திகில் போட்டிக் கதை: பேய் கிராமம்!

by admin 1
75 views

மூச்சு வாங்கியது எனக்கு. இருந்தும், நில்லாது ஓடினேன்.
ஓடினேன்… ஓடினேன்… ஓடினேன்… ஓடிய ஓட்டத்தில் சிந்திய வியர்வையால் குளித்திருந்தேன். இதயம் இடிவாங்கியதுபோல அதிர்ந்து லப்டப் லப்டப் என்று உள்ளுக்குள் கதகளி ஆடிய படி எகிறி எகிறி துடிதுடித்து கொண்டிருந்தது. தானாடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்களே! உண்மைதான்.

உடலில் தசை நரம்பு எலும்பு ரத்தம் எல்லாம்  நிலநடுக்கம் ஏற்பட்டது போல ஆடியது. வாயில் காற்று வந்தது ஆனால் பேச்சு வரவில்லை.
கண்ணில் இமை திறந்து இருந்தது. ஆனால் பார்வையில் எதுவும் தெரியவில்லை. அது நடுநிசி இரவு. எங்கும் கும்மிருட்டு. இருளைக்களைத்தபடி திரும்பிய பக்கமெல்லாம் புகை மூட்டம்.
ஆற்றோர நாக மரத்தில் ஆந்தைகள் அலறின.


ஊரின் எல்லையில் இருந்த சுடுகாட்டில் இருந்த ஈச்சமரத்தில் இருந்து கிளம்பி என்னை விரட்டி வந்த அந்த பேரூருவமும் பெரிய இரைச்சல் சத்தத்துடன் வானில் ஈசானிய மூலையில் மேலே எழுந்து வானம் நோக்கி உயர்ந்தது. என் கையில் இருந்த செல்போன் கேமராவில் வீடியோ பதிவாகி கொண்டிருந்தது. செல்போனை இறுக பிடித்து கொண்டு ஓடி வந்தபடி இருந்தேன்.

பேய் கிராமத்தின் அமானுஷ்யங்களைப் படம்பிடித்து அந்த வீடியோக்களை என்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டால் லைக்கும் ஷேரும் அள்ளும் என்று நினைத்து விபரீதத்தில் மாட்டிக்கொண்டேனோ என்று திகைத்தேன்! ஆமாம்! தெரிந்தே தான் மாட்டிக்கொண்டேன். இந்தக்கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக தினந்தோறும் பேய்கள் வந்து கிராமத்தின் எல்லையில் இருந்த குடிசை வீடுகளை ஒவ்வொன்றாக எரித்துக்கொண்டிருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

500 வீடுகளில் இதுவரை 300 வீடுகளை பேய்கள் எரித்துவிட்டன. இந்த மர்மங்களையும் பேய்களின் அமானுஷ்ய வெறியையும் ரகசியமாய் படம்பிடித்து காட்ட இந்த ரிக்ஸ் எடுத்துவிட்டேன்! அப்பாடா! இதோ ஊர் எல்லையில் இருந்து கொஞ்சம் தொலைவு கடந்து வந்து விட்டேன்.

பக்கத்தில் ஆறு. அதை கடந்து விட்டால் வயல் வெளி வந்து விடும்.கொஞ்ச தூரம் போனால் ஊர்த் தெரு வந்து விடும் என்று நினைத்தபடி ஓடி வரும் போதுதான் எதிரே…
தூரத்தில் சட்டென்று அந்த  அமானுஷ்ய உருவம் என்னை நோக்கி வந்தது.
அதைப் பார்த்த கணமே… செல்போன் கேமராவை அதன் பக்கம் திரும்பினேன். திடீரென வீசிய காற்றில் நான் பொத்தென்று வேரறுந்த மரம் போல விழுந்தேன். செல்போன் சற்று தூரத்தில் விழுந்தது.
விழுந்தவன் மயக்க நிலைக்குப்போனேன்.பொழுது விடிந்தது.

வயல்வெளியில் கிடந்தேன் நான். வயல்வெளிக்கு வந்த கிராமத்தினர் என்னை எழுப்பினார்கள். சுயநினைவு பெற்றேன். பக்கத்தில் கிடந்த செல்போன் சார்ஜ் குறைந்து சுவிட்ச் ஆப்பாகி இருந்தது. அதை எடுத்துக்கொண்டேன். வந்தவர்கள் என்னை ஊருக்குள் அழைத்துச்சென்றனர். எதற்காக நடுஇரவில் ஊர் எல்லையில் இருந்தாய்? நீ யார்? நோக்கம் என்ன என்றெல்லாம் கேட்டார்கள்.


