படைப்பாளர்: அனுஷாடேவிட்
கி.பி. 2084
வானியல் ஆய்வுகூடத்தில் அமர்ந்து புவியை ஒத்த வேறு உயிர் வாழும் கிரகங்கள் பற்றிய ஆய்விலிருந்த வானியற்பியல் விஞ்ஞானி அதழினியின் விலோசனங்கள் வியப்பில் விரிந்தன.
தகவல் கோப்பின் உதவியுடன் தொலைநோக்கியினால் கேலக்சியை வலம் வந்தவளை நோக்கி ‘என்பு’ எனப்படும் உடலின் அஸ்தியை உடைய சிகையில்லா சிரத்தின் சாயலுடன் மயிர் வளைவு இல்லா விழிகளும் வற்றிய கதுப்புகளும் நலிந்த நாசியையும் மெலிந்த தேகமும் செவ்வூதா
வண்ணத்துடனும் ஒளி வேகத்தில் ஏலியன் வந்தது.
வியப்பகலாத பார்வையுடன் பிரத்யேக மொழிபெயர்ப்பு கருவியை செவியில் பொருத்தினாள். “எதற்காக எங்கள் கிரகத்தை கண்காணிக்கிறீர்கள்?” “உயிர் வாழும் கோள்களை கண்டறிய”
“அறிந்து…?” “மனிதர்கள் வாழும் சூழலமையுமா என்று ஆராய்…”
“ஆராய்ந்து…?” “குடிபெயர்வோம்” “ஏன்? ஞாலத்தை வளமிழக்க செய்தது போதவில்லையா? ஏனைய கிரகங்களிலும் நெகிழிகளை
விதைத்து இயற்கையை புதைத்து வளமிழக்க செய்ய போகிறீர்களா?”
“பிதற்றாதே நோஞ்சானே”
“யான் ஜோஜி-22A. நான் வினவியதில் என்ன ஐயமுனக்கு?”
“உனக்கு என்ன தெரியும்?”
“அனைத்தும் அறிவோம். எங்களுக்கு இடர் வராமல் காத்திட திசையெங்கும் கண்காணிப்பாளர்
இருப்பர். உங்கள் பார்வை எங்கள் மீது விழவே விசாரணை செய்யவே வந்தேன்…
பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான கிரகங்கள் சிந்தி சிதறி ஒளிர்ந்து வலம் வருகின்றன. வேதிம வினையின் உரு ஆன உயிர்சுட்டிகள் நிலைத்து வாழ ஆக்ஸிஜன், சரியான வெப்ப-குளிர் நிலை வேண்டும்.
உட்கொள்ளும் இயற்கை உணவுக்கும் பதமான வெப்ப-குளிர்நிலையும் துத்தமும் வேண்டும்.
அது கிடைக்காதவாறு மண்வளத்தை நெகிழியினால் அடைத்து உயிர் சுட்டிகளை உயிர் நீக்க செய்து மீண்டும் புற கிரகங்களை நாட நினைப்பது சரியா?”
சாட்டையடி கேள்விகளை உட்கொணர்வதற்குள் உருண்டு திரண்டு ஒன்று விழுந்தது தட்டையான சிகையில்லா சிரத்துடன் ஆக்டோபஸ் கால்களை கொண்டு இளஞ்சிவப்பு நிறத்தில்.
“ஜோஜி-22A உடனே அழைத்து வர உத்தரவு”
“தேடலை கைவிட்டு உங்கள் கிரகத்தின் வளத்தை செம்மைபடுத்துங்கள்”
என்று ஒளியின் வேகத்தில் செல்லும் இரு ஏலியன்களையும் விலோசனங்களில் நிரப்பியவள்
புவியை காக்க அடுத்த திட்டமிடலை குறிப்பெடுத்தாள் அதழினி.
முற்றும்.