திகில் போட்டிக் கதை: அரிக்கேன் விளக்கு

by admin 2
83 views

மூச்சு வாங்கியது ‌‌ எனக்கு. இருந்தும் ‌ ‌நில்லாமல் ஓடினேன். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடித்து, கல்லூரி சேரும் இடையில் உள்ள காலம் ஒரு சொர்ப்பம் என்று தான் சொல்ல வேண்டும். சோம்பேறித்தனமாக வாழ்க்கையின் இனிமை கண்டறிந்த காலகட்டம் அது. மொபைல் , இன்டர்நெட் இல்லாத காலம் என்பதால் , தொலைக்காட்சி, தோழிகள், வெட்டி பேச்சு, பிக்ஷன் எனப்படும் புனைவு கதைகள் படித்து குவித்தது என்று மூன்று மாதம் சும்மாவே கழித்தேன்.
அதில் ஒரு நாள் , நானும் எனது மூன்று தோழிகளும் ஒரு ஆங்கில பேய்
படத்தை பார்த்துக்கொண்டிருந்தோம். அமெரிக்காவில் சில பகுதியில் கீழ்
தளம் வைத்து வீடுகள் கட்டப்படும். நாங்கள் பார்த்த படம் இந்த வகையான
வீட்டை சார்ந்து இருந்தது. எனக்கு கீழ்த்தளம் வைத்த வீட்டை பார்க்க
வேண்டும் என்று தோழிகளிடம் சொன்னேன்.
அதற்க்கு ரம்யா , “இரண்டு தெரு தள்ளி ஒரு பாழடைந்த மாளிகை இருக்கு,
அந்த வீட்டில் அடி தளம் உண்டு என்று என் அம்மா சொல்லிருக்காங்க “
என்றாள்.
உடனே காயத்ரி “ஒரு இடிந்த வீடு போல் இருக்குமே அதுவா ?” என்று
விசாரித்தாள்.
ரம்யாவும் , “ஆம், என் அம்மா அந்த தெரு பக்கமாகவே , ஆறு மணிக்கு
மேல் நடக்க கூடாது என்று கண்டிப்பாக சொல்லுவாங்க “ என்றாள்
நான் உடனே “அங்கே ஒரு பயித்தியம் இருப்பதாய் என் அம்மா சொல்லி
கேட்டிருக்கிறேன் “ என்றேன்.
“அந்த வீட்டில் யாரையும் பார்த்ததில்லையே” என்றாள் ரம்யா
, “நான் பார்த்திருக்கிறேன். இவள் சொல்வது உண்மைதான் பைத்தியம் போல் ஒரு ஆள் இருந்தான் “ என்றாள் காயத்ரி

இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த சுபா திடீரெனெ , “ சுவாரசியமா
இருக்கும் போல. வாங்க வாங்க ரொம்ப போர் அடிக்குது. அந்த வீட்டுக்கு
போய் அடித்தளம் வைத்த வீட்டையும் , அந்த பைத்தியக்காரனையும்
பார்த்து விட்டு வரலாம் “ என்றாள் அவளது கம்பீரமான குரலில்.
“முடியாது”
“நீ என்ன பைத்தியமா ?”
“அங்க ஏதாச்சு ஆச்சுன்னா என்ன பண்றது ?”
“ஐயோ அப்பா அம்மா திட்டுவாங்க”
இத்தனை முரண்பாடுகளும், எதிர் பேச்சுகளும் பரிமாறிய பிறகும் , நாங்கள்
நால்வரும் அந்த வீட்டின் வாசல் வெளியே வந்தடைந்தோம்.
சுபாவின் ஆளை மயக்கும் பேச்சுத் திறமை தான் இதற்கு முக்கிய காரணம்.
அவள் எங்களுக்குள் பந்தயத்தை உருவாக்கி விட்டாள், வீட்டிற்குள் இருப்பது பைத்தியமா , பேயா, அடி தளமா என்று .
எங்களால் முடிந்த வரை கத்தி, வத்தி, ஆஞ்சநேயர் படம் போன்ற பாதுகாப்பு பொருட்களை இரண்டு லேடி பிர்ட் மிதி வண்டியில் நால்வரும் எடுத்து வந்திருந்தோம் .
சுபா , மட மட வென்று பாதி திறந்திருந்த க்ரில் கேட்டை முழுவதும்
திறந்து ஓடினாள். அவளது தைரியம் எனக்கு முப்பது வருடம் ஆகியும்
இன்று வரை வந்தது இல்லை. நாங்கள் மூவரும் பொறுமையாக ஒருத்தரை ஒருத்தர் கை பிடித்துக் கொண்டு உள்ளே சென்றோம்.
கேட்டிற்கும் , வீட்டிற்கும் நடுவே ஒரு வீடே கட்டிவிடலாம் போல ,
அவ்வளவு தூரம். நாங்கள் வாசல் கதவை வந்தடைவதற்குள், கதவு
கொஞ்சம் திறந்தது போல் இருந்தது. வீடு எப்படி திருந்திருக்க முடியும் என்று யோசிப்பதற்குள், சுபா மறுபடியும் கதவை வேகமாக தள்ளினாள். எங்கள் கண்முன்னே ஒரு பிரமாண்டமான மாளிகை தென்பட்டது. நால்வரும் அந்த வீட்டின் விசாலத்தையும், அழகையும் ரசித்து எங்களை மறந்து உள்ளே சென்றோம்.
“இதோ பார், படிகள் இருக்கிறது. இது அடித்தளத்துக்கு தான் செல்ல
வேண்டும் “ என்றாள் காயத்ரி.
சுபா உடனே “இருக்கலாம் , முதல்ல நம்ப இந்த வீட்டை முழுவதும்
பார்த்துவிட்டு கீழே போவோம் “ என்று காயத்ரி கையை பிடித்து வீட்டிற்குள் நடந்தாள் சுபா. நாங்கள் வழக்கம் போல் பின்தொடர்ந்ததோம்.
கிட்டத்தட்ட ஒரு சீரியல் பார்க்கும் நேரம் வீட்டை சுற்றி சுற்றி
வந்திருப்போம். ஆறு படுக்கை அரை, இரண்டு சமையல் அரை , இரண்டு
மாடிகள், ஆங்காங்கே அழகிய விளக்குகள் , பெரிய கண்ணாடி என்று
திரைப்படத்தில் வரும் வீடு போல் இருந்தது. எங்கள் நான்கு பேரின் வீட்டை சேர்த்தாலும் , இந்த அரண்மனையின் பாதி கூட வராது என்று சொல்லலாம்.
இறுதியாக அடித்தளம் செல்லலாம் என்று சுபா சொன்னாள். படியில்
இறங்கும் போதே மிக இருட்டாக இருந்தது. சுபாவை தவிர , மூவரும்
அலறினோம், செல்ல மறுத்தோம்.
சுபா எங்கள் கையை பிடித்துக்கொண்டு தைரியம் சொன்னாள். ஒவ்வொரு
படியின் அளவை தோராயமாக மனதில் வைத்து, அவள் காலடிகளை மெல்ல மெல்ல முன் வைத்தாள். நாங்களும் பின் தொடர்தோம்.
ரம்யா மட்டும் அழுது கொண்டே இருந்தாள், சத்தம் மட்டும் தான் கேட்டது.
எங்களை இருட்டு சூழ்ந்ததால், ஒருத்தரை ஒருத்தர் பார்க்க கூட
முடியவில்லை.
இறுதியாக படிகள் முடிந்து ஒரு அறைக்கு வந்திருப்போம் என்று
நினைக்கிறேன். ஒரு சிறிய வெளிச்சம் தொலைவில் தெரிந்தது. சுபா எங்கள் கையை உதறிவிட்டு, அந்த ஒளி வந்த இடத்திற்கு ஓடினாள். அங்கிருந்த விளக்கை எடுத்து, அதன் திரியை பெரிதாகின்னாள். வெளிச்சம் பரவசமாக படர்ந்தது.

