நவரச போட்டிக் கதை: பந்தம்

by admin 2
41 views

அம்மா.. இந்த அப்பா ஏம்மா இப்படியிருக்கார்….எனக்கு விவரம் புரிஞ்ச நாளிலேருந்து பார்க்குறேன் …இவரு நடத்துறதெல்லாம் டைவர்ஸ் கேஸாத்தான் இருக்கு. அதை நல்லா  வாதாடி ஜெயிச்சுத் தர்றோம்னு ஒரு பெருமை வேற உன் புருசனுக்கு …ராஜி தாய் நிர்மலாவிடம் குறைப்பட்டுக்கொண்டாள்.

நீ சுலபமாச் சொல்லிட்ட … ஆனா என்னால வாய் விட்டுக்கூடச் சொல்ல முடியாது .பேசாம எனக்கு இந்த மனுசர்கிட்டயிருந்து டைவர்ஸ் ஏற்பாடு செஞ் சுடறயாடி ?

எங்களுக்கு ஒத்தைப்பொண்ணு நீ …எங்க இவர் பண்ணுற பாவமெல்லாம் உன் தலையில விடிஞ்சிடுமோன்னு நா பயந்து சாகறது எனக்குத்தான் தெரியும்….

அவளை முறைத்தாள் ராஜி. உன் புருசன் பண்ணறதே சரியில்லைன்னு சொல்றேன் …. நீ வேற ஏம்மா தேவையில்லாமப் பேசி என் கடுப்பை அதிகமாக்குற …

குழந்தைப் பருவத்திலிருந்தே செல்லம் கொடுக்க வேண்டிய இடத்தில் செல்லம் கொடுத்து…கண்டிக்க வேண்டிய விஷயத்தில் கண்டித்து …. குறையே சொல்ல முடியாதபடி ராஜியை வளர்த்திருந்தாள் நிர்மலா. 

இன்றைய நாகரிகத்தின் ஆர்பாட்டங்கள் களைந்த.. ஆடம்பரங்கள் தவிர்த்த …..குணங்களில் பழமையின் சாயல் ஏந்திய நவநாகரிகப் புதுமைப்பெண் . மொத்தத்தில் பழைய கலயத்தில் சுவை மிகுந்த புதுக் கஞ்சி ராஜி.

அப்பா சாம்பசிவத்திடமே, நிறைய முறை வாதாடியிருக்கிறாள் ராஜி… ஏம்பா காரணமேயில்லாம புருசன் …பொண்டாட்டிய பிரிக்கப் பார்க்குறீங்களே …உங்களுக்கே நியாயமா இருக்கா?

ராஜிம்மா …நீ சின்னப் பொண்ணு … உனக்கு என்ன தெரியும் இதைப் பத்தியெல்லாம் ?ஒத்து வரலே பிரிச்சு விடுங்கன்னு என்கிட்டே வந்து நிற்கிறாங்க … நா நல்லபடியா முடிச்சுத்தர்றேன் அவ்வளோதான் …..

ஊம் ..செய்யறது வெட்டிவிடுற வேலை …இதுல வீண் பெருமை வேற இந்த மனுசனுக்கு….மனத்தில் எண்ணியதை வெளிப்படுத்த முடியாமல் நகர்ந்தாள்  ராஜி .

எம்.ஏ. எகனாமிக்ஸ் முடித்திருந்த ராஜிக்கு ஒரு மல்டிநேஷனல் கம்பெனியில் வேலை கிடைத்தது.

தன்னுடன் வேலைக்குச் சேர்ந்த காவ்யா மற்றும் சந்தீப்பிடம் அதிகமாகப் பழகும் சந்தர்ப்பங்கள் அமைந்ததில் மூவரும் நெருக்கமாகினர்.

மலையாளியான சந்தீப் சிலமாதங்களுக்கு முன் திருமணம் முடித்து வேலை பார்க்கும் ஊரான கோயம்புத்தூரிலேயே  மனைவி ஆருத்ராவுடன் செட்டில் ஆகியுள்ளான் .

