படைப்பாளர்: S. முத்துக்குமார்
மூச்சு வாங்கியது எனக்கு..இருந்தும், நில்லாது ஓடினேன் நான். குளக்கரையில் அந்த ஆல மரத்தடியில் நின்று திரும்பிப் பார்த்தேன். டீக்கடை பாண்டியனோ வேறு யாரும் கண்ணில் படவில்லை. இன்னும் மழை முழுவதுமாக நிற்கவில்லை. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மூச்சு நேரானதும், முதலில் கருப்பு போர்வையை என் மேலிருந்து அகற்றி, குளத்தில் இறங்கி, போர்வையில் படிந்திருந்த பாசியை சுரண்டி எடுத்தேன். மரத்து விழுதுகளின் இடுக்கில் இருந்த என் பையில் அந்த ஈரப் போர்வையைத் திணித்து, ஒரு துண்டை எடுத்து, விரித்து அப்படியே சாய்ந்தேன்….மார்கழி மாத குளிரிலும் எனக்கு வேர்த்தது…மரத்திலிருந்து நீர்த்துளிகள் விழுந்துகொண்டே இருந்தன…
இப்போது ‘பெரிய அய்யா’ வுக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும். தலை முடி கொட்டிப் போயிருந்தாலும் மீசை காது வரை இருக்கும். தகர டப்பாவில் கற்களைப் போட்டு உலுக்கினால் வரும் சத்தத்தில் பேசுவார். எந்நேரமும் வெற்றிலை புகையிலை குதப்பிக் கொண்டிருப்பார். இரவில் கள்ளும் சாராயமும் உள்ளே இறங்கி விட்டால், தன் மகன், ‘சின்ன அய்யா’ வை அனைத்து கெட்ட வார்த்தைகளும் உபயோகித்து சத்தம் போடுவார். இருவரும் சேர்ந்தே சாராயம் குடிப்பார்கள். சென்ற வாரம், இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் பெரிசுக்கு தோளில் அரிவாள் வெட்டு. கிராமத்து வைத்தியர் பணிவோடு வந்து கட்டு போட்டுவிட்டார்.
பெரிய அய்யாவின் ஆர்பாட்டமெல்லாம் வீட்டிற்குள் தான். அவர் வீதிக்கு வந்து இரண்டு வருடமாகிறது. பார்வை மங்கி விட்டது. அவர் மீது வந்து பாசமாய் உரசிய வீட்டு நாயை, என்னவோ ஏதோ என்று தடியால் அடித்தே கொன்று விட்டார். பெருசின் மனைவி இறந்து போய் ஐந்து வருடமாகி விட்டது. சின்ன அய்யாவின் மனைவி துர்மரணம் அடைந்த போது, வைத்தியர் ‘அவங்களுக்கு வயிற்று வலி’ என்று மட்டும் திரும்ப திரும்ப சொன்னதில் ஊர் மக்களுக்கு சந்தேகம் தான். பெரிய அய்யாவின் செயல்களால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் ஊரை விட்டு போய் விட்டன. சின்ன அய்யா தலையெடுத்த பின் பலர் சொத்தை இழந்தார்கள், வாழ்வாதாரத்தைத் தொலைத்தார்கள். எதிர்க்கும் சக்தியோ, போலீசுக்கு போகும் துணிவோ யாருக்கும் இருந்ததில்லை.
அழகனுக்கு இருந்ததே அரைக்காணி நிலம். விவசாய தேவைக்கு வாங்கிய பணத்திற்கு, நிலப்பத்திரத்தை பெரிய அய்யா வாங்கிக்கொண்டார். தென்னந் தோப்பில், அழகனை அத்தனை மரங்களிலும் ஏறி தேங்காய், இளநீர் பறிக்க வைத்தார். அவர் மகன் பாண்டியன் தேங்காய் உரித்துத் தருவான். பாண்டியன் சின்ன அய்யா விற்கு தினம் கள்ளு ஊற்றிக் கொடுத்து அவர் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, அவரிடம் கடன் பெற்று, ஒரு சிறிய டீக்கடை வைத்தான். சின்ன அய்யா தன் அடியாட்களுடன் அடிக்கடி கடைக்கு வந்து வடையும் டீயும் சாப்பிட்டு போவதைக் கண்டு பொருமினான் பாண்டியன்..’இவர்கள் தின்னதுக்கே நான் வாங்கின கடன் சரியாய் போயிருக்குமே..நம்ம குடும்பத்துக்கு விமோசனமே இல்லையா’ என்று தனக்குள் புலம்புவான்.
