நவரச போட்டிக் கதை: யம தர்மரின் ராஜினாமா

by admin 2
73 views

யம தர்மரின் ராஜினாமா

“ நாராயணா… நாராயணா… நாராயணா…” என்று ஹரி நாமம் சொல்லியபடி மூன்றுலகம் சஞ்சரிக்கும் நாரதர் யமலோகத்திற்குள் நுழைந்தார்.
யமலோகம் எங்கும் அமைதியாக இருந்தது. இதைப் பார்த்த நாரதருக்கு ‘ஆஹா! ஏதோ இங்கே விபரீதம் நடந்திருக்கிறது. இல்லை என்றால் நாம் ஏதாவது கலகம் செய்து விபரீதம் நடக்க வைக்கலாம் என்று மனதுக்குள் நினைத்து கொண்டார்.

 வானில் பறந்துகொண்டிருந்தவர் சட்டென்று நேராக யமதர்மரின் தர்பாருக்குள் லேண்ட் ஆனார்.

“நாராயணா… நாராயணா… நாராயணா…” என்று கூறியபடி சபைக்குள் நுழைந்தார். அவர் காதில் பொருத்தியிருந்த ஹெட்போனில் ஏதோ சோகப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

சிம்மாசனத்தில் அமர்ந்திருக்காமல் ஆங்கோர் மூலையில் இருந்த பெரிய மரபெஞ்சில் தலையில் கை வைத்தபடி, கதாயுதத்தை நெஞ்சில் வைத்து ஏதோ தீவிர யோசனையில் தன்னை மறந்து இருந்தார் யமதர்மராஜா.

“என்ன யம ராஜப்பிரபு மூடு அவுட்டில் இருக்கிறார்! இவர் இப்படி இருந்தால் யார் இவரது பணியைப் பார்ப்பது?” என்று எண்ணியபடி யமதர்ம ராஜனிடம் சென்றார் நாரதர்.

“ நாராயணா… நாராயணா… நாராயணா… வணக்கம் யமதர்ம பிரபு!” என்று ஓங்கி குரல் கொடுத்தார்.
நாரதரின் குரல் கேட்டு, தன்னிலைக்கு வந்தார் யம தர்மர்.

“பிரபு, உங்களுக்கு மூட்அவுட்டா! இது அடுக்குமா? ஒரு வாரமா நீங்கள் என் வாட்ஸ்அப் மெசேஜ் பார்ப்பதில்லையே!” என்றார் நக்கலாய் நாரதர்.

“ இப்போது நான் குழப்பத்தில் இருக்கேன். ஒரு மாபெரும் பிரச்னை. நீர் தான் தீர்வு சொல்ல வேண்டும்” என்று வேண்டினார் யம தர்மர்.
“ நாராயணா… நாராயணா… நாராயணா… சொல்லுங்கள் பிரபு, என்னால் ஆனதை செய்கிறேன். பிரச்னை உங்களுக்கு நீங்கள் வைத்திருக்கும் ஆன்டராய்ட் போனுக்கா” என்றார் ஆறுதலாக நாரதர்.

“ போன் நல்லாத்தான் இருக்கு. உங்கள் மெசேஜ் எல்லாம் வெறும் மொக்கையாக இருப்பதால் பார்ப்பதில்லை. பிரச்சனை என்று நான் சொல்வது எனக்கு பூலோகத்தில் இருந்து ஒரு பிரச்சினை…”

“ என்னது பூலோகத்தில் உங்களுக்குப் பிரச்சனையா? எப்போதும் உம்மால்தானே பூலோகத்தில் எல்லோருக்கும் பிரச்சனை வரும்… பிரபு, நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே! ஏதாவது பூலோக பெண்ணிடம் சாட்டிங் செய்து கோல்மால் ஆகிவிட்டதா?” என்றார் நாரதர்.

“ அதெல்லாம் இல்லை. பூலோகத்தில் இருக்கும் மானிடர்கள் எல்லாம் அவரவர்களுக்கு இஷ்டப்பட்ட ஹரி, கிருஷ்ணர், ஈசன், விநாயகர், முருகன், ஐயப்பன். அம்மன்கள் இப்படி பல தெய்வங்களை வணங்கி வழிபடுவது தானே பழக்கம்” என்றார் யமதர்மர்.