ஹேய் ..ராஜி ..காவ்யா … எப்ப எங்க வீட்டுக்கு வரப்போறீங்க ?

வந்தா வீக் எண்டுலதான் வரணும் …சந்தீப் …ஆனா.. புதுக் கல்யாண ஜோடியைத் தொந்தரவு பண்ணற பாவம்  எங்களுக்கெதுக்கு… என்னடி ராஜி … அவளும் ஆமோதிப்பாய்த் தலையசைத்துச் சிரித்தாள்.

காவ்யா… இதை ராஜி மட்டும் சொன்னா நா ஏத்துப்பேன் ….உனக்கு வீக் எண்ட்ல உன் பாய் பிரண்ட் ..நிரஞ்சன் கூடச் சுத்தவே நேரம் போதாது… அதைச் சொல்லறத விட்டுட்டு சும்மாக் கதையளக்காத …..அவன் கேலியாய்ச் சொன்ன விதத்தில் ராஜி சிரித்துவிட ….முகம் செங்கொழுந்தாகிப்போனது  காவ்யாவுக்கு.

நிரஞ்சன் …அவர்கள் அலுவலகத்தின் வேறு ஒரு கிளையில் பிராஞ்ச் மானேஜர். அலுவல் நிமித்தமாக வந்துபோன சந்தர்ப்பத்தில் காவ்யாவுடன் காதல் மலர்ந்தது. 

இருவர் வீடுகளிலும் ….காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட ….அந்த வருடமுடிவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் ….தடையேதுமில்லாமல் அந்த ஜோடிப் புறாக்கள் காதல் வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தனர். 

தாயுடன் தினமும் அலுவலகக் கதைகளைப் பகிர்ந்துகொள்வாள் ராஜி .

நீ சொல்லச் சொல்ல உன் பிரெண்ட்சைப் பார்க்கனும்னு ரொம்ப ஆவலா இருக்கு ராஜிம்மா …அவங்களை ஒருநாள் நம்ம வீட்டுக்கு இன்வைட் பண்ணேன்.

அந்த வார இறுதியில் ஒருநாள் இருவரையும் தங்கள் வீட்டிற்கு ஆபீஸ் முடிந்து  அழைத்து வந்தாள் ராஜி.நன்றாகப் பழகிய இருவரையுமே நிர்மலாவுக்கும்,சாம்பசிவத்திற்கும் ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.

அன்று பிராஞ்ச் விசிட்டிற்கு வந்த நிரஞ்சனுடன்,மூவரும் காபி ஷாப் சென்றனர். 

ரஞ்சன் …இவங்க ரெண்டு பேரையும்ரொம்பநாளா லஞ்சுக்கு இன்வைட் பண்ணிக்கிட்டிருக்கேன் ….ஏதாச்சும் சாக்குப் போக்கு சொல்லித் தப்பிசிடறாங்க ….அதுவும் இந்தக் காவ்யா … நீங்க சொன்னாத்தான் …

இடைமறித்த நிரஞ்சன் …கமான் சந்தீப்…. நாமெல்லாம் ஒரே ஏஜ் குரூப் ….மரியாதையெல்லாம் வேண்டாமே…. நீ…வா…போன்னாத்தான் எனக்கும் கம்பர்ட்டபிளா இருக்கும்.

சொன்ன நிரஞ்சனை , சந்தீப் எழுந்து அருகில் வந்து அணைத்துக் கொள்ள …அந்த நெகிழ்ச்சியான தருணத்தில் …அந்த மாதக்கடைசியில் சந்தீப் வீட்டுக்கு லஞ்சுக்குச் செல்ல முடிவாகியது.

நிரஞ்சன் தன் காரிலேயே காவ்யாவையும்,ராஜியையும் அழைத்துச் செல்ல….

