படைப்பாளர்: ருக்மணி வெங்கட்ராமன்
மூச்சு வாங்கியது எனக்கு, இருந்தாலும் நில்லாது ஓடினேன் நான்.
நாய் ஊளை இட்டது. ‘நாய்களின் கண்களுக்கு பேய் நன்றாகத் தெரியும் ‘ என்று எப்பவோ அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. நிச்சயமாக ஒரு பேய் தான் துரத்துகிறது. திரும்பி பார்க்க பயம்.
திரும்பி பார்க்காமல் செல்போனால் படம் எடுத்தால் என்ன?
மனசாட்சி கூறியது ‘உன் கேமரா ஒளி பட்டதும் அதற்கு இன்னும் கோபம் அதிகமாகி ஏதாவது ஏடா கூடமா செஞ்சா..!’ நினைக்கும் போதே உடம்பு வேர்த்து கொட்டுகிறது. அடுத்த நிமிடமே பயம் என்னை செய்ய விடாமல் தடுத்தது.
துரத்தின உருவம் மனசில வந்து இன்னும் கொஞ்சம் பயத்தை அதிகரிக்கச் செய்தது. அந்த உருவம் என்னைத் தாண்டி போன போது பார்த்ததும் பயமா இருந்தது.கருப்பு கலர்ல முக்காடு. கண்களை எங்கே என்று தேட வேண்டும். கண்கள் இருக்க வேண்டிய இடங்களில் குழி தான் கண்ணுக்குத் தெரிந்தது. அதை கடந்து விட்டோம் என்று நினைத்த போது தான் பேய் என்னைக் கூப்பிட்டது காதில் விழுந்தது.
“நளினி..! “என்று என் பெயரைச் சொல்லி பின்னாடியே வந்ததும், பிடித்த ஓட்டம் இன்னும் நிற்கவில்லை.
இரண்டு நாட்கள் தான் இன்னும் இருக்கு பரிட்சை ஆரம்பிக்க . கூட படிக்கிற பொண்ணு வீட்டில், அவளுடன் சேர்ந்து படித்து விட்டு வரும் போது தான் பேய் கிட்ட மாட்டிக்கிட்டேன்.
‘இரவு பன்னிரண்டு மணிக்குத் தான் பேய்கள் நடமாடும் என்று பாட்டி சொல்வாங்க’ இப்ப மணி பத்து தான் ஆகிறது. ஆனால் என்ன..! தெரு விளக்கு சில இடங்களில் எரியவில்லை. ஒரு சில இடங்களில் கண் சிமிட்டுகிறது. ஒரு வேளை பேய்க்கு மணி தெரியலையோ..! ஹி..ஹி…! பேய் துரத்தும் போது என்ன சிரிப்பு வேண்டி இருக்கு.
ஒரு வழியாக இரண்டு வீதிகளையும் ஓட்டமா ஓடி கடந்து, வீட்டிற்கு வந்தாச்சு.
“அம்மா..! கதவை திற மா சீக்கிரம். பேய் கிட்ட இருந்து தப்பி ஓடி வரேன்.”
நளினி அம்மாவிற்கு பேய் என்ற வார்த்தைக் கேட்டதும் பயம் தொற்றிக் கொண்டது. கையில் துடப்பக்கட்டையுடன் கதவைத் திறந்து நளினியை உள்ளே இழுத்துக் கொண்டார்.
“என்னடி ஆச்சு..! நீ என்னென்னமோ சொல்ற. புரியும் படி சொல்லு.”
“அம்மா..! பேய் என்னைத் தாண்டி போச்சு. பயத்தில் அப்படியே உறைஞ்சு போய் ஒரு நிமிஷம் நின்னேன். சுதாரிச்சுக்கிட்டு வேகமாக வந்தா என் பேரைச் சொல்லி கூப்பிட்டுக் கிட்டே பின்னாடியே ஓடி வருவது.”
சிறிது நேரத்தில் கதவை யாரோ தட்டினார்கள்.”அம்மா.. பேய் வீட்டை கண்டு பிடித்து விட்டது. போச்சு.. எல்லாம் போச்சு..”
இருவரும் சாமி ரூமில் உட்கார்ந்து கொண்டு கந்தசஷ்டி சொல்ல ஆரம்பித்தனர்.
கதவை திறக்காம போனாலும் உள்ளே வரும். “ஏம்மா..! கதவைத் திறந்து அது கிட்ட சமாதானம் பேசலாமா?” எனக் கேட்டாள் நளினி.
“போடீ..! கூறு கெட்ட குப்பாயி.. “
கதவை தட்டும் சத்தம் அதிகரித்தது.
நளினியின் தம்பி கதவை திறந்து விட்டான்.
“டேய்…! ஏண்டா கதவை திறந்த?”
கதவிற்கு வெளியில் ஒரு உருவத்தைப் பார்த்தான்.
“தம்பி…! இந்தாங்க இந்த புத்தகத்தை பிடிங்க. இந்த வீட்டு பொண்ணு பையில் இருந்து கீழே விழுந்தது. நான் எடுத்துப் பார்த்தேன். புத்தகத்தில் நளினி என்று பெயர் எழுதி இருந்தது. கூப்பிட்டு கிட்டே பின்னாடி வந்தா, அந்த பொண்ணு ஓட ஆரம்பித்தது.”
கொடுத்து விட்டு அவங்க திரும்பி போக ஆரம்பிச்சாங்க.
“அம்மா..! நில்லுங்க..மா. மிக்க நன்றி மா. வாங்க உள்ளே..!உட்காருங்க.”என்றாள் நளினி.
“என் பெயர் உமா. என் முகத்தை பார்க்காமலே நீங்க பயந்து ஓடினீங்க. இப்ப முகத்தைப் பார்த்தா பயந்திடுவீங்க. தீ விபத்தில் என் முகம் கருதிப் போச்சு. யாரும் பயப்படக் கூடாது என்று முகம் முழுவதும் மூடிக்கிட்டு வேலைக்குப் போவேன். ராத்திரி தானே என்று முக்காடு மட்டும் போட்டு இருந்தேன். நான் வேலைக்கு போயிட்டு திரும்பும் போது உங்க பையில் இருந்து புத்தகம் கீழே விழுந்ததைப் பார்த்தேன். அதைக் கொடுக்கத் தான் கூப்பிட்டேன்.”
நளினியின் அம்மா பழச் சாறு கொடுத்ததைக் குடித்து விட்டு பாரதியார் பாடலைப் பாடிக் காட்டினார்.
‘அஞ்சிஅஞ்சிச் சாவார்—இவர்
அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே!
வஞ்சனைப் பேய்கள் என்பார் –இந்த
மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்;
அஞ்சுது முகட்டில் என்பார்—மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.’
வருகிறேன்”என்று உமா புறப்பட்டார்.
“குழந்தையில் இருந்து பேய் கதைகளைக் சொல்லி பயத்தை விதைச்சிட்டீங்க. இனி எதற்கும் பயப்பட மாட்டேன்.”என்றாள் நளினி.
நளினியின் தம்பி “அக்கா… எப்படி பேயைப் பார்த்து ஓடின..! ஒரு தடவை ஓடிக் காட்டு..!” என்று கேலி செய்தான்.
அக்கா அவனைத் துரத்த அவன் ஓட வீடே களைக் கட்டியது.
முற்றும்.