படைப்பாளர்: தி.வள்ளி
கதவை திறந்து கொண்டு வெளியே வந்தேன். கதவு சத்தம் கேட்டு “கருப்பி” முகத்தை தூக்கி என்னை பார்த்தது. என்னை பார்த்தது என்பதை விட “முறைத்தது” என்று தான் சொல்ல வேண்டும்.
“என்ன பாக்குற.. உனக்கு உட்கார்ந்த இடத்துல சாப்பாடு வந்துடும். எனக்கு நான் சமைச்சாதான் உண்டு. வேலை எவ்வளவு கிடக்குது.. உன்னை மாதிரி ஜாலியா சுத்திட்டு இருக்குற கொடுப்பினை எனக்கு கிடையாது..”
“வள்..வள்”என்று குறைத்து தன் எதிர்ப்பை காட்டியது …
“தினமும்தான் என்ன பாக்குற.. அப்புறம் எதுக்கு குறைக்கிற.” என் கிச்சன் அருகில் உள்ள பால்கனியில் நின்றாலே, பக்கத்து வீட்டு போர்ட்டிகோ நன்றாக தெரியும். போர்டிகோ தூணில்தான் கருப்பி கட்டப்பட்டிருக்கும். நான் கிச்சன் டவலை கொடியில் காயப்போட போனாலே பாய்ந்து வந்து குறைக்கும் .
“உனக்கு மனுஷ சகவாசமே ஆகாது. யாரைப் பார்த்தாலும் தொண்டைய தொறந்து அப்படியொரு சத்தம்.. யாரும் கேட்டை திறந்து எட்டிப் பார்க்ககூட முடியாது.. நீ போடுற சத்தத்துல வந்தவன் ஓடிப் போயிடுவான்…தினமும் பார்க்கிற என்னை பார்த்தாலே இப்படி கத்துற. உனக்கு பயந்து தான் கொரியர்காரன், தபால்காரர், பால்காரன், பேப்பர்காரன், யாரும் உள்ளே வர மாட்டேங்கிறாங்க”
சிலிண்டர் கொண்டு வரும் பையனே பயந்து பயந்து தான் உள்ளே வருவான். அதுவே சில சமயம் வசந்திக்கு பெரிய தலைவலியா இருக்கும்.
வசந்தி யாருன்னு கேக்குறீங்களா? அவ என் பக்கத்து வீடு எனக்கு நல்ல
ஆத்மார்த்தமான தோழி. நல்ல வசதி உள்ளவள். அவள் பெரிய பங்களாவின் காவலுக்கு தான் கருப்பியை வளர்த்து வந்தாள். வீட்ல அதுக்கு வச்ச பெயர் ஜீனோ..ஜீனுன்னு செல்லமா கூப்பிடுவாங்க. கருகருவென ரோமம் புசுபுசுவென இருக்கும். அதான் நான் அதைச் செல்லமா “கருப்பி”னு கூப்பிடுவேன்.ஓங்கு சாங்கான வாட்டசாட்டமான உருவம். குதித்துக் கொண்டு ஓடி வரும்போது கொலை நடுங்கும்.
தப்பித்தவறி நாயின்னு சொல்லிட்டாலே வசந்தி ஜீனு மாதிரி என்கிட்ட பாஞ்சிடுவா. அவள் அளவுக்கு நான் வசதியானவள் கிடையாது. இருந்தாலும், எங்களிடையே ஒரு ஆத்மார்த்தமான அன்பு இரு குடும்பத்தையும் ஒன்றாக இணைத்திருந்தது. வசந்தியின் கணவர் கிட்டத்தட்ட ஜீனு மாதிரிதான்.. மனுஷாளே வேண்டாம். ஆனால்
குடும்பத்தினர் மேல் அபாரபாசம். இரண்டு மகன்களும் அவருக்கு ரொம்ப
செல்லம்.ஆனால் அதிகம் விட ஜீனு மேல் பாசம் ஜாஸ்தி.. ஜீனுவுக்கும் எஜமானர் செந்தில் மேல் ரொம்ப பிரியம்.
படு பிசியான பிஸினஸ்மேன் செந்தில். இரவு வர 11 மணி ஆகும். அவருடைய ஆடி கார் பங்களாவுக்குள் நுழைந்ததும் காதை விடைத்துக் கொண்டு ஜீனு தாவ ரெடியாக இருக்கும். அவர் இறங்கியதுதான் தாமதம்அவர் மேல் தாவி முன்னிரண்டு கால்களை அவர் இடுப்பில் வைத்துக்கொண்டு முகத்தை அவர் மார்பில் வைத்து ” இவ்வளவு
நேரம் என்னை விட்டுட்டு எங்க போனீங்க ” என்று தன் உடல் மொழியால் கேட்கும்..
