நவரச போட்டிக் கதை: அனுபவம் தந்த பரிசு 

by admin 2
64 views

சுட்டெரிக்கும் வெயிலில் பறவைகள் ஆங்காங்கே மரக்கிளைகளில் தஞ்சம் அடைந்தன.

  வியாபாரத்திற்கு பலரும் சூரியன் உதயத்திற்கு முன்பே சந்தைக்குச் சென்று விட்டனர். கனகா, வேகமாக  சைக்கிளை மிதித்துக் கொண்டு தனக்குள் பேசிக் கொண்டே சந்தைக்கு சென்று கொண்டிருந்தாள்.

“இந்த சந்தையில் தான் அதிகம் வியாபாரம் ஆகும்.  நேரமாச்சே..! என்ன செய்ய…! “

கனகா முறுக்கு சுட்டு வியாபாரம் செய்தாள். குடும்ப அட்டையில் அவளுக்கு கிடைக்கும் அரிசியை கழுவி காய வைப்பாள். உளுத்தம்பருப்பு சேர்த்து மில்லில் மாவாக அரைத்து பாமாயில் எண்ணையில் பொரித்து சந்தையில் சென்று விற்று வருவாள். குழந்தையை முதுகில் சுமந்து செல்வாள். 

சந்தையை அடைந்து வியாபாரத்தை ஆரம்பித்தாள். வியாபாரம் நன்றாக நடந்தது. மீதி முறுக்கை அங்குள்ள ஏழை குழந்தைகளுக்கு அளித்து விட்டு வீட்டிற்கு திரும்பினாள். 

படிப்பை பாதியில் நிறுத்திய பெண் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் பாடம் சொல்லித் தந்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத உதவி செய்வாள். 

அன்று வீடு திரும்பும் போது வழியில் ஒரு பெண் ஒரு பையனுடன் மறைவாக நின்று பேசுவதைக் கண்டாள். 

அன்று மாலை வகுப்பில் மாணவிகளுக்கு ஒரு கதை சொல்வதாகக் கூறினாள். ” “ஐந்து வருடங்களுக்கு முன் பக்கத்து ஊரில் நடந்த கதை. உயர்நிலை பள்ளி மாணவி ஒருத்திக்கு சினிமா என்றால் உசிறு ” 

“எனக்கும் தான்” என்றாள் ஒரு பெண். 

அந்த ஊரில் சினிமா படபிடிப்பு நடந்தது. படப்பிடிப்பில் எடுபடியாக வந்த ஒரு பையன் அந்த ஊர். அந்த பெண் பள்ளிக்கு செல்லும் வழியில் அவனிடம்  “எனக்கு சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை வாங்கி தா நடிக்கிறேன். எனக்கு சினிமாவில நடிக்க ரொம்ப ஆசை” என்றாள். 

“என்னோட வா.  எப்படியாவது உனக்கு சினிமா சான்ஸ் வாங்கித் தரேன்.‌ நீ ரொம்ப அழகா இருக்க. பெரிய நடிகையா வருவ. கொஞ்சம் பணம் எடுத்து வா. உனக்கு நல்லா மேக்கப் போட்டு படம் பிடித்து டைரக்டருக்கு‌‌ கொடுக்கணும்” என்று நம்பிக்கையுடன் கூறினான் அந்த பையன் அறிவழகன். 

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்ததை வகுப்பு ஆசிரியை எதேச்சையாகக் கேட்டார். அப்போது ஒன்றும் கூறாமல் வந்து விட்டார். மறுநாள் பள்ளியில் அந்த மாணவியை அழைத்து விசாரித்தார். அவளும் உண்மையைக் கூறினாள்.

 ” யாரையும் நம்பி போகாதே. நல்லா படி. பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் ,  நடிப்புக் கல்லூரியில் சேர்த்து விடறேன் . பின் வாய்ப்பு தானே வரும் ” என்று புத்திமதிக் கூறினார். 

“சரி …டீச்சர்…  நான் அவனிடம் வரலை என்று சொல்லிடறேன் ” என்றாள் அந்த பெண். டீச்சரும் மகிழ்ச்சியாகச் சென்றாள். 

ஆனால் மறுநாள் அந்த பெண் வீட்டை விட்டு அவனுடன் சென்று விட்டாள். அழைத்து சென்றவன் அவளை கர்பமாக்கி தன் இச்சை தீர்ந்ததும் வேறு ஒருவனுக்கு விலை பேசினான். அங்கிருந்து தப்பியவள் வாழ வழி தெரியாமல் திக்கற்ற நிலையில் ஊருக்கு திரும்பினாள். வந்த பின் தான் தெரிந்தது அவள் பெற்றோர்கள் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டது. 

அந்த ஆசிரியரின் வார்த்தைக்கு  மதிப்பு தராததால் கிடைத்த தண்டனை.  அடிபட்டு திரும்பிய பெண்ணிற்கு அந்த ஆசிரியை ஆதரவு தந்து அவளும் +12 முடித்தாள். இன்று உங்கள் முன் நிற்கிறாள். 

தன் கதையை கூறி முடித்ததும் சினிமா ஆசை என்று சொன்ன பெண் நிர்மலா கதறி அழுதாள். ” அக்கா, நல்ல வேளை…! சரியான நேரத்தில் உங்கள் கதை என்னை காப்பாற்றியது. நானும் ஒரு பையனுடன் வீட்டை விட்டு வெளியே செல்ல இருந்தேன். ” என்று தேம்பி அழுதாள். 

அவளை சமாதானம் செய்த கனகா, இன்று நான் அஞ்சல் வழியாக சரித்திரத்தில் இளங்கலை முடித்து, இளங்கலை கல்வியாளருக்கு படித்துக் கொண்டு இருக்கிறேன். நீ நன்றாக படித்து முடித்து நல்ல வேலையில் சேர்ந்தால் எனக்கு பெருமிதமாக இருக்கும்.

நிர்மலா “அக்கா..! நான் நன்றாக படித்து உங்களைப் பெருமைப் படுத்துவேன்”என்று உறுதி அளித்தாள்.

ஒரு பெண்ணை காப்பாற்றிய மனநிறைவு  ஏற்பட்டது. பெருமிதத்துடன் வீடு திரும்பினாள்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

You may also like

Leave a Comment

error: Content is protected !!