மூன்று மைல் முன்னாலேயே பஸ் லிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன். ‘அப்பாவின் சொத்து பறி போனது. அம்மா உடைந்து போய், நோய் வந்து இறந்தாள். அண்ணன் ஊரை விட்டு ஓடிப்போனான்…என்னை பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தினார் அப்பா. பெரிய அய்யாவின் வற்புறுத்தலின் இருவரும் அவர்கள் தோட்டத்தில் வேலை செய்தோம். கிணற்றிலிருந்து அப்பா தண்ணீர் சேந்துவார் .. நான் மரங்களுக்கு, செடிகளுக்கு, மாட்டு தொழுவத்து தண்ணீர் தொட்டிக்கு நீர் ஊற்றனும்… ஒரு நாள் கிணற்றில் நீர் சேந்தும் போது நெஞ்சைப் பிடித்து அப்படியே சாய்ந்து விட்டார் அப்பா… “எலே தம்பி, இனி நீ தான் தண்ணிய சேந்தி ஒன் அப்பா வேலையும் பாக்கணும்..என்ன?” என்று அய்யா சொன்ன அன்று இரவே நான் ஊரை விட்டு வெளியேறினேன்…ஆச்சு இருபது வருஷம் ஓடிப்போச்சு … ‘
கோடை வெயில் சுட்டெரித்தது. தலைமுடியும் தாடியும் காடாய் வளர்ந்து, வியர்வை ஒழுகி உடம்பெல்லாம் எரிந்தது. குளற்று நீர் வற்றி நிலம் அங்கங்கே பிளந்து கிடந்தது, நடுவே இருந்த சேற்று நீரில் சில மீன்கள் தெரிந்தன..மேலே காகங்கள்.. அதற்கும் மேலே கழுகுகள். ஆலமரம் இன்னும் வளர்ந்து, நிறைய விழுதுகள் விட்டிருந்தது. மரத்திற்கு கீழே கால்களை நீட்டி உட்கார்ந்தேன். நாவறட்சி, வெயிலில் நடந்தது என்று உடம்பு தள்ளாடியது..
மெதுவாக நடந்து ஊருக்குள் நுழைந்தேன். தூரத்தில் ‘அந்த வீடு’…பெரிய வெளிச்சுவர்..கேட்டு மூடியிருந்தது. என் உடலில் வெப்பம் ஏறியது.. அருகில் தெரிந்த டீக்கடை வரை மெதுவாக நடந்து பெஞ்சில் உட்கார்ந்தேன். பால் பாத்திரம், பாய்லர் கழுவி தேய்த்து கொண்டிருந்தவர், நிமிர்ந்து பார்த்து..”சாயங்காலம் அஞ்சு மணிக்கு வாங்க..” என்றார். நான் தலையாட்டி ‘தண்ணீர் வேண்டும்’ என்று ஜாடையில் கேட்டேன். உள்ளே இருந்த பித்தளை அண்டாவைக் காட்டினார்…
“அசலூரா..?” என்றார்.
“ரொம்ப தூரம்…எனக்கு இங்க வேலை கிடைக்குமா ..?”
“என்னது..டீக்கடைல வேலையா..? நானே வாய்க்கும் கைக்கும் மல்லாடிகிட்டிருக்கேன் …சொற்ப காசையும் கருக்கல்ல சின்ன அய்யா வந்து பிடுங்கிகிட்டு போயிடறாரு …அட போங்கய்யா ..”
“யாரு சின்னய்யா? அவரு கிட்ட சொல்லி ஏதாவது…?”
என்னை ஏற இறங்க பார்த்து விட்டு, “சாயங்காலமா வாங்க..” என்றார்.
ஒரு கும்பிடு போட்டு விட்டு ஆலமரத்தடிக்கு நடந்தேன்….
எனது திடமான உடற்கட்டும், பணிவான பேச்சும் சின்ன அய்யா வை கவர்ந்தது…”பாண்டியா, இந்தாளுக்கு டீயும் வடையும் தினமும் கொடுத்துடு..என்ன ..” கண்களில் வெறுப்பைக் காட்டி, “சரிங்க” என்றார் பாண்டியன்.
அதே வேலை தான்..கிணற்றில் நீர் சேந்தணும், தேங்காய் உரிக்கணும் ..மரமும் ஏறணும் …இரவில் கள், சாராயம் ஊற்றிக் கொடுக்கணும் …பெரிய அய்யா முழு கிழவனாகி இருந்தார்.. கை கால்கள் ஆடின.. அடிக்கடி “எலே..யாருடா நீ ..?” என்பார். “அசலூருங்க..கோயிந்து..” என்பேன். சின்ன அய்யா கூட தளர்ந்து போன மாதிரி இருந்தார்…
இந்த வீட்டிற்கு அருகில் குடிசையில் வசித்த வைத்தியரிடம் ஒரு நாள் சின்ன அய்யா ..”பார்த்தீரா வைத்தியரே.. மூணு ஆள் வேலை செய்யறான்… செய்யற வரை லாபம்..என்ன சொல்றீர்..?” என்று பேசியது காதில் விழுந்தது. நான் வெளியே போகும் போது, வரும் போது, வைத்தியர் என்னைப் பார்ப்பது கொஞ்சம் சங்கடமாக இருக்கும். கும்பிட்டு விட்டு நகர்ந்து விடுவேன்.
