எழுதியவர்: கௌரி சங்கர்
சொல்: அன்னாசி
குட்டியானை மூலம் வந்து இறங்கிய பழக்கூடைகளை வைத்து விட்டு, பழங்களை அடுக்க தொடங்கினான் 18 வயது வடிவேலு. அண்ணாச்சி கடையில் அவன் சேர்ந்து இரண்டு நாட்களாகின்றன, இரண்டு மாதங்களாக செய்த விடா முயற்சியால்.
“தம்பி,. அன்னாசி இருக்கா ?”
வடிவேலுவுக்கு முன்பு நின்று கொண்டு இருந்தார் ஒரு பெண்மணி.மலையாளம் கலந்த தமிழிலில் அவர் குரல் ஒலித்தது.
(கால்ல விழாத குறையா வேலைக்கு சேர்ந்திருக்கேன். இந்த பொம்பள மரியாதை இல்லாம அண்ணாச்சியை “இருக்கா”ன்னு கேக்குறா ?)
எம்மா; மரியாதையோடு பேசு.? அவரு என்ன உங்க வூட்டு ஆடுன்னு நினைச்சியா ?
அன்னாசி இருக்கான்னு கேட்டதுல என்னப்பா தப்பு ?
அண்ணாச்சியிடம் நல்ல பேரை வாங்கிவிடவேண்டும் என்ற ஆவலில், வடிவேலு சண்டையை ஆரம்பித்தான்.
வெறுத்துப்போன பெண்மணி திரும்ப எத்தனிக்க, அங்கு வந்த அண்ணாச்சி விசாரித்து, மேலடுக்கில் இருந்த அன்னாசி பழத்தை எடுத்துக்கொடுக்க சொன்னார் வடிவேலுவிடம்.
மூன்று பனை தூரத்திற்கு நீண்டிருந்த அவனுடைய முகம் மூஞ்சுறு சைஸுக்கு சிறுத்துப்போனது.
முற்றும்.
