படைப்பாளர்: அனுஷாடேவிட்
“மூச்சு வாங்கியது எனக்கு. இருந்தும் நில்லாது ஓடினேன் நான். உயிர் மேல் ஆசை தான். குடும்பத்தில் நிறைய இழப்புகளை சந்தித்தவன். நானே மூத்தவன்.
அந்த வீடு கொஞ்சம் பெரிய வீடு தான். ஒளிந்து கொள்ள நிறையவே இடம் இருந்தது. ஆனால் என்னை துரத்திக்கொண்டே வந்தவன் கைகளில் இருந்ததை பார்த்து உயிர் பயம் தொற்றிக்கொண்டது.
என் அப்பா அம்மா தங்கச்சி எல்லாரையும் தனித்தனியே ஒளிந்து கொள்ள அறிவுறுத்தி நானும் ஒரு பக்கமாக மூச்சு வாங்கியபடி ஓடினேன்.
அது அன்னம் தயாரிக்கும் அறை போலும். நாசியிலிருந்து தள்ளி இருந்த நீண்ட இரு சென்சார்களின் நரம்புகள் அன்னத்தின் வாசனையை நிரம்ப செய்ய உண்ணும் ஆசை எழுந்தது.
நகர எத்தனித்த நொடி நிழலாடியது நிமிர்ந்து பாராமலே அது அவனின் மனைவி என்று புரிந்தது. மிழிகள் முழுவதும் சுற்றி சுழற்றி என்னால் பார்க்க முடியுமே.
அன்னநடை பயின்று கதவின் பின் ஒளிந்து கொண்டேன். தேடி வந்தவள் மனம் தேய்ந்து வெளியேறினாள். நான் மெதுவாக வந்து அன்றைக்கு அவள் சமைத்த ரொட்டியையும் அதற்கு தொட்டுக்கொள்ள வைத்த பன்னீரையும் ஒரு பிடி பிடித்தேன்.
ரொட்டி தான் கடிக்க சிரமமாக இருந்தது. சிறு சிறு வில்லைகளாக துண்டாக்கி ருசித்து கொண்டிருந்த என்னை நோக்கி பூநார் ஒன்று வேகமாக வந்தது. அனிச்சை செயலாக என் முதுகில் இருந்த சிறகுகள் சடாரென்று நீட்டி என்னை பறக்க செய்து என்னை காப்பாற்றி விட்டது.
சிறகுகள் இருப்பதால் நான் தேவதை என்று நினைத்து விடாதீர்கள்.
பறந்து சென்று படுக்கையறையில் தஞ்சம் புகுந்தேன். பேச்சு குரல் கேட்டது.
“ஏண்டி இவ்வளவு கோவமா இருக்க? விடு பாத்துக்கலாம்” என்ற ஆணின் குரல் அவளின் கணவன் என்று புரிந்து கொண்டேன்.
“சும்மா இருங்க கிஷோர். நான் குளிச்சிட்டு இருந்தேன். கண்ணாடி திரையில் யாரோ எட்டி பாக்கிற மாதிரி இருந்தது. பயந்து அரைகுறையா குளிச்சிட்டு அரைகுறையா வந்து நின்னா நாலு பேர்… அலறி அடிச்சு வெளியே ஓடி வந்து டிரெஸிங் ரூம் லாக் பண்ணிட்டு இங்கு எவ்வளவு நேரம் டோர் பக்கத்திலேயே நின்னேன் தெரியுமா? நீ வர வரைக்கும் எனக்கு உயிரே இல்லடா” என்று சிணுங்கினாள் சீமாட்டி.
“சரி சரி விடு. அதான் நான் வந்துட்டேனே” என்றவன் கைகள் அவளை அணைத்துக்கொண்டன.
மிழிகள் நான்கும் ஊடுருவி பார்க்க இதழ்களோ இதழோடு ஒட்டி உறவாடி மெய்மறந்து இதழில் கவிதை எழுதிக்கொண்டிருந்தன.
