திகில் போட்டிக் கதை: உடங்காடு

by admin 2
71 views

மூச்சு வாங்கியது எனக்கு இருந்தும் நில்லாத ஓடினேன் நான். இருள் சூழும் நேரம் உடங்காடு என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும், உடை மரங்கள் நிறைந்திருந்த காடு. பாதை தவறி கால் வைத்தால் காலில் முள் குத்தி விடும். 

பகலில் வெளிச்சமாக இருக்கும் பாதை, இருட்டில் ஆட்கள் நடந்த தடம் மட்டுமே லேசாக கண்ணுக்குத் தெரிய, பாதை தவறாமல் தூக்குவாளியை கையில் எடுத்துக்கொண்டு, இவ்வளவு நாள் கேட்ட பேய் கதைகளின் பயத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன், பிரதான சாலையை நோக்கி. 

திடீரென்று வீட்டிற்கு விருந்தினர் வந்து விட, அவர்களுக்கு டீ போட்டுக் கொடுப்பதற்காக கோனாரிடம் சென்று அரை லிட்டர் பால் வாங்கி வருடி சொல்லி அனுப்பினார்கள் அம்மா. கோனாரிடம் காலியாகிவிட்டது என்றால், மெயின் ரோட்டில் இருக்கும் கடைக்கு போய் வாங்கிவிட்டு வா என்று சொல்லி அனுப்பினார்.

கோனார் வீட்டிற்கு சென்று, அங்கு பால் கிடைக்காததால் மெயின் ரோடு முக்கிலிருக்கும் கடையை நோக்கி நடந்தேன். சரல் பாதை வழியாக நடந்தால் தூரம் அதிகம் என்பதால் குறுக்கே உடங்காட்டின் வழியாக சென்று விடலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். 

அக்காட்டைப் பற்றி இதுவரை கேட்ட கதைகள் ஒவ்வொன்றும் நினைவுக்கு வர, அந்த அமானுஷ்யமான இருள் எனக்குள் பயத்தை கொடுத்தது. என் மெதுவான நடை, வேக நடையாக மாற, ஒரு கட்டத்தில் அது ஓட்டமாக மாறியது. 

கேட்ட கதைகளில் உள்ள பேய்கள் எல்லாம் என்னை துரத்துவது போல் தெரிய, இன்னும் வேகமாக மூச்சிரைக்க ஓடினேன். ஒரு வழியாக தூரத்தில் சாலையின் ஒரு விளக்கு தெரிய, என் கண்கள் அவ்விளக்கை விட்டு விலகாமல் வேகமாக ஓடினேன். நேராகச் சென்று நின்றது முக்கு கடையில். 

மூச்சு வாங்க நின்ற என்னிடம் “ஏன் பாப்பா இப்படி ஓடி வந்து இருக்க?” என்றார் கடைக்காரர். 

“அண்ணா, வீட்டிற்கு சொந்தக்காரங்க வந்திருக்காங்க. காப்பி போட பால் வாங்கிட்டு வர சொன்னாங்க அம்மா” என்று அவரிடம் தூக்குவாளியை கொடுத்தேன். 

“அதுக்காக, இருட்டின பிறகு உடங்காட்டு வழியா வருவியா? பக்கத்து வீட்டு பையன் யாரையாவது அனுப்பி இருக்கலாம் இல்ல? உங்க அம்மா” என்று திட்டிக் கொண்டு பால் அளந்து ஊற்றிவிட்டு, “காட்டுக்குள்ள போகாத, மெயின் ரோட்டு வழியா போ” என்று அறிவுரை கூறி அனுப்பினார். 

ரோட்டின் வெளிச்சத்தில் கொஞ்சம் பயம் தெளிந்தது. ‘வரும்போதும் பேய் எதுவும் நாம் பார்க்கவில்லையே! பகலில் பார்ப்பது போல் தானே இருந்தது. இப்பொழுது எதற்கு சுற்றிக்கொண்டு ரோட்டு வழியாக செல்ல வேண்டும்’ என்ற சிறு எண்ணம் தோன்ற, மீண்டும் உடங்கட்டை நோக்கிய என் கால் பயணித்தது. 

காட்டின் நடுவில் வந்ததும் ரோட்டில் வெளிச்சம் மறைந்ததும். கொஞ்சம் பயம் வர என் நடையின் வேகத்தை அதிகப்படுத்தினேன். சற்று நேரத்திற்கெல்லாம் ஏதோ ஓடுவது போல் இருக்க, தன்னால் என் கால்களும் பயத்தில் நடுங்கி ஓட ஆரம்பித்தது. 