காலிங்பெல் சத்தம்கேட்டுக் கதவைத் திறந்த சந்தீப் …என்னடா ரஞ்சா இவ்வளோ சீக்கிரம்…. என் பொண்டாட்டி இப்போத்தான் எழுந்திருச்சு குளிக்கவே போயிருக்கா …

கூல்டா சந்தீப்… சிஸ்டர்கிட்ட மார்கெட்ல என்னென்ன தேவைன்னு ஒரு லிஸ்ட் வாங்கிக்கோ ….இவங்க ரெண்டு பேரும் அவங்களுக்கு உதவி பண்ணுவாங்க ….நாம போய்த் தேவையானதை  வாங்கிட்டு வரலாம்.

அதற்குள், குளித்துத் தயாராகி வெளியே வந்த ஆருத்ரா …ஹாய்…வாங்க.. சாரி …எழுந்திருக்கக் கொஞ்சம் நேரமாயிருச்சு ….தயங்கி நின்றவளிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு இயல்பாய்ப் பழகிய காவ்யா …ராஜியுடன் ஆருத்ராவும் சகஜமாக ஒட்டிக்கொள்ள ….

விருந்து தடபுடலாய் முடிந்தது. பெண்கள் மூவரும் சேர்ந்து கிச்சன் சுத்தம் செய்தனர். மதியம் நன்றாக ஓய்வெடுத்துவிட்டு ….சாயங்காலம் ஒரு மால் சென்று சினிமா…நிரஞ்சனின் ட்ரீட்டாக டின்னர் …நண்பர்கள் அவரவர் வீடு திரும்பினர்.

சந்தீப் …எனக்குக் காவ்யா,ராஜி ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு …அதுவும் ..ராஜி.. சான்சே இல்லே … எவ்வளோ பொறுப்பான பொண்ணு …

எப்பொழுதும் கலகலப்பாகப் பழகும் காவ்யாவிடம் அன்று ஏதோ மிஸ்ஸிங் …சரியாகக் கணித்த ராஜி உணவு இடைவேளையின்போது அது குறித்து விசாரிக்க …. 

நா உங்க ரெண்டுபேர்கிட்டயும் பர்சனலாப் பேசணும் ..ஆனா இங்க வேணாமே ..என்று தயங்கித் தயங்கிக் கூறினாள் காவ்யா.

அலுவலக நேரம் முடிந்து அவர்கள் இருவரையும் வழக்கமாகச் செல்லும் காபி ஷாப்புக்கு அழைத்துச் சென்றான் சந்தீப்.பேரர் ஆர்டர் எடுத்துச் சென்ற இடைவெளியில் ..

ராஜி.. எனக்கு இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம்னு தோணுது. 

ஆனா..அப்பா,அம்மாகிட்ட எப்படிச் சொல்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு…எதிர்பாராத இந்தத் தாக்குதலில் அதிர்ந்தனர் சந்தீப்பும், ராஜியும் .

முதலில் தன்னிலைக்கு மீண்ட ராஜி, ஏண்டி உங்களுக்குள்ள எதாச்சும் பிரச்சனையா , நிரஞ்சன் ஏதாச்சும் சொல்லிட்டாரா ?

ஊம், இப்பல்லாம் அவன் என்கிட்டே போன்லகூட அதிகமாப் பேசறதில்லே …வீக் எண்ட்ல என்கூட டைம் ஸ்பென்ட் பண்றதே இல்லே..எனக்கு வாழ்க்கையே வெறுத்திடுச்சு….எப்பக் கேட்டாலும் வொர்க் பிரஷர்னு சொல்றான் …உனக்கு நா முக்கியமா ..உன் வேலை முக்கியமான்னு கேட்டா ..கொஞ்சம் கூட யோசிக்காம வேலைதான்னு சொல்லிட்டான் …என் இதயம் சுக்கு நூறா உடைஞ்சிடுச்சுடி..