‘அடேய்களா உங்கள் ரொமான்ஸை அப்புறம் வச்சிகோங்க. இப்ப எனக்கு போக வழி விடுங்கடா’ என்ற என் சத்தம் காற்றில் தேய்ந்து போனது அவர்களின் இதழ் சண்டையில்.
ஒரு வழியாக அவர்கள் மோன நிலையில் திளைக்கும் சமயம் நைஸாக வெளியே வந்தேன். என் தங்கைக்கு பன்னீர் ரொம்ப பிடிக்கும். அவள் எங்கே இருக்கிறாளோ என்று எண்ணி தேடினேன்.
குளியலறை உள்ளே நுழைந்தேன். தேடும் மனதோடு பயமும் பரவி இருந்ததால் கவனம் தடுமாறி பாத்டப்பில் விழுந்து விட்டேன். அச்சோ நீச்சலும் தெரியாதே! எப்படியோ 20 நிமிட
போராட்டத்திற்கு பின் வெளியே வந்து ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டேன்.
குளியலறையில் அவள் இல்லை என்றதும் வெளியேறி மீண்டும் உணவறைக்கு அன்னநடை பயின்றேன். அங்கு தான் மூவரும் உண்டுக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்களோடு ஐக்கியமாக செல்ல ஒரு கடி எறும்பு ஒன்று என் கால்களை கடித்து விட்டது. காலிலுள் ரோமங்கள் முட்களாக குத்திட்டு எழுந்தன.
வலி தாங்காமல் உதறினேன் ம்ஹூம் கெட்டியாக பிடித்திருந்தது. மற்றொரு காலால் அதை அழுத்தி கீழே இழுத்து போட்டேன். அந்த கோவத்தில் ரிப்லெட் சிற்றெரும்பு என் மீது அதன் தாக்குதலை தொடங்க வன்தகடால் மூடியிருந்த அதன் அடிவயிற்றில் இருந்து பியூட்ரிக் அமில
திரவத்தை என் மீது உமிழ தொடங்கும் நேரம் நான் சுதாரித்து நகர்ந்து விட்டேன். இல்லையென்றால் அதன் நாற்றம் என் நாசியை நிறைத்து உமட்டி என்னை நிலைகுலைய செய்யும்.
என் தங்கையின் தலையை பரிவோடு தடவிக்கொடுத்தேன். அவள் ஆசையாக பன்னீரை வில்லைகளை உண்டுக்கொண்டிருந்தாள். நால்வரும் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு பாத்திரங்களை சிங்க்லேயே அலம்பாமல் போட்டு விட்டு எங்கள் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானோம்.
உணவறை கடந்து வெளியே வந்தபோது வசமாக மாட்டிக்கொண்டோம். ரசாயன வாயு திரவம் ஒன்றை எங்கள் மீது தெளிக்கப்பட நானும் அம்மா அப்பாவும் மூச்சை தன்னகத்தே அடக்கி வைத்துக்கொண்டே ஓடினோம். எங்கள் அனுபவம் எங்களை 40 நிமிடம் வரை மூச்சடக்கி வைக்க
பழக்கியிருந்தது.
அந்தோ பரிதாபம்! என் தங்கைக்கு பழக்கம் இல்லாததால் ரசாயனம் கலந்த வாயு திரவத்தை சுவாசித்து மூர்ச்சையாகி மயங்கி கிடந்தாள். பெண்ணவளை அப்படி காண மனம் சகிக்கவில்லை.
துறுதுறுவென்று அங்கும் இங்கும் ஓடியவள் இப்படி பேசாமடந்தையாக கசங்கிய துணி போல கிடக்கிறாள்.
