மழை வேண்டி மாரியைத் தொழுதார்கள்
மண்பானை ஏந்தி ஆடினார்கள்!
விதைகளை வணங்கிப் போற்றிடவே
விளைந்தது கரகம், ஓர் கலைவடிவே!
தோண்டிக் கரகம் மண்ணின் வாசம்
செம்புக் கரகம் செம்பொன் நேசம்!
சக்தி கரகம் பக்திப் பிணைப்பு
ஆட்டக் கரகம் ஆடலின் சிறப்பு!
நையாண்டி மேளத்தின் தாளமங்கே
நாதஸ்வரத்தின் இன்னிசையும் கூட!
தவிலும், பறையும், உடுக்கையும் சேர்ந்து
தரணியெங்கும் கானம் பரப்பும்!
கண்கள் கவரும் வண்ண உடைகள்
தலையில் கரகமோ அசையாத மலை!
நளினமாய் நடக்கும் காலாட்டம்
நாட்டுப்புறக் கலையின் பேராட்டம்!
வரலாற்றில் ‘குடக்கூத்து’ என்றே
வாழ்த்திய சிலம்பின் சொல்வளமே!
தலைமுறை தாண்டி வாழ்ந்திடும் கலை
தமிழர் பண்பாட்டின் தகைமையே!
இ.டி.ஹேமமாலினி