படைப்பாளர்: முனைவர் இரா.நா.வேல்விழி
இன்றைய அறிவியல் வகுப்பையும் ஆசிரியரையும் மிகவும்
பிடித்தது இனியனுக்கு. தான் விரும்பும் எந்திர மனிதனைப்
பற்றியது என்பதாலும், எந்திர மனிதனை உருவாக்க வேண்டும்
என்ற கனவு இருந்ததாலுமே. அதுமட்டுமல்ல தனிமையின்
கொடுமையை உணர்ந்தவன். தன்னோடு கொஞ்சி விளையாட,
சண்டையிட, கதைப்பேச யாருமில்லை என்ற ஏக்கம் தான் காரணம்.
இதே கற்பனையோடு உறங்கச் சென்றவனின் கனவு உயர
உயர சென்றது. விண்ணில் பறந்தான், விண்மீன்களோடு
விளையாடினான். நிலாப்பெண்ணோடு நின்று பேசினான். சட்டென்று
உடலில் மின்சாரம் பாய்ச்சியது போல் இருந்தது. மின்னல்
வேகத்தில் ஒர் உருவம் இவனைக் கடந்து சென்றது. இருளிலும்
இருண்டது கண்கள். சுதாரிப்பதற்குள் மூர்ச்சையானான். நிலவின்
தழுவலில் மெல்ல கண்விழித்தான்.
“இனியா எழுந்திரு பயப்படாதே இவன் வேறு யாருமில்லை
ஏலியன் தான் என்றது நிலா”. இவனுடன் விளையாடுகிறாயா
உனக்கேற்ற நண்பனாகவும் இருப்பான் அறிமுகம் செய்து வைக்கவா
என்றும் கேட்டது. பயம் கலந்த சம்மதத்துடனே தலை அசைத்தான்
இனியன். ஏனென்றால் ஆனந்தவிகடன் அட்டைப்படத்தைப் பார்த்தது
போலவே இருந்தானவன்.
அப்படியென்றால் இவனை என் வீட்டிற்கு அழைத்துப்
போகவா என்றான். கேட்டு முடிப்பதற்குள் ஏலியனுடன் வீட்டிற்குள்
வந்தவியப்பில் விரிந்த கண்கள் இமைக்க மறந்தன. ஏதேதோ
பேசினான்,விளையாடினான். வெளியில் சென்று ஊரைச் சுற்றியும்
காண்பித்தான். அதுவரை இறுகபற்றிய கைகளை உதறியது ஏலியன்.
உன்னுடனிருந்த மகிழ்ச்சி போதும். இனி என்னால் இங்கிருக்க
முடியாது என்றது.
வேற்றுக்கிரகவாசியாக இருந்தாலும் எங்களுக்குள் எந்த
பேதமுமில்லை.அப்பப்பா எத்தனையெத்தனை சாதிகள் ,சமயங்கள்.
எங்குப்பார்த்தாலும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு,வம்புவழக்கு,
ஏழைபணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு.
அடித்துப் பிழைக்கும் அற்பதர்களாகவல்லவா நீங்கள் வாழ்ந்து
கொண்டிருக்கிறீர்கள்.
எலும்பும் சதையும் அற்றவர்கள் என்றாலும், ஏய்த்துப்
பிழைக்கும் எண்ணமற்றவர்கள். ஒருநாளிலே மூச்சு முட்டுகிறது.
எப்படிதான் நீ இங்கு வாழ்கிறாயோ. ஒரேயொரு வேண்டுகோள்
நீங்கள் சந்திரனில் குடிபுக திட்டமிருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
அங்கு வந்து எங்கள் நிம்மதியையும், அமைதியையும் கெடுத்து
விடாதீர்கள். என்று கூறி விருட்டென்று பறந்தான் ஏலியன். பதறி
எழுந்தவனிடம் பணிவாக பேசியது மனம்.
இனியா; “ உன் உலா விண்ணிலல்ல என்னில். உன்
மனத்தில் ஓடும் நிகழ்வுகளே கனவாய் ஏலியனுடன் நட்புக்கொள்ளச்
செய்திருக்கிறது”. இனியும் தாமதிக்காதே உனக்கேற்ற சமுதாயத்தை
நீயே மாற்று; மாற்றமொன்றே மாறாதது என்றது மனம்.
முற்றும்.