படைப்பாளர்: சுசி கிருஷ்ணமூர்த்தி
மூச்சு வாங்கியது எனக்கு. இருந்தும், நில்லாது ஓடினேன் நான். ஓடினேனா? இல்லையே – படுத்துக் கொண்டு தானே இருக்கிறேன். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னையே அறியாமல் நான் கண்ணயர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தூங்குவதற்கு முன் நடந்தது என் நினைவிற்கு வர. உடனே என் உடம்பெல்லாம் திரும்ப நடுக்கம். என்னையும் அறியாமல் நான் எழுந்து உட்கார்ந்து விட்டேன். உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டி மயக்கம் வருவது போல் தோன்றியது.
இந்த தீபாவளிக்கு என் கணவரின் நண்பர் ரொம்பவும் வருந்திக் கூப்பிட்டார் என்று என் கணவர் சொல்லுக்கு கட்டுபட்டு இந்த கிராமத்திற்கு வந்தது தான் நான் செய்த தவறு என்று என்னையே நொந்துக் கொண்டேன். தீபாவளியை அவர்கள் கிராமத்து பங்களாவில் அவர்கள் குடும்பத்தினருடன் கோண்டாட வேண்டும் என்று ரொம்பக் கேட்டுக் கொண்டார் என் கணவரின் நண்பர் அது கொண்டாட்டம் இல்லை திண்டாட்டம் என்பது இப்பொழுது தானே புரிகிறது.
கிராமத்து பங்களா என்றால் சினிமாவில் வரும் பழைய வீடு போல் இருக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் பங்களாவின் கீழ்பகுதியை அல்ட்ரா மாடர்னாக மாற்றியிருந்த நண்பர் பங்களாவின் மேல்பகுதியை மட்டும் பழைய மாதிரியே வைத்திருந்தார். அமெரிக்காவிலிருந்து அவர் பெண் மாப்பிள்ளை மற்றும் இரண்டு பேத்திகளும் வருவதாக இருந்ததால் வீட்டின் கீழ் பகுதியை மட்டும் மாடர்னாக மாற்றியதாக எங்களிடம் கூறினார்.
தீபாவளிக்கு ஒரு நாள் முன்பே நான், என் கணவர், அமேரிக்காவிலிருந்து அவர் பெண், மாப்பிள்ளை, பேத்திகள் 5 வயது சுபா, 3 வயது சஹானா எல்லோரும் வந்துவிட ஒரே ரகளைதான் அங்கே. ரெண்டு பேத்திகளுக்கும் எந்த நேரமும் கொலை சண்டை. இரண்டு பேருக்குமே ஒரே மாதிரி தான் எல்லாவற்றையும் கொடுத்தாலும் அதிலும் ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடித்து சண்டை. அதனால் மாப்பிள்ளை சுபாவை மேல் பகுதியில் வைத்து விளையாட்டு காட்ட, கீழே எங்க கூட சஹானா விளையாடிக் கொண்டிருந்தது.
அன்று இரவு எல்லோரும் சேர்ந்து தியேட்டரில் ‘காஞ்சனா 3’ தீபாவளி ரிலீஸ் படம் பார்த்தோம். எனக்கு இந்த மாதிரி திகில் படங்கள் பார்ப்பது என்றுமே பிடிக்காத விஷயம். படம் என்றால் எல்லோரும் சிரித்து அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் தீபாவளிக்கு வந்திருக்கும் எல்லோரும் படம் பார்க்க விரும்பியதால், அந்த கிராமத்தில் இருந்த ஒரே நல்ல தியேட்டரில் ‘காஞ்சனா 3 ‘ மட்டுமே ஓடியதால், எனக்கு அந்த படம் பார்க்க வேண்டிய கட்டாயம்.