“ ஆமாம்! இதில் என்ன குழப்பம் உங்களுக்கு… இது எல்லாருக்கும் தெரிந்ததுதானே… யாராவது இப்போது புதிதாக குஷ்புக்கு கட்டியதுபோல புதுசா வந்த கவர்ச்சி நடிகைகளுக்கு கோயில்கட்டியிருக்கிறார்களா? அதற்கு கும்பாபிஷேகம் செய்ய போகிறார்களா? அப்படியே இருந்தாலும் அதில் உங்களுக்குப் பிரச்சினை  எப்படி வந்தது?” என்றார் சிரித்தபடி நாரதர்.

“ உம் குசும்பு உன்னை விட்டு போகாதோ? இதுவா என்னை நக்கலடிக்கும் தருணம்?” கோபப்பட்டார் யமதர்மர்.

“ குசும்பு, நக்கல், நையாண்டி, கலகம் எல்லாம் என் கூடவே பிறந்த குணங்கள். அவை எல்லாம் எந்த ஜென்மத்திலும் என்னை விட்டு போகாது. சரி, உங்களுக்கு பூலோகத்தில் இருந்து என்ன பிரச்சினை வந்தது?” என்றார் நாரதர்.

“பூலோகத்தில் உன்னைவிட ஒரு மாபெரும் குசும்பன், சரியான கலகக்காரன் ஒருத்தன் வசிக்கிறான். அவனால்தான் இப்போ பிரச்சினையே!” என்றார் யமதர்மர்.

‘ஆஹா… ஒரு பூலோக வாசியால் யம தர்மபிரபுவுக்கே பிரச்சனையா? அடடா… கேக்கவே சுவாரஸ்யமாக இருக்கும் போல இருக்கே… சரி… சரி… இன்னைக்கு யமலோகத்தில் நமக்கு நன்றாக பொழுதுபோகும் போலிருக்கே!’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார் நாரதர்.

“ பிரபு, யார் அந்த மானிடன்? பூலோகத்தில் எங்கே இருக்கிறான்? அவனால் உமக்கு என்னப் பிரச்சினை சொல்லும்… யம தர்மருக்கு ஒரு பிரச்சனை என்றால் அது எனக்கும் வந்த ஒரு பிரச்சினை மாதிரிதான்” என்று தைரியம் சொன்னார் நாரதர்.

லேப் டாப்பில் திருட்டு விசிடி டாட் காமில் சித்திர குப்தர் கோட் படம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரை கவனித்த நாரதர், “சித்திரகுப்தா, பூலோகத்தில் ஒரு மானிடனால் பிரச்சினை வந்திருக்கிறதாமே, யார் அந்த மானிடன்? எங்கே இருக்கிறான் என்பதை கூகுள் மேப்பில் சர்ச் பண்ணி சொல்லும்” என்றார் நாரதர்.
சித்திரகுப்தர் கூகுளில் தேடினார்… தேடினார்… தேடினார்.

“ பிரபு, கண்டுபிடித்துவிட்டேன்! அது பூமியில் ஜாம்புதீவில் பாரத கண்டத்தில் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்கண்ணபுரம் என்ற கிராமத்தில் வசிக்கிறான் அந்த மானிடன்” என்றார் சித்திரகுப்தர்.

“ உங்களுக்குப் பிரச்சினை தந்துகொண்டிருக்கும் மானிடனை கண்டுபிடித்தாகி விட்டது. இப்போது சொல்லும் அவனால் உமக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டார் நாரதர்.

“ பூலோகத்தில் இருக்கும் மானிடர் எல்லாம் பூலோகத்தில் இருக்கும் கோயில்களில் உள்ள தெய்வங்களை வழிபடுகிறார்கள். இவனோ அந்த தெய்வங்களை எல்லாம் விட்டுவிட்டு போயும் போயும் என்னை தினம் தினம் வழிபடுகிறான். என்னை நினைத்து எப்போதுமே தியானம், தபஸ் செய்கிறான். அவன் என் மேல் வைத்திருக்கும் பக்தியைக் கண்டு நானே ஆச்சரியப்படுகிறேன். என்னை நம்பி, என்னை நினைத்து, என்மேல் அன்பு கொண்டு நாளும் வழிபடும் அவனுக்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு ஒன்றுமே புரியமாட்டேங்கிறதே” என்று தலையில் அடித்துக்கொண்டார் யம தர்மர்.

இதைக்கேட்டு திடுக்கிட்டார் நாரதர்.‘ஆஹா! இது பெரிய வில்லங்கம் மாதிரி தெரியுதே! அந்த மானிடன் நம்மைவிட பெரிய கலகக்காரனாக இருப்பான் போலிருக்கே! சபாஷ்!’ என்று மனதில் நினைத்தார் நாதர்.