அப்படியும் அவர்கள் கோவம் அடங்கவில்லை போலும். அவளின் தலையை துண்டித்து வெறி பிடித்தாற் போல சிரித்தாள் சீமாட்டி. தலையிலிருந்து வெண் குருதி வழிந்தோடியது. அவளை
டிஸ்போஸ் செய்ய யோசனை செய்து அவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் தலையின்றி கிடந்த என் தங்கையை இழுத்துக்கொண்டு ஸ்டோர் ரூமிற்குள் நுழைந்தோம்.
சொல்லொண்ணா துயரம். தலைதான் இல்லையே அன்றி அவளால் எங்கள் உணர்வுகளை உணர்ந்துக் கொள்ள முடிந்தது. ஆம்! அவளின் வயிற்றிலுள்ள நுண்ணிய நரம்புகளின் மூலம் சுவாசம் பெற்று இன்னும் உயிருடன் தான் இருந்தாள். இரண்டு வாரம் வரைக்கும் அவளால்
எங்களோடு இருக்க முடியும். அதன் பிறகு எங்களை விட்டு ஒரேயடியாக போய் விடுவாள். நான் தேம்பி அழுவதை கண்டு என் அப்பாவும் அம்மாவும் என்னை தேற்ற முனைந்தார்கள்.
மூவரும் உறுதிப்பூண்டோம் தங்கையைக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பது என்று. அதற்கான திட்டங்களை கட்டம் கட்டி திட்டம் தீட்டி அதன் படி கொலை செய்யலாம் என்று வெளியேறி வந்தோம்.
உணவறையில் பேச்சுச் சத்தம் கேட்டது. அவர்கள் அங்கு தான் இருக்க வேண்டும். மெதுவாக மறைந்து மறைந்து ஓரிடத்தில் ஒளிந்து கொண்டோம்.
கணவனும் மனைவியும் கொஞ்சியபடி பால் பாயாசம் செய்து கொண்டிருந்தார்கள். என் தங்கைக்கு பிடித்த இனிப்பு. அழுதேன். சத்தம் கேட்டதோ என்னவோ திரும்பி பார்த்தார்கள். என்னை தேற்றிக் கொண்டு நன்றாக ஒளிந்து கொண்டேன்.
பால்பாயாசம் தயாரானதும் உணவறைக்கு வெளியே இருக்கும் மேஜையில் கொண்டு வந்து வைத்தாள் சீமாட்டி.
“சீமா நான் ப்ரெஷ் ஆகிட்டு வந்துரேன். நீயும் ரெடியாகி இரு” என்றவாறு கணவனவன் அறைக்குள் நகர்ந்தான். பின்னோடு சீமாட்டியும் குலாவியபடி அவனை உரசிக்கொண்டு போனாள்.
இதுதான் சமயம் என்று நான் பாயாசம் வைத்திருந்த பாத்திரத்தை திறக்க மூவரும் பாக்டீரியாக்கள் நிறைந்த குயினோனை அதிகளவில் கலந்தோம். திருப்தியுடன் அங்கிருந்து நகர்ந்து ஸ்டோர் ரூமில் இருக்கும் தங்கையின் அருகே அமர்ந்து அவளிடம் பேசினேன்.
‘உன்னோடு சேர்த்து நம்ம வீட்டில் மொத்தம் 11 பேருடா தங்கம் எல்லாரும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் நம்மள விட்டு போய்டாங்க. மிஞ்சி இருக்கது நீயும் நானும் தானு செல்லமா பாத்துகிட்டாங்க. இப்ப நீயும் இல்லாமல் நான் என்ன செய்வேன்?’ என்று அழ தொடங்க
வெண்குருதி வடிய மெதுவாய் நகர்ந்து வந்து என் கைகளை பற்றிக் கொண்டாள் பாச தங்கை.