இப்பவே இப்படின்னா ..கல்யாணத்துக்கு அப்புறம் …நெனைச்சுப் பார்க்கவே முடியலே ..அதுனால..

ஓ..அதுனால மேடம் கல்யாணத்த நிறுத்த முடிவு பண்ணிட்டீங்க , அப்படித்தானே . இது எப்படி இருக்கு தெரியுமா ?

எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவெடுக்கிறதுதான் இந்தத் தலைமுறையோட சுபாவம்னு ..இன்னைக்குப் பெரியவங்க மத்தியில அரும்பியிருக்கிற கருத்தை நாமே ஆமோதிக்கிற மாதிரி இருக்கு .

ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கோ காவ்யா … நாம உணர்ச்சிவசப்பட்டு யோசிக்கிறதையெல்லாம்  தாண்டின யதாத்த  உலகம்  இருக்கு. தேவைக்கு அதிகமா சுயசிந்தனையில இருக்கிறச்ச நாம வசதியா அதை மறந்திடறோம் .

நிரஞ்சனுக்கு வேலைமேலதான் காதல்னு சொல்லுறியே … அவர் வேலையை விட்டுட்டு உன் பின்னாடி சுத்தினா …நீயோ ..உன் குடும்பமோ அதை ரசிப்பீங்களா ….வேலையோ, சம்பளமோ இல்லேன்னா …நாமதான் நெனைச்சா இந்த மாதிரி காபி ஷாப்..மால்னு ஊர் சுத்தமுடியுமா ?

சிக்கலின் நுனியைச் சரியாகப் பற்றிய தோழியை பெருமை பொங்கப் பார்த்தான் சந்தீப்.

ஒரு வாரம் டைம்  எடுத்து நிதானமா நான் சொன்னதச் சிந்திச்சுப் பாருடி …உனக்கே புரியும் . அதுக்குள்ள பிரச்சனையும் தீர்ந்துடும் .

அடுத்த நான்கு நாட்களிலேயே இயல்பு நிலைக்கு மீண்டுவிட்ட காவ்யா ..

ராஜியைக் கட்டிக்கொண்டு முத்தமழை பொழிந்தாள்.

ஏய்…நிரஞ்சனுக்கும் கொஞ்சம் மிச்சம் வைச்சுக்க …என்ற சந்தீப்பின்  கேலியில் காவ்யாவின் முகம் வெட்கத்தின் சாயல் பூசிக்கொண்டது.

நிரஞ்சன் கூட சந்தீப்பிடம் ,உங்க ரெண்டு பேரையும் மாதிரி ஒரு அருமையான நட்பு கிடைக்க நாங்க ரொம்பக் கொடுத்து வச்சிருக்கோம்டா சந்தீப் . 

உண்மையிலேயே அந்த டைம்ல ஆபீஸ்ல வொர்க் பிரஷர் ..நா ரொம்ப மன அழுத்தத்திலே இருந்தேன்.இவ வேற கடுப்பேத்த ….சமாதானப்படுத்துற மூடு கூட இல்லாமத் திட்டிவிட்டுட்டேன்..புலம்பித் தள்ளியவனை சமாதானப்படுத்தி ‘நண்பேண்டா’ என்று அணைத்துக் கொண்டான் சந்தீப்.

நிரஞ்சன்-காவ்யா திருமண நாள் நெருங்கிக்கொண்டிருக்க ….பேரு காலத்திற்காகத் தாய்வீடு சென்றாள் ஆருத்ரா.

ஆண்ட்டி,அங்கிளோட கட்டாயம் கல்யாணத்திற்கு வந்து ஆசீர்வாதம் செய்யணும் என்று ராஜியின் வீடு தேடி வந்து பத்திரிகை வைத்தாள் காவ்யா.

