எழுதியவர்: புனிதா பார்த்திபன்
சொல்: ஊஞ்சல்
சின்னக் குழந்தை முகத்தில் அத்தனை ஆனந்தம் பெருகியோட ஊஞ்சலில் கொலுவீற்றிருந்த
அம்மனைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் ராகவன். எத்தனை அழகு
கொஞ்சுகிறது அவள் முகத்தில். அந்தச் சிரிப்பு! ஈடுமுண்டோ அதற்கு. கருவறைக்குள் அமர்ந்து
காவல் காப்பவள்தான், இன்று திருவிழாவிற்காக ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறாள்.
எப்படி இத்தனை நாட்கள் கருவறைக்குள் இருந்த போது இல்லாத பூரிப்பு, மகிழ்ச்சி இன்று இவளிடத்தில்.
செய்து வைத்த செப்புச் சிலையின் சிரிப்பு மாறுமா! மீண்டும் மெய்மறந்தார்.
பெண்கள் ஊஞ்சலை மெல்ல ஆட்டினர். பச்சைப் பட்டுக்காரி, ஊஞ்சல் ஆட ஆட இன்னும்
உற்சாகம் கொண்டாள்.ீ
“நல்லா ஆட்டுங்கம்மா, இது தானே அவ ஆழ்மனசு ஆசை. ஆசை
நிறைவேறுனதும் எப்படி சிரிக்குறா என் தாயி. இதப் பார்க்க இந்தப் பிறப்பு போதும்மா” என
ஆனந்தப் பெருக்கோடு சொல்லி நகர்ந்த பூசாரியின் குரல் காதில் விழுந்த போது, “அப்பா, சின்ன
வயசுல இருந்தே இது என்னோட ஆசைப்பா. நான் பாடணும்ப்பா. பெரிய சேனல்ல இருந்து
வாய்ப்பு வந்துருக்கு. ப்ளீஸ்ப்பா” எனக் கெஞ்சிக் கேட்டு தன்னிடம் அனுமதி மறுக்கப்பட்ட
மகளின் முகம் ராகவனின் முன் வந்து சென்றது.
கருவறையையும், ஊஞ்சலையும் ஆழ்ந்து பார்த்து சிந்தையோடு கோயில் வாயிலை அடைந்த
ராகவன் வாசலிலிருந்து திரும்பிப் பார்த்தார். ஊஞ்சலில் ஆடியவளின் முகத்தில் மகள் தெரிந்தாள்
அதே சிரிப்போடு!
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.