சுபா , எங்களை பார்த்து “இதன் பெயர் அரிக்கேன் விளக்கு, லாந்தர் என்றும்
சொல்வார்கள். புயலில் கூட இந்த விளக்கு அணையாதாம் , அதனால் தான்
இதற்கு அரிக்கேன் விளக்கு என்று பெயர் வந்தது “ என்று
சொல்லிக்கொண்டிருந்தாள்.
திடீரென, அவள் அருகில் ஒரு கை அவளை தள்ளி விட்டது. நாங்கள்
மூவரும் கதறினோம், குதித்தோம் , அங்கும் இங்கும் சுற்றினோம், அழுது
புரண்டோம். அந்தகாரம் மறுபடியும் எங்களை சூழ்ந்தது. சில மணி நேரம்
கதறலின் பின், சுபா மறுபடியும் சுதாரித்துக் கொண்டு அந்த அரிக்கேன்
விளக்கை எடுத்து , நாங்கள் கொண்டு வந்த வத்தியை வைத்து ஏற்றினாள்.
வெளிச்சம் வந்தப்பின், ஒரே ஓட்டமாக அந்த வீட்டை விட்டு
வெளியேறினோம்.அன்று நடந்ததை வாழ்நாளில் நாங்கள் யாருமே
மறக்கவில்லை.
இரண்டு வாரம் முன், சுபாவின் அக்காவை சந்தித்தேன். பொதுவாக நலம்
விசாரித்து கொண்டிருக்கையில், அவள் “அரிக்கேன் விளக்கை உன்
வாழ்க்கையில் மறந்திருக்க மாட்டாய் அல்லவா “ என்று கண் சிமிட்டி
புன்னகைத்தாள்.
அப்பொழுதுதான் எனக்கு சில விஷயங்கள் ஞாபகம் வந்தது. நாங்கள் அந்த
பாழடைந்த அரண்மனை முன்னே நிற்கும் போது , அங்கே சுபா அக்காவின்
லேடி பிர்ட் சைக்கிளும் அதன் மேல் இருந்த அரிக்கேன் விளக்கையும்
பார்த்தோம். அதை கவனிக்க கூட விடாமல் சுபா ஓடோடி க்ரில் கேட்டை
திறந்திருக்க வேண்டும். வாசல் கதவும் எங்களுக்கு முன்னரே திறந்திருந்தது.
முப்பது வருடம் கழித்து இன்று தான் இந்த நுட்பங்களை இணைத்து அன்று
என்ன நடந்திருக்கும் என்பது எனக்கு தெளிவானது.
சுபாவு, அவளது அக்காவின் தைரியம் மட்டும் அல்ல குறும்புத்தனமும்
இன்னும் முப்பது வருடம் சென்றாலும் எனக்கு வராது என்று நினைத்து
கொண்டேன்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!