திருமணம் முடிந்த சூழ்நிலையில் நிரஞ்சனுக்கு ஐந்து வருடம் லண்டனில் ஆன்சைட் வாய்ப்பு அமைய , மனமேயில்லாமல் நண்பர்களைப் பிரிந்து சென்றனர், நிரஞ்சனும், காவ்யாவும்.

புதிதாய் வேலைக்குச் சேர்ந்த சூரஜ் இனிய அதிர்வலைகளை எழுப்பி ராஜியின் இதயவாசல் திறந்தான். நட்பு வட்டத்திற்குள் வந்துவிட்டாலும் ஒருவருக்கொருவர் மனம் திறக்கத் தயங்க …

தாங்கள் வழக்கமாகச் செல்லும் காபி ஷாப்பிற்கு, ராஜி,சூரஜை அழைத்துச் சென்றான் சந்தீப்.எக்ஸ்க்யூஸ்மீ …வராத போனைக் காதில் வைத்து..

ஒரு வழியாக …இருவரையும் பரஸ்பரம் தங்கள் மனங்கள் திறந்து காதல் சொல்லச் செய்வதில் வெற்றியும் கண்டுவிட்டான் சந்தீப்.

அதற்கு முன்னதாக…. ஒரு தமையனைப் போல் பொறுப்பாக சூரஜின் பின்புலத்தை ஆராய்ந்து …எப்படி வீட்டில் சொல்வது என்ற ராஜியின் தயக்கம் களையும் வகையில் …ராஜியின் பெற்றோரைச் சந்தித்து தான் அறிந்த விவரங்களைப் பகிர்ந்தான் .

சூரஜை வீட்டுக்கு வரவழைத்துப் பேசிய ராஜியின் அப்பாவுக்கும் .. அவன் வேறு இனமாக இருந்தபோதிலும் பிடித்துவிட …பரஸ்பரம் இருவர் வீடுகளிலும் கலந்துபேசி …ஒரு நல்ல நாளில் திருமண பந்தத்தில் இணைந்தார்கள் ராஜியும், சூரஜும்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்த சூழ்நிலையில் …..

அப்பா… எனக்கு…சூரஜோட…முக்கியமா அவர் குடும்பத்தோட ஒத்து வரலை…சூரஜ்கிட்டேயிருந்து எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுங்க 

….இதைத் தன் மகளிடமிருந்து சற்று எதிர்பார்க்காத சாம்பசிவம் அதிர்ந்தார்.

என்னம்மா சொல்லுறே ,எதனால?

என்னப்பா புதுசாக் காரணமெல்லாம் கேட்கறீங்க ..எந்த முகாந்திரமும் இல்லாம பிரிச்சு விடறதுல எக்ஸ்பெர்ட் ஆச்சே நீங்க…பெண்ணின் குத்தலான வார்த்தையில் குறுகிப்போனார் சாம்பசிவம்.

மேலும் செய்வதறியாது தயங்கியவர் …சந்தீப்பையும், மனைவியையும் துணைக்கு அழைத்தார்.

 அங்கிள் ..ராஜி எடுத்தேன் …கவிழ்த்தேன்னு முடிவெடுக்குற பெண்ணில்லை ….ரெண்டுபேர்கிட்டேயும் நா பேசறேன் …

ஆனால் அவன் பேசியும் பலனில்லை. அதுவும் உறுதியாக சூரஜிடம் இது சம்பந்தமாகப் பேசவே கூடாது என்று தடா போட்டுவிட்டாள்.

நம்ம ராஜியா இப்படி..நாங்க நம்பவே மாட்டோம் ,என்ற ஆருத்ரா மற்றும் காவ்யாவிடம் ..

எனக்கென்னவோ, ஏதாச்சும் முக்கியக் காரணம் இருக்குமின்னு தோணுது …சூரஜ் கிட்டே பேசவிடாம என் வாயையும் பூட்டி வைச்சுட்டா ..பாவம் அங்கிள் , இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கிறதப் பார்த்தா கஷ்டமா இருக்கு,புலம்பினான்.