நான் யூடியூபர் என்றும் இரவு நடந்தது எல்லாம் விவரித்தேன்.
போகும் வழியில் பேய் கிராமத்தைப்பற்றி என்னுடன் வந்தவர்களிடம் விசாரிக்கத்தொடங்கினேன். இந்தக்கதையை படிக்கும் நீங்களும் சேர்ந்தே கேட்டுகுங்க. அந்த பேய்கிராமம் நகரத்தை ஒட்டி இருந்தது. மூன்று மாதமாய் அங்கே எதிர்பாராத விதமாய் ஒவ்வொரு நாளும் திக்… திக்.. திகில்கள் அரங்கேறி கொண்டிருந்தன. ஒவ்வொரு கணமும் அடுத்தடுத்து என்ன நடக்கும்? ஏது நடக்குமோ? என்ற அச்சத்தில் கிராம மக்கள் மரணபயத்தில் இருந்தனர்.


முதலில் அந்தக் கிராமத்திற்கு பத்து போலீசார் காவலுக்கு சென்றனர். பின்னரும் அந்த மர்மம் தொடரத்தான் செய்தது.அடுத்ததாக, தெருவுக்கு பத்து போலீசார் காவல் காத்தும் கூட, அந்த அசம்பாவிதனத்தை தடுத்து நிறுத்த முடிய வில்லை.இறுதி கட்டமாக, வீட்டுக்கு வீடு போலீசார் காவல் இருந்தும் தினம் தினம் அரங்கேறும் அந்த மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியவில்லை.


இன்ஸ்பெக்டர் தேவா துப்பறிவதில் திக்கு முக்காடி போனார். மூன்று மாதமாய் தூக்கம்கெட்டு, என்னன்னவோ வழியிலும் புலன் விசாரணை செய்தும், அவரால் இந்த சவாலான கேஸில் ஒரு படிக்கூட முன் செல்ல முடியவில்லை.விடிய, விடிய கிராமத்தை ரவுண்ட் வந்த  இன்ஸ்பெக்டர் தேவா, அதிகாலையில் தான் ஸ்டேஷனுக்கு வந்தார்.கண்கள் பவளம் போல சிவந்திருந்தது. உறக்கம் இமையில் உட்கார்ந்து தேவாவை
நித்திரையில் கொஞ்சம் அக்கறை செலுத்த சொல்லியது.


அப்படியே டேபிளில் கவிழ்ந்து விட்டார்  இன்ஸ்பெக்டர் தேவா.
பதறியடித்து வந்த ஏட்டு சீனு,  இன்ஸ்பெக்டர் தேவாவை உழுக்கி, “ சார்,சார்! தெற்கு தெருவுல தொடர்ந்தாப்ல மூன்று வீடுகள் தீப்பற்றி எரியுது சார். தீயணைப்பு காரங்க தீயை அணைச்சுக்கிட்டு இருக்காங்க.” என்று சொல்லிய சீனு பிரம்மை பிடித்திருந்தார். தினம் தினம் இந்த செய்தியைக் கேட்டு, கேட்டு இன்ஸ்பெக்டர் தேவா உக்கிரத்தின் உச்சத்துக்கே போனார்.


டென்ஷனில் கொதித்துப் போனவர், “ என்னைய்யா இந்த கிராமத்துல நடக்குது? ஒண்ணுமே புரியமாட்டேங்கிறது! எவனோ ஒருத்தன் என் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிக்கிட்டு இருக்கான். சும்மா விடமாட்டேன். பார், பிடிச்சு காட்டுறேன்.” சொல்லியவர், கொதித்துப்போனார், “ சரி, வாங்க சீனு, ஸ்பாட்டுக்கு போகலாம்” என்று இன்ஸ்பெக்டர் தேவா சொன்னதும் பின் தொடர்ந்தார்,  ஏட்டு சீனு.
அந்த வீடுகள் பாதி எரிந்து சாம்பலாயிருந்தன.


அக்கம் பக்கம் வீடுகளில் இருப்பவர்களையும், அந்தந்த வீடுகளுக்கு காவல் இருந்த போலீசாரிடம், “ சந்தேகம் படியான ஆள் நடமாட்டம் இருந்ததா? புதிய மனிதர்கள் யாராவது வந்தார்களா?” என்று தேவா விசாரித்ததில், எல்லாருமே சொன்ன பதில், ‘‘இதோ, இந்த தம்பிதான் புதுசு. பேரு சிவசண்முகம். யூடியூப் சேனல் வைச்சிருக்காம். இந்த கிராமத்தின் அமானுஷ்யங்களை, பேய்களின் நடமாட்டத்தை வீடியோ எடுத்து போட நேற்று இரவு வந்திருக்கு.