செந்திலும் இயல்பில் கடுகடுப்பான மனுஷன்தான். ஒருத்தர் கிட்டக்க நெருங்க முடியாது. பிள்ளைகள் மட்டும்தான் அப்பா செல்லம் என்பதால் தைரியமாக பழகுவார்கள். வசந்தி தேவைக்கு தான் பேசுவாள். அவருக்கு நாங்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர் “ஹிட்லர்”.
என் வீடு, எங்கள் அப்பார்ட்மெண்ட் முதல் மாடி. என் வீட்டின் பால்கனியில் இருந்து பார்த்தால் அவள் வீட்டு போர்டிகோ மிக அருகில் அழகாக தெரியும். அதனால் ஜீனுவுக்கு வசந்தியை விட என்னிடம் நெருக்கம் அதிகம். அன்று இரவும் நான் பாத்திரத்தை வெளியே போட்டுக் கொண்டிருக்க செந்திலின் ஆடி கார் உள்ளே நுழைந்தது.. அவர் கீழே இறங்கி ஓடி வந்த மகன்களிடம் கையில் இருந்த ஸ்வீட்டைக் கொடுக்க.. அதற்குள் ஜீனு ஓடி வந்து தாவி அவரை கொஞ்சிக் கொண்டிருந்தது.
செந்தில் காலையில் கிளம்பும்போதும், இதே போல ஒரு பாச நாடகம் நடக்கும். அஞ்சு பத்து நிமிஷம் எவ்வளவு வேலையிலும் நின்று தன் செல்ல ஜீனுவிடம் கொஞ்சாமல் கிளம்பமாட்டார் .வசந்தியே சில நேரம் அலுத்துக் கொள்வாள். “அவருக்கு என்னை விட அது மேலதான்டி பிரியம். அதுதான் அவருக்கு முதல் பொண்டாட்டி” என்பாள்.
செந்தில் பிள்ளைகள் எல்லோரும் வெளியே கிளம்பிவிட, வசந்தி உள்ளே வேலையாக இருப்பாள். அதனால் அனேகமாக அதற்குப் பிறகு நான்தான் கருப்பியிடம் அவ்வப்போது பேசி திட்டு..சாரி “வள்..வள்” வாங்கி கொண்டிருப்பேன். வசந்தி சில சமயம் செல்லமாக கோபப்படுவாள் “அது கிட்ட ஏண்டி போய் சீண்டுற”.ஆனால் கருப்பியை சீண்டுவது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.
எல்லாம் சந்தோஷமாக போய்க்கொண்டிருக்க, 45 வயது கூட எட்டாத செந்திலுக்கு திடீரென நெஞ்சுவலி. வசந்தி பதறிக் கொண்டு என்னை போனில் அழைத்தாள். உடனே டிரைவரை வரவழைத்து நாங்கள் காரில் செந்திலை கூட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். நகரின் மிகப்பெரிய மருத்துவமனையின் தலைமை டாக்டர்தான் அவர்களுக்கு குடும்ப டாக்டர். அவருக்கும் போன் பண்ண அவரும் அங்கே வந்து சேர்ந்தார்.
செந்திலை உடனே ஐ. சி. யூ விற்கு கூட்டிக் கொண்டு போனவர்கள். ஏதேதோ பண்ணி பார்த்தனர் “கார்டியாக் மசாஜ்” கொடுப்பதை பார்த்ததுமே எனக்குள் அதிர்ச்சி பரவியது. ஐயோ இதை வசந்தி எப்படி தாங்க போகிறாள். ‘கடவுளே அவர் பிழைக்க வேண்டுமே’..வெளியே வந்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார் .”சாரிமா வசந்தி! அவரைக் காப்பாற்ற முடியவில்லை” என்று அணுகுண்டை எங்கள் தலையில் போட்டார்.
சொந்தங்கள் எல்லாம் கூட, நடு கூடத்தில் பட்டு வேட்டி சட்டையில் செந்திலை பிரீசர் பாக்ஸில் வைத்திருந்ததை என்னாலேயே நம்ப முடியவில்லை. வசந்தி உறைந்து போய் உட்கார்ந்திருந்தாள். பிள்ளைகள் அழுது கொண்டிருந்தார்கள்.
சற்று இடைவெளியில் நான் வீட்டிற்கு வந்தவள், மேலிருந்து பார்க்கும்போது தற்செயலாக ஜீனு ஞாபகம் வந்தது.
‘ஐயோ அது எவ்வளவு பாசமாக இருக்கும். எப்படி தாங்கிக் கொள்ளும்’ என்று எட்டிப் பார்த்தேன். ஒருத்தரை கண்டாலே அவ்வளவு குரைக்கும்.. சத்தம் போடும் ஜீனு.. அன்று அவ்வளவு கூட்டத்தைக் கண்டும் வாய் திறக்கவில்லை. சத்தமில்லாமல் தலையை தரையில் வைத்து பாவமாய் படுத்திருந்தது. நான் மெதுவாக “ஜீனு” என்று என்று கூப்பிட, தலையை தூக்கிப் பார்த்துவிட்டு படுத்துக் கொண்டது.