அம்மா… கல்யாணமாயிட்டப்புறம் புகுந்த வீடு சம்பந்தப்பட்ட சில அந்தரங்கமான விஷயங்களை பெத்தத் தாய்கிட்டக் கூடப் பகிரறது தப்புன்னு நா நினைக்கிறேன் .அப்பா வக்கீலா இருக்குறதால டைவர்ஸ் ஈசியாக் கிடைக்குமேன்னுதான் இங்க வந்தேன் … தன் முயற்சியும் தோல்வியில் முடிய இடிந்துபோனாள் நிர்மலா.

டைவர்ஸ் வாங்கித் தீருவேன்னு இப்படி ஒத்தைக் காலிலே நிற்கிறாளே … நாமளும் அட்வைஸ் பண்ண  முடியாத சூழ்நிலையிலே இருக்கோம் . 

கடவுளே … நல்ல குடும்பம் ..நீதான் ஏதாச்சும் பண்ணி  என் பொண்ணு மனசை மாத்தணும் ….தன் கோரிக்கையைக் கடவுளிடம் சமர்ப்பித்தார் சாம்பசிவம்.

திருமணம் முடிந்து கணவன் வீட்டில் கழிந்த தருணங்கள் ராஜியின் மனத்திரையில் காட்சிகளாய் விரிய ….

புக்ககம் நுழைந்தவுடன் தன் வயதொத்த நாத்தனார் ஷிவானியிடம் ‘ஹாய்’ என்றவளை அலட்சியமாகக் கடந்து சென்றாள் அவள் .சரி, போகப் போக சரியாகிவிடும் என்று நினைத்தாள். 

மாமியார்,மாமனார் கூட முகம் கொடுத்துப் பேசவில்லை.  

சூரஜ் காதலிக்கிறேன்னு பிடிவாதமா இருந்ததால எங்களால ஒண்ணுமே பண்ணமுடியல .என் அண்ணன் பொண்ணுதான்  ஷிவானியோட பேவரைட். அவ இடத்துல உன்னை நினைச்சுப் பார்க்கவே முடியலே.

ராஜியின் உள்ளத்தில் ஒரு இனம் புரியாத வலி..ஏக்கம். இவர்களை அன்பால் என் பக்கம் திருப்பமுடியுமா என்னால்? 

இதெல்லாம் தாண்டி கணவனின் இன்னொரு முகம்தான் … ராஜியால் தாங்கவே முடியவில்லை.

வர வர ரொம்ப அழுது வடியற ராஜி ..ஒருவேளை வீட்டை எதிர்த்துக் கல்யாணம் பண்ணதுக்கு  நீ வொர்த் இல்லையோ? இதயம்கீரிய ரணம் ..

உண்மையில் யோசிக்காமல் வாயிலிருந்து விழுந்துவிட்ட வார்த்தைகள் .திரும்பப் பெறமுடியாத கையறு நிலை அவனுக்கு என்பதை ராஜியால் உணரமுடியுமா? 

தாம்பத்திய வாயிலில் மனத்தின் பசிதணிக்கும் போராட்டம்  ராஜியிடம்.  சூரஜின் இளமையோ உடல் வேட்டைக்கான தேடலில். 

முரண்பட்ட தேடல்களின் தோல்வியில் பிறந்த கோபம், சற்றும் யோசிக்காமல் வார்த்தைகளைக் கக்கியது . புரிதல் இடைவெளியால் விரிசல், சரியாகுமா?

எண்ணங்களின் தாக்கத்தில் அலையடித்து ஓய்ந்தது போன்றதொரு அமைதி ராஜியிடம் .விழிகளில் நீர் நிறைந்தது . 

மறுநாள் காலையில் எழுந்ததிலிருந்தே ஒரே சோர்வாக இருந்தது ராஜிக்கு.