ஆலமரத்தடி எனது வாசஸ்தலம் ஆனது….இருவருக்கும் சாராயம் ஊற்றிக் கொடுத்து விட்டு திரும்பும்போது பாண்டியன் கடையை சாத்தி இருப்பார். டீ வடைக்கு தினமும் நான் காசு கொடுப்பதை பயத்தோடு வாங்கிக் கொள்வார்..”கவலைப்படாதீங்க சொல்ல மாட்டேன்..” என்பேன்.
மழைக்காலம் வந்தது, குளம் நிரம்பியது..இரவில் மழை அதிகமானால், டீ கடை காரரிடம் அனுமதி வாங்கி கடையில் படுத்துக் கொள்வேன். ஒரு நாள் கிணற்றடியில் வழுக்கி விழுந்து விட்டார் பெரிய அய்யா. அடுத்த நாள், அதே இடத்தில் என்னைப் பிடித்து கீழே தள்ளி, “பாசி பிடிச்சிருக்கு பாருடா, சுத்தம் பண்ணு..” என்று கத்தினார் சின்ன அய்யா… கிணற்றில் தண்ணீர் சேந்தி கீழே கொட்டினேன்..
மழை நிதானமாக பெய்து கொண்டிருந்தது. கருப்பு போர்வையை தலைக்கும் சேர்ந்து மூடிக்கொண்டு வேகமாக நடந்தேன். உள்ளே நுழையும் போதே இருவருக்கும் வழக்கமான சண்டை …இருவருக்கும் வயிறு முட்ட ஊற்றிக் கொடுத்தேன். பெரிய அய்யா ..”எலே பிடிடா..” என்றபடி கிணற்றடிக்கு நடந்து கீழே உட்கார்ந்தார். “என்னடா சத்தம் ..” தள்ளாடியபடியே சின்ன அய்யா வும் கிணற்றடிக்கு வந்தார்….. தொடர் மழையினால் கிணறு நிரம்பி இருந்தது.
கடையில் சூடாக டீ ஆற்றி, குடித்திக் கொண்டிருந்தார் பாண்டி. என்னைப் பார்த்து..”மழைக்கு நல்லாயிருக்கும் குடிங்க..” என்று அருகில் வந்தவர், “என்ன முகத்துல கீறி இருக்கு…?” என்றார்.
போர்வையில் இருந்த பாசியைக் காட்டினார்…கடைக்கு வரும் வழியில் வாய்க்கால் கல்வெர்ட்டில் தடுக்கி விழுந்ததாக சொன்னதை ஏற்காமல் என் முகத்தைப் பார்த்தபடி டீ டம்ளரை நீட்டினார் … இரண்டே மடக்கில் டீயைக் குடித்து, சில்லறையைக் கொடுத்து, எழுந்து நடந்தேன்…இடது கால் முட்டி வலி உயிர் போனது…துணியை விலக்கிப் பார்த்தேன்..இரத்தம் வழிந்து உறைந்திருந்தது…திரும்பிப் பார்த்தேன்..தூரத்தில் பாண்டியன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார் …கண்டு பிடித்திருப்பாரோ …? நடையை வேகப்படுத்தினேன்… மூச்சு வாங்கியது எனக்கு….இருந்தும் நில்லாது ஓடினேன் நான்.
காலையில் மழை ஓய்ந்திருந்தது. குளிர்ந்த காற்று வீசியது.
போலீஸ் ஜீப் நின்று கொண்டிருந்தது. கூட்டம் கூடி இருந்தார்கள். வைத்தியரிடம் இன்ஸ்பெக்டர் விசாரித்துக் கொண்டிருந்தார்… வேகமாக உள்ளே செல்ல முயன்ற என்னை போலீஸ் தடுத்து விட்டார்…வைத்தியர் போலீசிடம், “ஆமாங்க..ஒரே மழை…பெரிய அய்யா வும் சின்ன அய்யா வும் பெரிசா சத்தம் போட்டுக்கிட்டு இருந்தாங்க…வழக்கமா நடக்கிறது தாங்க…சரி, தூங்கிப் போயிருப்பாங்கன்னு நினைச்சேனே…” துண்டால் வாயை மூடிக்கொண்டார்.
கிணற்றுக்கு பக்கத்தில், அந்த பாசி படர்ந்த இடத்தில் இருவர் உடலையும் கிடத்தி இருந்தார்கள். இன்ஸ்பெக்டர் என் பக்கம் திரும்பிப் பார்த்தவுடன், “இந்தாளு வேலைய முடிச்சுட்டு போயிட்டாருங்க..” என்றார் வைத்தியர். என் கையை பக்கத்தில் இருந்தவர் அழுத்திப் பிடித்தார்…திரும்பிப் பார்த்தேன் .. டீக்கடை பாண்டியன்.
இருவரும் தலையைக் குனிந்து, “பெரிய அய்யா, சின்ன அய்யா..” என்று முனகினோம்.
முற்றும்.