அவ்வளவு அமர்க்களத்திலும், வாட்ச்மேன் தாத்தா கொண்டுவந்து சாப்பாட்டை கொடுத்து தலையை தடவி “சாப்பிடு” என்று தண்ணீரையும் வைத்துவிட்டுப் போனார். ஆட்கள் நடமாட்டம் இருப்பதால் சங்கிலியால் கட்டிப்போட்டு வைத்திருந்தார். அன்று முழுவதும் எழுந்திருக்கவே இல்லை பக்கத்தில் இருந்த சாப்பாட்டையும் தொடவில்லை.
செந்தில் உடல், கடைசி காரியங்கள் செய்வதற்காக வெளியே கொண்டு வரப்பட, ஜீனோ எந்திரித்து பார்த்து இப்படியும் அப்படியும் சங்கிலி அசைத்து திமிறியது. அப்பவும் அதன் வாயிலிருந்து சத்தம் வரவில்லை. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அது குறைத்து ரகளை பண்ணும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதனிடமிருந்து எந்த சத்தமும் இல்லை. காரியங்களில் எல்லாம் முடிய, வீடு வெறிச்சிட்டது .வசந்தியை
ஆறுதல் படுத்த நான் தினமும் போக ஆரம்பித்தேன். கிட்டக்கே நெருங்க விடாமல் குறைக்கும் ஜீனு என்னை பார்த்துவிட்டு தலையை கீழே போட்டு படுத்துக் கொள்ளும். அதிலிருந்தே ஜீனு உற்சாகம் குறைந்து, சோர்ந்து சோர்ந்து படுக்க ஆரம்பித்தது. வசந்தி பார்க்காத வைத்தியமில்லை. ஆஸ்பத்திரி, டாக்டர்கள், மருந்து எல்லாவற்றையும் மீறி மிகவும் மெலிந்து பார்க்கவே பாவமாக இருந்தது. சங்கிலியால் கட்டவில்லை.. செந்திலின் ஆடிகாரை சுற்றி சுற்றி வருவது கண்களில் கண்ணீரை
வரவழைத்தது.
அடுத்த ஓரிரு மாதங்களில் எப்போதும் படுத்திருந்த ஜீனு கூப்பிட்டால் தலையை மட்டும் தூக்கி பார்க்கும். சத்தமாக குறைத்துக் கொண்டிருக்கும் போது எரிச்சலாக தோன்றும். இப்போது அதனிடயிருந்து ஏதாவது குறைப்பு சத்தம் கேட்காதா என்று தோன்றியது.. செந்தில் இறந்து சரியாக மூன்றாம் மாதத்தில் ஒரு நாள் காலை ஜீனு எந்திரிக்கவே இல்லை.தன் எஜமானனோடு தன் வாழ்க்கையும் முடித்துக் கொண்டது.
அவருடைய இறப்பு தாங்க முடியாமல் 3 மாதத்தில் உயிரை விட்டது மனதை நெகிழ வைத்துவிட்டது. ஆறரிவுள்ள ஒரு விலங்குக்கு தன் எஜமானன் மேல் இவ்வளவு பாசமா.. என்ற பிரமிப்பு இன்று வரை என் மனதை விட்டு அகலவே இல்ல அதன் முடிவு பிள்ளைகளுக்கும், வசந்திக்கும் தாங்க முடியாத ஒரு பேரிழப்பாக இருந்தது. பிள்ளைகள் இருவரும் சோர்ந்து போனார்கள். பிள்ளைகளை
சமாதானப்படுத்த திரும்ப ஒரு சின்ன நாய்க்குட்டியை வாங்கினாள் வசந்தி. அதற்கு “கேரமெல்” என்று பெயர் வைத்தார்கள் பிள்ளைகள். ஜீனுவின் கம்பீரமும், பார்த்தாலே பயமுறுத்தும் தோற்றமும், கேரமெல்லிடம் கிடையாது இது ஒரு அழகான பொம்மை போல இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தது.
இப்போதும் நான் என் கிச்சன் பால்கனியிலிருந்து எட்டிப் பார்க்க கேமல் ஓடிவந்து என்னை பார்த்து குறைக்காமல் வாலையாட்டும். அதன் கண்களில் தெரியும் அன்பும், குழைவும், எனக்கென்னவோ ” கறுப்பி” தான் மறுஜென்மம் எடுத்து வந்திருக்கிறாள் என்றே தோன்றும். ஆனால் கருப்பியிடம் வைத்த பாசத்தை இவளிடம் வைக்க கொஞ்ச நாள் ஆகும் என்றே தோன்றுகிறது.
முற்றும்.