வெளியே இருவரும் பால் பாயாசத்தை ரசித்து கொண்டே மிழிகளால் ஒருவரையொருவர் விழுங்கிக் கொண்டிருந்தார்கள். அதனைப் பார்க்க என் பாச வயறு பற்றியெறிந்தது. இன்னும் கொஞ்சம் நேரம் தான் எப்படி அலறி அடித்து ஓடுகிறார்கள் என்று பார்ப்போம் என்று நினைத்து
கொண்டு வேடிக்கை பார்த்தோம் ஒரு ஓரமாக நின்று. அருந்தி விட்டு எழுந்தவனை கைகளை பிடித்து இழுத்து தன் மடியில் அமர வைத்த சீமாட்டி “டார்லிங் நாளைக்கு தீம்பார்க் போகலாமா?” என்று கொஞ்சி அவனது சட்டையை திருக்கியபடி வினவினாள்.
“போலாம்டி தங்கம் அதுக்கு முன்ன எனக்கு ஒன்னு வேணும்” என்று கன்னத்தை காட்டினான்.
வெட்கம் பூக்க அவள் கன்னம் நெருங்கிய நொடி திரும்பியவன் இதழ்களில் குறுநகை பூத்தது.
சடாரென்று அவனை தள்ளி விட்டு எழுந்து நின்ற சீமாட்டி ஓட்டம் பிடித்தாள் கழிப்பறை நோக்கி.
எழுந்தமர்ந்த கணவன் கிஷோர் ‘என்னவாயிற்று இவளுக்கு?’ என்று வினவிய அடுத்த நொடி இவனும் ஓட்டம் பிடித்தான். வேறெங்கு கழிப்பறைக்கு தான்.
“டொக் டொக்
டொக் டொக் டொக்
தட் தட் தட் தட் தட்” என்று வேகமாக தட்டினான். அவ்வளவு பெரிய வீட்டில் கழிப்பறை ஒன்று இருந்தது தான் அவர்களின் துரதிர்ஷ்டமே.
சிறிது நேரத்தில் இருவரும் சண்டையிட்டு கொண்டார்கள். அவர்களால் கட்டுப்படுத்த முடியாத உணர்வல்லவா. என் செய்வது? அவர்களால் அழுத்தம் தாங்க முடியாமல் மாற்றி மாற்றி ஒருவரையொருவர் அடித்து காயம் ஏற்படுத்தி வீடெங்கும் நாஸ்தி செய்து நாற்றம் எடுத்தது.
கழிவறை அருகில் இருந்த மேஜையில் காலியான பீர் பாட்டில் கவலையுடன் அமர்ந்திருக்க அதை உடைத்து பாட்டிலின் பீங்கானை எடுத்து அதீத கோவம் கொண்ட சீமாட்டியின் சீமனவன்
சீவினான் அவளது தலையை. செங்குருதி எங்கும் சிதற அந்த இடமே களேபரமாக காட்சியளித்தது. தன் தவறின் விபரீதம் புரிய அதே பாட்டில் பீங்கான் கொண்டு தன்னைத்தானே வயிற்றில் குத்தியவன் சீமாட்டியின் அருகிலேயே மடங்கி விழுந்தான்.
இதற்காகவே காத்திருந்த நான் எங்கள் குலத்தின் ஆதி குல வாசிகளை அழைத்து கொண்டு வர ஆறு கால் பாய்ச்சலில் ஓடினேன். அவர்களுக்கு விருந்து படைத்தேன் நரமாமிசங்களை.
அந்த இரவுக்குள் வீட்டில் உள்ள அனைத்தையும் சூறையாடி ஒன்றும் இல்லாமல் ஆக்கி எங்கள் குலத்தை தழைக்க செய்ய சபதம் எடுத்தபடியே செய்து முடித்தேன். ஆனந்த களிப்போடு நானும் தலையில்லா என் தங்கையும்.
பல்லுக்கு பல். பழிக்கு பழி. உயிருக்கு உயிர். எங்கள் குலப் பெயரை காப்பாற்றி விட்டேன்.
அப்புறம் இன்னொரு விஷயம் எங்கள் குலத்தோட பேர் சொல்லலயே? சொல்றேன் கேளுங்க”
கரப்பான் பூச்சி!
முற்றும்.