படம் பார்த்து விட்டு வந்ததிலிருந்து எந்த ஓரத்தைப் பார்த்தாலும் ஏதோ ஆவி உருவம் வருவது போல் ஒரு உணர்வு எனக்கு. யாரிடமாவது சொன்னால் நிச்சயம் கேலி செய்வார்கள் என்ற நினைப்பில் வாயைப் பொத்திக் கொண்டு இருந்து விட்டேன் நான்,
இரவு வேகு நேரமாகிவிட்டதாலும் , மறுநாள் தீபாவளிக்கு சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பதாலும் எல்லோரும் வந்த உடனேயே படுக்கச் சென்று விட்டோம். என் கணவர் , நான், நண்பர் மூவருக்கும் மேல் பகுதியில் படுக்கை ஏற்பாடு. மேலேயே கழிவறை வசதியும் இருந்தது. மேலே ஒரு அறையில் மட்டும் ஏசி வசதி இருந்ததால் என் கணவரும் நண்பரும் அந்த அறையில் உறங்கினர்.
எனக்கு ஏசி ஒத்துக் கொள்ளாது என்பதால் நான் வேறு தனி அறையில் படுக்கச் சென்றேன். தூக்கம் வரவில்லை. திரும்பிப் படுத்தேன். ஒரு குழந்தை அழும் சத்தம். பயந்து போய் கொஞ்சம் நகர்ந்தேன். உடனே “எல்மோ ! எல்மோ ! என்று யாரோ பாடுவது போன்ற சத்தம். அதுவும் மனிதர்கள் பாடுவது போல் இல்லாமல் ஒரு ரோபோ பேசுவது போல் இருந்தது என் உடலுக்குள் சென்று எலும்பை உலுக்குவது போல் இருந்தது. நான் எழுந்திருக்க முயன்றேன். உடனே குழந்தை கலகல வென்று சிரிக்கும் சத்தம்.
குழந்தையின் குரல். காஞ்சனா படம் பார்த்ததின் விளைவு என்று என்னை நானே தேற்றிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். சத்தம் நின்றுவிட்டது. பிரமைதான் என்று எனக்கு நானே சிரித்துக் கொண்டு திரும்ப படுத்தேன். படுத்தவுடன் திரும்ப குழந்தை அழும் சத்தம். அந்தப் பக்கம் திரும்பினால் ‘எல்மோ! எல்மோ’ சத்தம். உடனேயே குழந்தை கலகல வென்று சிரிக்கும் சத்தம். உடம்பெல்லாம் வியர்த்து விட்டது.
எழுந்து தண்ணீர் குடித்தேன். ரூமிலிருந்த வெள்ளை திரைச்சீலையெல்லாம் காற்றில் ஆடுவது எனக்கு இன்னும் பயத்தை அதிகப்படுத்தியது. அந்த திரைச்சிலைகளின் நடுவிலிருந்து சின்ன சின்ன குழந்தைகள அழுது கொண்டும் சிரித்துக் கொண்டும் என்ன நோக்கி தவழ்ந்து வருவது போல் ஒரு உணர்வு,
உடனே படுத்துக் கொண்டு, போர்வையை வைத்து முகத்தை மூடிக்கொண்டேன். உடனே அதே குழந்தை, எல்மோ! எல்மோ! சத்தம். கீழே இறங்கினால் திரைச்சீலை குழந்தைகள் காலைப் பிடித்துக் கொண்டு விடுமே என்ற பயம். போர்வையை வைத்து காதையும் மூடிக் கொண்டேன். அப்பவும் சத்தம் நிற்காததால் பயத்தில் என் கணவரை கூப்பிட்டேன். என் குரல் எனக்கே கேட்காத போது தேக்குமரக் கதவை சாத்திக் கொண்டு தூங்கும் என் கணவருக்கு என் குரல் எப்படி கேட்கும்.
கந்தசஷ்டி சொன்னால் பயம் போகும் என்று சொல்ல ஆரம்பித்தேன். கொஞ்சம் கூட நகராமல் காதைப் பொத்திக் கொண்டு சொல்லும் போது, கூடவே ‘எல்மோ! எல்மோ!” என்று தாளம் போடுவது போல் குரல் வந்துக் கொண்டே இருக்க திடுமென்று படபடவென்று ஒரே சத்தம். “ஓ’ வென்று அலறி அப்படியே மயங்கிவிட்டேன்.