“ என்ன நாரதரே மவுனமாக இருக்கிறீர்கள்?  மானிடர்கள் எல்லாம் என்னை நினைத்தாலே போதும் மரணத்திற்கு அஞ்சி அஞ்சி அழுவார்கள். என்னை பார்க்கவே யாரும் விரும்பமாட்டார்கள். என் வரவையும் யாரும் எதிர்நோக்க மாட்டார்கள். ஆனால், இந்த மானிடன் மட்டும் என்னைப் பார்க்க வேண்டும். நேரில் தரிசிக்க வேண்டும் . வரங்கள் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேனே… நான் இப்போ என்ன பண்றது?” என்றார் யமதர்மர்.

“ சரி, அவனுக்கு தரிசனம் கொடுத்துவிட வேண்டியதுதானே! பிரச்சினை தீர்ந்துவிடுமே!” என்றார் நாரதர்.

“ அது எப்படி முடியும்? நான் யாரைப் பார்த்தாலும் அவர்களுக்கு மரணம் வந்துவிடுமே. ஒருவன் இறக்கும் நேரம் வந்தால் தானே நான் அவனை சந்திக்க முடியும். யம தர்ம விதிப்படி அவன் ஆயுள் காலம் முடியாமல் இருக்இம் போது உயிரோடு இருக்கும் போது, நான் அவனை சந்திக்க இயலாதே!” என்றார் யமதர்மர்.

“ உங்கள் சட்டங்கள் எல்லாம் ரொம்ப பழசு… சட்டத்தை திருத்துங்கள் பிரபு.
நரலோகம் என்பது செவ்வாய்க்கிரகம் என்பதெல்லாம் இப்போது மனிதர்களிடம் செல்லுபடியாகாது. இப்போ, உங்க சட்டப்படி நரகலோகத்தில் மானிடர்கள் கிரியோசிட்டி விண்கலத்தை ஆய்வுக்கு அனுப்பி, செவ்வாயில் தண்ணீர் இருக்கிறது… பெரிய வறண்ட ஆறு இருக்கிறதை எல்லாம் கண்டுபிடிச்சிட்டாங்க. நரகத்தில் கொதிக்கும் எண்ணை கொப்பரையில் மனிதர்களை வறுப்பதெல்லாம் இல்லை. அதெல்லாம் டூபாகூர் என்ற விஷயம் கூட மனிதர்களுக்குத் தெரிந்து விட்டது. இப்பவும் நீங்க, அதே பழைய சட்டத்தை வைச்சிக்கிட்டு என்ன செய்யமுடியும்? சட்டத்தைத் திருத்தினால் நீங்கள் பூலோகம் சென்று, அந்த மானிடனை சந்தித்து அவனுக்கு ஆசிவழங்கலாம்” என்று யோசனை சொன்னார் நாரதர்.

யமலோக சட்ட திட்டங்கள் அதிரடியாக திருத்தப்பட்டது. திருத்திய புது சட்டப்படி யம தர்மர் பூலோகம் புறப்பட்டார். கூடவே நாரதரும் வந்தார்.
காற்றில் ஜெட்டாக பறந்தார் யமதர்மம்.

இந்தியா- தமிழ்நாடு- நாகப்பட்டினம்- திருக்கண்ணபுரம். சரியாக இடம் கண்டுபிடித்து, பூலோகத்தில் இறங்கினார்கள் யம தர்மரும் நாரதரும்.
அந்த ஊரில் ஒரு ஓலைக்குடிசையில் பெரிய எருமை அதில் யமதர்மம் அமர்ந்திருப்பதுபோல் ஒரு படம் இருந்தது. அதற்கு விதவிதமான மலர் மாலை சூட்டி, விதவிதமான பலகாரங்கள் வைத்து, தீபாராதனை செய்து கொண்டிருந்தான் அந்த மானிடன்.

இதைப்பார்த்ததும் யமதர்மம் உச்சிக்குளிர்ந்து போனார்.

“அடாடடா… என்ன என் மீது பக்தி, அன்பு…” மெய்சிலிர்க்கிறதே என்றார் யமதர்மம்.