புகுந்த வீட்டிலிருந்து வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில் கணவன் நினைவு வேறு வாட்ட …

என்ன ஒரு ஆச்சரியம் …. டெலிபதி போல் …. அந்த நிமிடம் அவள் அருகிலிருந்த மொபைலில் மெசேஜ் வந்ததற்கான மெல்லிய சத்தம்.

அது, சூரஜிடமிருந்து….என ரிங் டோன் உணர்த்தியது.

ராஜிம்மா… என்னை மன்னிச்சிடுன்னு கேட்கக்கூட கில்டியா இருக்கு … உன்னளவு பக்குவம் எனக்கில்லடா …உன்னை ரொம்ப மிஸ் பண்ணறேன் …வர்ற ஞாயிற்றுக்கிழமை அங்க வரவா?

அன்று.. 

நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றில், விவாகரத்து சம்பந்தமாக ஒப்புதல் கையெழுத்துப்  போட வந்திருந்தனர் அண்ணன், தங்கை இருவர் . கிட்டத்தட்ட ஆறு மாதமாக இழுபறியில் இருக்கும் வழக்கு. பிள்ளைகளின் முகத்தில் ஈயாடவில்லை …. அவர்கள் பெற்றோர்தான் விவாகரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் .

மனம் ஒரு நிலையில் இல்லாது தத்தளித்த சாம்பசிவம் ….அவர்களிடம்… எனக்கு எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. பொருளாதார ரீதியா உங்களைச் சுரண்டணும்னு நெனைக்கிற உங்க பெற்றோர் பேருக்கு ஒரு கல்யாணம் செஞ்சு …இதோ விவாகரத்துக்கும் ஏற்பாடு செஞ்சிருக்காங்க … இது பின்புலத்துல நா சேகரிச்ச தகவல் . நா சொன்னது உண்மையான்னு சோதிச்சிட்டு ….நியாயமான காரணம் இருந்தா  வாங்க. நானே உங்க வழக்கை முடிச்சுத் தர்றேன். 

முதல் முறையாக டைவர்ஸ் வழக்கில் காரணங்கள் தேட ஆரம்பித்தார் சாம்பசிவம் . பெண்ணின் முடிவுதான் இந்தச் சிந்தனைக்கு வித்தோ ….ஆக.. தலைவலியும் ,பல்வலியும் தனக்கு வந்தால்தானோ?

தெளிந்த முகத்துடன் அவர்கள் வெளியேற… சாம்பசிவத்தின் மனத்தில் இனம் பிரித்தறிய முடியாத் திருப்தி.

சில வாரங்களுக்கு முன்னர் தன்னைச் சந்தித்து கோரிக்கை வைத்த அந்த அண்ணன், தங்கையின் …மனைவி,கணவனின் முகங்களின் திருப்தியைக் மனக்கண்ணில் இருத்திப்  பார்த்த ராஜியின் அகத்திலும் திருப்தியே.

அம்மா.. எனக்கு நாள் தள்ளிப்போயிருக்கு …இந்த வீக் எண்டுல சூரஜ் கூட டாக்டர்கிட்டப் போய்க் கன்பார்ம் பண்ணனும்.

அப்படின்னா…என்று குழப்பம் விலகாத தாயை நெருங்கி அணைத்துக்கொண்டு, 

நா உன் பொண்ணும்மா …என்ன பிரச்சனை இருந்தாலும் உன்னோட வளர்ப்பு என்னைச் சரியாவே வழிநடத்தும்…கூறிய மகளை அணைத்த நிர்மலாவின் கண்களில் தாய்மையின் பூரிப்பு. 

இவர்கள் பேசியதை எதேச்சையாய் செவிமடுத்த சாம்பசிவம், அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்புணி ….என் மகள்… தகப்பன்சாமி தான் ….இதயம் பெருமிதத்தால் நிறைய வந்த சுவடு தெரியாமல் நகர்ந்தார் சாம்பசிவம். 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

You may also like

Leave a Comment

error: Content is protected !!