என் முகத்தில் தண்ணீர் தெளிக்கும் உணர்வு தோன்றி விழித்துக் கொண்டால் அறையில் லைட் வெளிச்சம் என்னை எழுப்பி உட்கார வைத்துவவிட்டு எல்லோரும் கவலையுடன என் முன்னால். நான் ‘பேய்!’ என்று சொல்வதற்கு முன்னால் சுபா ‘பாட்டி! பட்டாஸ் பயமா?” என்று கேட்டு சிரிக்க, நான் கடைசியாகக் கேட்டது பட்டாசு சத்தம் என்று எனக்குத் தெரிந்தது. நல்ல வேளையாக நான் ‘ஓ’ வென்று கத்தியபொழுது எல்லோரும் மேல்மாடிக்கு தீபாவளி முதல் ‘தௌஸண்ட்வாலா’ வெடி வைக்க வந்ததால், என் குரல் அவார்களுக்குக் கேட்டு எல்லோரும் என் அறைக்கு ஓடி வந்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் குழந்தை சத்தம்? அவர்களிடம் குழந்தை சத்தம் கேட்டதை சொன்னால் யாருமே நம்பவில்லை.
என் கணவர் இனிமே காஞ்சனா மாதிரி படம் பார்க்கக் கூடாது என்று சொல்லி விட்டு நீ கொஞ்சம் படுத்துக்கோ. நான் இங்கேயே இருக்கேன் என்று சொல்லி என்னை படுக்க வைத்தார். கணவர் தான் கூட இருக்கிறாரே என்ற தைரியத்தில், கொஞ்ச நேரமாவது தூங்கினால்தான் மண்டையைப் பிளக்கும் தலைவலி குறையும் என்று நான் படுத்துக் கொண்டேன். ரூமிலிருந்த எல்லோரும் என்னைப் பார்த்து கேலியாக சிரிப்பது போல் தோன்றியது. அதனால் சுவற்றுப் பக்கம் பார்ப்பது போல் முகத்தை திருப்பிக் கொண்டு , திரும்பிப் படுத்துக் கொண்டேன்.
உடனே குழந்தை அழும் சத்தம். தொடர்ந்து ‘எல்மோ! எல்மோ! என்ற சத்தம், அதைப் பின் தொடர்ந்து குழந்தை கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்க, நான் ‘சொன்னது பொய் இல்லை’ என்பது மாதிரி னான் அவர்களைப் திரும்பிப் பார்த்தேன். ஆனால் யாருமே பயப்பட்டது போல் தோன்றவில்லை எனக்கு.
அதற்குள் சுபா ஓடி வந்து என்னைத் தள்ளி விட்டு ‘என்னோட எல்மோ டால் – என்னோட எல்மொ டால்” ன்னு மெத்தைக்கு அடியில் சஹானாக்கு தெரியக்கூடாது என்று ஒளிச்சு வச்சிருந்த பொம்மையை எடுத்தது . அது அமுக்கினா அழும் – அமுக்கினா ‘எல்மோ! எல்மோ’ ன்னு கத்தும் அதன் பிறகு அமுக்கினாலும் அமுக்கா விட்டாலும் கலகலவென்று சிரிக்கும் அமெரிக்க பொம்மை. . ராத்திரி பூரா என்னை பயமுறுத்திய பொம்மை. நான் பயந்த கதையைக் கேட்டு அங்கே ஒரே சிரிப்பு.
சுபாகுட்டி மட்டும் “எல்மோ குட்டி! பாட்டி உம்மேலே படுத்துண்டதும் நோக்கு ரொம்ப வலிச்சுதா – பாவம்” ன்னு கொஞ்சினதைக் கேட்டதும் அங்கே ஒரே சிரிப்பு வெடிதான் ஆனால் நான் பட்ட பாட்டுக்கு காரணம் அந்த ‘எல்மோ ! எல்மோ! பொம்மை என்று நினைக்கும் பொழுது. ஆது பொம்மையாகவே இருந்தாலும் அதன் மேல் எனக்கு பயங்கர கோபம் தான்.
முற்றும்.