“பிரபு, உங்கள் உருவம் மானிடனுக்குத் தெரியும்படி கிருபை செய்யுங்கள். ஆசி வழங்குங்கள். ஆனால், வரம் எதுவும் கொடுத்துவிடாதீர்கள். வரம் கொடுத்தால் உங்களுக்கு நீங்களே சொந்த செலவில் சூன்யம் வைத்ததுபோலாகிவிடும்.” என்றார் நாரதர்.

“பக்தா! நான் யமதர்மன் வந்திருக்கேன்!”

“ என்ன, நான் வணங்கும் யமதர்மனா… நம்பமுடியவில்லையே!” என்று தொபுக்கடீர்ன்னு யமதர்மர் காலில் விழுந்தான் மானிடன்.

“ பக்தா, உன் பக்தியை மெச்சுகிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள்! பணமா, பொன்னா, பொருளா, நீண்ட ஆயுளா என்ன வேண்டும் கேள் தருகிறேன்” என்றார் யம தர்மர்.

“ அதெல்லாம் வேண்டாம். எனக்கு மூன்று வரங்கள் தான் வேணும்” என்றான் மானிடன்.

“ வரம் எதற்கு? வேறு ஏதாவது கேளேன்” என்றார்.
“வரம் கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள். இல்லை என்றால் எதுவும் வேணாம். எப்போதும் போல உங்களை வழிபட்டுகொண்டிருக்கிறேன்”
“சரி… சரி… என்ன வரம் வேண்டும் கேள்”
“ முதல் வரம் நான் கேட்கும் வரத்தை கொடுப்பேன் என்று உறுதியளிக்க வேண்டும்.”
“சரி”
“இரண்டாவது வரம். மற்ற தெய்வங்களுக்கு கோயில் இருப்பது போல உனக்கும் ஊரெங்கும் கோயில் இருக்க வேண்டும். அதில் நீ அருள்பாலிக்க வேண்டும்”
“சரி”
“மூன்றாவது வரம் கேட்கிறேன். உன்னை யாரெல்லாம் வழிபடுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மரணமே வரக்கூடாது.”
இப்படி மானிடன் கேட்பான் என்று யமன் எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்ட யமன் வேறு வழியில்லாமல் மூன்று வரங்களையும் கொடுத்தார்.
மானிடனை ஆசீர்வதித்துவிட்டு புறப்பட்டார்.

“பிரபு, மானிடன் கேட்ட வரங்களைக் கொடுத்து விட்டீர்கள்! நல்லது. இனிமேல் உங்களுக்குப் பிரச்சினை இல்லை. உங்களுக்கு வேலையும் இல்லை. நீங்கள் உங்கள் வேலையை ராஜினாமா செய்துவிடலாம்”

“நாரதரே,என்ன சொல்கிறீர்கள்? புரியும்படி சொல்”

“ இனி, பூலோகத்தில் தெருவெல்லாம் உனக்கு கோயில் கட்டப்படும். யார் தான் சாவதற்கு விரும்புவார்கள்? உன்னை எல்லாரும் வழிபடுவார்கள். நீங்கள் யார் உயிரையும் பறிக்க முடியாது. பிறகென்ன… உமக்கு ஏது வேலை?”
“ இப்போது இது வேறு பிரச்சினையா? நான் என்ன செய்யணும் நாரதரே?”
“ உமது பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள். இனிமேல் யாரும் பூமியில் இறக்க மாட்டார்கள். நீங்களும் அவர்கள் உயுிரை எடுக்க முடியாது. சித்ர குப்தனுக்கும் உங்களுக்கும் இனி வேலை கிடையாது.’’ என்று சிரித்தார் நாரதர்.

‘‘அப்படியானால் இந்த யம லோகத்தை என்ன செய்வது? சித்ரகுப்தர் என்ன செய்வார்?’’ என்றார் யம தர்மர்.

‘‘ அதற்கெல்லாம் நீங்கள் ரொம்ப யோசிக்க வேண்டாம். வெரி சிம்பிள். இந்த யமலோகத்தை டூரிஸ்ட் ஸ்பார்ட்டாக அறிவித்துவிடுங்கள். டூரிஸ்ட் கைடு ஆக  சித்ரகுப்தரை பணியமர்த்துங்கள். நீங்கள் ஜாலியாக வேறு கிரகத்துக்கு குடியுரிமை பெற்று சென்றுவிடுங்கள்.” என்றார் நாரதர்.
நாரதர் இப்படி சொன்னதும் யம தர்மர் அதிர்ந்தார்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

You may also like

Leave a Comment

error: Content is protected !!