என்னத்தையோ பார்த்து அரண்டு மயக்கிட்டுபோல. காலையில நாங்கதான் ஊருக்குள்ள கூட்டிவந்தோம்’’ என்றனர்.
சிவசண்முகத்தை ஸ்டேஷனுக்கு அழைத்துச்செல்ல கூட வந்த ஒரு ஏட்டிடம் கட்டளையிட்டார் இன்ஸ்பெக்டர் தேவா.“ ச்சே! என்னைய்யா மாய மந்திரமா இருக்குது? இந்த கிராமத்தில் மட்டும் திடீர் திடீர்ன்னு வீடுகள் அதுவா தீப்பிடிச்சு எரிகிறது? எவனும் தீ வைக்காம எப்படியா இது சாத்தியம்?” தன் நெஞ்சில் இருந்த ஆத்திரத்தை எல்லாம் கொட்டித்தீர்த்து விட்டு, ஏட்டு சீனுவிடம் ஊரில் இருந்து விசாரித்து விட்டு வருமாறு சொல்லி விட்டு ஸ்டேஷனுக்கு கிளம்பினார்.


இன்ஸ்பெக்டர் தேவா, சிவசண்முகத்தை விசாரித்தார்.
விசாரணையில் அவருக்கும் அந்த பேய்கிராமத்தில் வீடுகள் எரிவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. அவரது செல்போனில் நேற்று இரவு பதிவான வீடியோ பதிவுகளைப்பார்த்தார். பதிவான காட்சிகள் எல்லாம், யாரோ திட்டமிட்டு நாடகம் நடத்தியதுபோலவே இருந்தது. அவை எதுவும் அமானுஷ்யங்கள் இல்லை. பேய்களும் இல்லை என்பது புரிந்தது இன்ஸ்பெக்டர் தேவாவுக்கு.


மதியம். ஏட்டு சீனு ஸ்டேஷனுக்கு வந்தவர், “ சார், இந்தக் கிராமத்துல வீடுகள் அதுவா தீப்பிடிச்சு எரிய காரணம் தெரிஞ்சுடுச்சு, சார். இந்த ஊரு பூசாரி மேல பிடாரி அம்மன் ஏறி குறிசொல்லி இருக்கு. இந்தக் கிராமத்துல இருப்பவங்க தெய்வ குத்தம் செஞ்சுட்டாங்களாம். அதனால தான் 48 வகையான பேய், பிசாசுங்க கிராமத்துல இருக்கிற வீட்டை எல்லாம் மர்மமான முறையில கொளுத்திக்கிட்டு இருக்காம். இதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாதுன்னு அந்த பூசாரி சாமியாடிருக்கான்” என்ற ஏட்டு சீனுவின் முகத்தில் ஒரு திருப்தி தவழ்ந்தது.


இதைக் கேட்டதும்  இன்ஸ்பெக்டர் தேவா, “ அப்படியா? அப்போ இது பேய்கள் நடமாடும் கிராமமா? போய்யா… இந்த விஞ்ஞான யுகத்துல பேய்… பிசாசுன்னு” என்ற  இன்ஸ்பெக்டர் தேவா,
யோசனையில் ஆழ்ந்தார்.ஏட்டு சீனு சொன்னதில் ஏதோ பொறி தட்டியது.சட்டென்ற சுதாரித்துக்கொண்டவர்,“ அப்பாடா இப்பதான்யா சரியான எவிடன்சே சிக்கி இருக்கு.இப்ப பாரு நான் பூசாரிக்கிட்ட பேய் ஆடி எல்லா மர்மத்துக்கும் முற்றுபுள்ளி வைக்கிறேன். போய் அவனை கூப்பிட்டு வாங்க.” என்றார்.


பூசாரி குறிசொன்ன கணத்திலிருந்து கிராம மக்கள் பேய் கிலிபிடித்து திரிந்தனர். இரவு எட்டுமணி இருக்கும் ஸ்டேஷனுக்கு பூசாரியை அழைத்து வந்தார், ஏட்டு சீனு. லாக்கப்பில் பூசாரிக்கு அடி,உதை சரமாரியாக விழுந்தது.வலிதாங்க முடியாமல் முணகி பூசாரி, இனியும் விஷயத்தை மறைத்தால் தர்ம அடியில் உயிரே போனாலும் போயிடும் என்று முடிவுக்கு வந்தவர், அந்த விஷயத்தை கக்கினார்.
பின்னர்,  இன்ஸ்பெக்டர் தேவா துரிதமாக விசாரணையைத் தொடங்கினார்.


