் காசு!”
எனப் பாட்டியின் மூஞ்சிலே காசை விட்டெரிந்தான்.
இப்படி வீட்டையும் சொந்தக்காரர்களையும் தன் கொடூரமான குரலாலும் கோபத்தாலும் கட்டுக்குள் வைத்திருந்த அப்பா இப்போது ஒரு தாத்தாவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதைப் பார்த்துத் தனக்குள்ளே சிரித்துக்கொண்டான். பெரியவரின் முகத்தையே உற்றுப் பார்த்தான். அவன் கண்ணுக்கு முதியவர் ஐயனார் கோயில் பூசாரியைப் போலக் காட்சியளித்தார்.
நினைவுகளின் மெத்தையில் மிதந்துகொண்டிருந்தவன் வேளாங்கண்ணிக்குப்போனதோ சாமி பார்த்ததோ எதுவும் நியாபகம் இல்லை. அந்த அடிக்குப் பிறகு அப்பா யாரிடமும் தன் கோபத்தைக் காமிக்காமல் சாதுவாக வந்தார்.
பயணம் முடிந்து வீட்டிற்கு வந்து இறங்கி அப்பாவின் முகத்தைப் பார்த்தான். எவ்வளவு பெரிய மாற்றம்? மொட்டையிடித்த அப்பாவின் மண்டையில் சந்தனம் தடவியிருந்தது.
முற்றும்.
அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.