“ஆ..” என்ற பெண்ணின் அலறல் சற்றென்று அந்த காற்றில் அதிக சத்தத்துடன் ஒலிக்க, “அச்சோ மோகினி பேய் வந்துவிட்டது” என்று பயந்து வேகமாக ஓடினேன் மூச்சு வாங்க. 

ஓட்டம் நேராக வீட்டிற்குச் சென்று தான் நின்றது. மூச்சு வாங்கியபடியே அம்மாவிடம் தூக்குவாளியை கொடுத்தேன். 

“இவ்வளவு நேரமா?” என்று திட்டிக்கொண்டே வாங்கி விருந்தினரை கவனிக்க சென்றார்கள். 

அனைவரும் சென்றதும் இரவு உணவு முடித்து படுக்கும்பொழுது, எனக்கு அந்தச் சத்தமே காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்க, வெகு நேரம் கழித்து உறக்கத்தை தழுவினேன். 

மறுநாள் காலையில் தோழிகளுடன் பள்ளி செல்ல, உடங்காட்டில் ஆங்காங்கே போலீஸ் தலைகள் தெரிந்தது. பள்ளிக்கு நேரமானதால் எதைப் பற்றியும் கேட்காமல் வேகமாக பள்ளிக்கூடம் நோக்கி ஓடிச் சென்று விட்டேன். 

சாயங்காலம் வரும் பொழுது தெருவில் உள்ள பெண் தோழி ஒருத்தி, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமாடி? நேத்து அந்த உடங்காட்டுல ஒரு பொண்ண இரண்டு பேரு கெடுத்து கொன்னுட்டாங்களாம்!” என்றாள். 

அன்று இரவு வரைக்கும் அதே செய்தி தான், என் காதுகளில் ஒவ்வொரு விதமாக ஒவ்வொருவரும் பேசுவது ஒலித்துக் கொண்டிருந்தது. 

‘அப்படி என்றால் நான் வரும்பொழுது அந்த அக்கா தான் கத்தி இருக்காங்க’ என்று நினைக்க ஏனோ எனக்கு ஒரு வித பயம் தோன்றியது. எல்லோரும் படுத்த பிறகும் அந்த பயத்திலேயே உறக்கம் வராமல் புரண்டு படுக்க, ஜன்னலில் அருகே ஒரு உருவம் என்று என்னை பார்த்து, “என்னை ஏன் காப்பாத்தாம போயிட்ட” என்று பயங்கரமாக கத்தி கேட்பது போல் பிரம்மை. 

அலறி அடித்து எழுந்து அமர்ந்தேன். அருகில் தூங்கிய அம்மாவும் “கெட்ட கனவு கண்டு பயந்துட்டியா?” என்று சொல்லி, விபூதி பூசி மீண்டும் உறங்க வைத்தார்கள். பயத்தில் நடுங்கிக் கொண்டே இருந்த நான் எப்பொழுது உறங்கினேன் என்றே தெரியவில்லை. 

காலையில் எழுந்திருக்கும் பொழுது வீடு அசாத்திய அமைதியுடன் இருந்தது. ‘இப்படி இருக்காதே? எல்லோரும் எங்க போயிட்டாங்க? காலையிலேயே பள்ளிக்கும் வேலைக்கும் செல்லும் அண்ணன் மற்றும் தம்பி சத்தமும், அக்கா சமையல் செய்யும் சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கும் வீடு அமைதியாக இருந்தது. 

மீண்டும் பயம் வர “அம்மா” என்று கத்தினேன். என் சத்தம் கேட்டதும் வந்த அம்மா கசாயத்தை கொடுத்து “எதைப் பார்த்து பயந்தியோ தெரியல? இப்படி ஜுரம் அடிக்குது” என்று சொல்லி நெற்றியை தொட்டுப் பார்த்தார்கள். 

அதன் பிறகு தான் மணியை பார்க்க மணி மதியம் பன்னிரண்டு. பின்பு அம்மா கொடுத்த கஞ்சை குடித்துவிட்டு, “முந்தா நேத்து பால் வாங்கிட்டு உடங்காட்டு வழியாதம்மா வந்தேன். அப்போ செத்துப்போன அக்கா சத்தம் கேட்டுச்சு” என்றதும் அம்மாவிற்கு புரிந்து விட்டது, எனக்கு எப்படி காய்ச்சல் வந்தது என்று. 

“உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். இருட்டிய பிறகு உடங்காட்டு பக்கம் போக கூடாது என்று” என்று சொல்லி திட்டி, அன்று சாயங்காலமே கோயிலுக்கு அழைத்துச் சென்று வேப்பிலை அடித்தது வேறு கதை

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!