“ சீனு, ஆறுமாசத்துக்கு முன்னால இந்த கிராமத்து எல்லையில் இருக்கும் குடிசைகள் வீடுகள் உள்ள ஒட்டு மொத்த பகுதியையும் விலைக்கு வாங்கி, ஏதோ பேக்டரி கட்ட யாரோ வந்து இருந்தாங்களாமே?”
“ ஆமாம் சார். வந்தவங்க ,அடிமாடு விலைக்கு கேட்டா யாரு கொடுப்பாங்க. அதான் வந்த வழியே போயிட்டாங்க”
“அப்படியா?” என்ற  இன்ஸ்பெக்டர் தேவா, போனில் அந்த நம்பரை டயல் செய்தார்.மறுமுனையில்“ ஹலோ! மாதேஷ் பேசறேன்”
“ மாதேஷ், இன்ஸ்பெக்டர் தேவா பேசறேன்.

சின்ன பிராப்ளம்.”என்றவர், கிராமத்தில் நடந்த சம்பவங்களை சொன்னார்.“நான் ஒருகெமிஸ்ட்டிரி புரபசர் என்கிற முறையில் சொல்றேன் இது திட்டமிட்ட அறிவியல் பூர்வமான மேஜிக். பாஸ்பரஸ், கந்தகம் உள்ளிட்டு சில ரசாயன பொருட்களை கலந்து குடிசையில் போட்டுவிட்டால் போதும். அது வெயில் பட்டதும் தானாக எரியத்தொடங்கிவிடும். அந்த ரசாயன தூள் கண்ணுக்கெல்லாம் தெரியாது.” என்ற மாதேஷ், தீப்பிடித்து எரியவைக்கும் மெத்தேடை விவரித்தார்.


“சீனு, ஒருவழியாய் இந்த கிராமத்தில் வீடுகளை தீப்பிடிக்க வைத்த பேயை கைது பண்ண போறோம். வாங்க.” என்றார்.
சீனுவுக்கு எதுவும் புரியவில்லை. குழப்பத்தோடு ஜீப்பில் ஏறினார்.
ஒரு மணிநேரத்தில் ஜீப் அந்த பங்களாவில் நின்றது.
தட தட வென உள்ளே போன  இன்ஸ்பெக்டர் தேவா, “ நித்யானந்தம். உங்களை இப்போ கைது பண்ணப்போறேன். வரீங்களா ஸ்டேஷனுக்கு” என்றவரிடம்,“ எதுக்கு?” என்றார்.


“நீங்க கேட்ட விலைக்கு அந்த கிராம மக்கள் அவங்கவங்க இடத்தைக் கொடுக்கலை என்பதால ரொம்ப புத்திசாலிதனமா சையின்ஸ் டெக்னிக்கில் பாஸ்பரஸ் ரசாயன பவுடரை சூடத்துடன் கலந்து, சாணத்தில் பெட்ரோல் கலந்து அதை உருட்டி வீடுகள் மீது போட சொல்லியிருக்கீங்க.அந்த ரசாயன கலவை வெயில் படபட சூடாகி திடீர்ன்னு தீப்பிடிச்சு எரியும். இப்படி தினம் தினம் செய்து அந்த மக்களை பயமுறுத்தி, கடைசியா பூசாரி மூலம் இதெல்லாம் பேயோடு செயல். தெய்வ குத்தம்ன்னு புரளிய விட்டிருக்கீங்க.

கடைசியா மக்கள் பேய்க்கு பயந்த வீட்டையும் இடத்தையும் உங்களிடம் வந்த விலைக்கு கொடுப்பாங்கன்னு திட்டம் போட்டு நல்ல நாடகம் போட்டு இருக்கீங்க. ஆக,உங்க சுயநலத்துக்காக வீட்டை கொளுத்துனதுக்காக தான் கைது பண்றேன்.போதுமா? இன்னும் உன்னோட பித்தலாட்டத்தை சொல்லவா” என்றார், இன்ஸ்பெக்டர் தேவா.
நித்யானந்தம் மவுனமாய் தேவாவை பின் தொடர்ந்தார்.
யூடியூப் சேனல் சிவசண்முகம் எல்லாவற்றையும் செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டிருந்தார்.


‘‘சார், இன்னும் சில நொடிகளில் பாருங்கள். இந்த பேய்கிராமம் வைரல் ஆகி, இந்த உலகத்துக்கு ஷாக் கொடுக்கும். உங்கள் பெயரும் புகழும் நாடெங்கும் செல்லும் பாருங்க’’ என்றார் யூடியூப் சிவசண்முகம்.
‘ அப்பாடா!’ என்று ஏட்டு சீனு பெருமூச்சு விட்டார், இன்ஸ்பெக்டர் தேவாவை பார்த்து சிரித்தப்படி.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!