படைப்பாளர்: நாபா.மீரா
மூச்சு வாங்கியது எனக்கு , இருந்தும் நில்லாது ஓடினேன் நான் .
பதறிய மானசா மெதுவாகக் கண்களைத் திறக்க … சே… கனவா …சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தவள் அலுவலகம் செல்லத் தயாரானாள்.
நல்ல வேலை, கை நிறைய சம்பளம் .. என்ன பிரயோசனம்?
மலைகளின் ராணியான ஊட்டியில் நடந்த நிலச்சரிவுச் சம்பவம் … ஒரே இரவில் மானசாவை அனாதையாக்கிவிட்டது.
ஊரில் இருந்த சொத்துக்களை விற்று அலுவலகம் இருந்த DLF வளாகம் அருகே சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்கி செட்டில் ஆகிவிட்டாள்.
ஊம் … வீக் எண்ட் … ப்ராஜெக்ட் லீட் வர்ஷா தெளிவாச் சொல்லிட்டாங்களே.
இங்க பாரு மானசா … ஷார்ட் டெர்ம் ப்ராஜெக்ட்ஸ் நெறைய வந்திருக்கு …
வீக் எண்ட் வேலைகள் நெறைய இருக்கும் …. பக்கத்துல இருக்குறதால உன்னோட உதவி அதிகம் தேவைப்படுது … வீக்லி ரெண்டு நாள் நீ லீவு எடுத்துக்கலாம் …
போரூரில் தன் பிளாட்டில் … படுக்கையில் கிடந்த நிவாசுக்கு, பிரம்மமுகூர்த்த வேளையில் … முகம் தெளிவாகத் தெரியவில்லை. டியர், மை லவ், உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியல .கட்டிப்பிடித்து முத்தமாரி பொழிந்து, அவனுடன் ஒன்ற அந்த ஆலிங்கனத்தில் சில கணங்கள் சொர்க்கத்துக்கே சென்று மீண்டான் .
ஊம் … கல்யாணம் … தாம்பத்தியம் எல்லாம் நமக்கு இப்படிக் கனவாவே போயிடுமோ ? கனவில் வந்தவ முகம் தெரிஞ்சாலாவது … தன் பைத்தியக்காரத்தனத்தை எண்ணி தலையில் குட்டிக்கொண்டு படுக்கையைவிட்டு எழுந்தான் நிவாஸ்.
நிவாஸின் பூர்வீகம் மதுரை. கண்ணுக்கு லட்சணமாகவும் , நல்ல வேலையிலும் இருந்த மகனுக்குத் திருமணம் கூடி வராததில் … வருத்தமாகி .. வயோதிகமும் சேர நோய்ப்படுக்கையில் விழுந்தனர் அவனது பெற்றோர்.
கூடவே தங்கி பார்த்துக்கொள்ள ஆள் ஏற்பாடு செய்தவன்.. முதலில் அடிக்கடி ஊர் சென்று வந்தான். தன்னைப் பார்கையில் அவர்கள் முகம் சோர்வதைக் கண்டவன் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் செல்வதை நிறுத்திக்கொண்டான் .
ஐயோ நேரமாயிடுச்சே …. அவசர அவசரமாக ரெடியாகி அலுவலகம் கிளம்பினான் .
DLFஐ.டி .பார்க்கில் உள்ள கம்பெனி ஒன்றில் ரோஸ்டர் பிளானில் வேலை பார்க்கிறான் நிவாஸ்.
அலுவலகத்தில் அன்று செம்ம டைட்… வீடுவந்து அடித்துப்போட்ட மாதிரி உறங்கினாள் மானசா. அலுவலக ஓய்வு அறையில் ஒப்பனை செய்து கொள்வதற்காக கண்ணாடியைப் பார்த்தவள்…
திகில் கூட்டும் தோற்றத்துடன் …. கைப்பையைக் கூட எடுக்க மறந்து ….அவசர அவசரமாக ஓடி வந்தவளை … ஒரு கரிய நெடிய உருவம் முரட்டுத்தனமாய் அணைக்க ….
ஐயோ …. என்னை ஒன்றும் செய்துவிடாதே ப்ளீஸ் … என்று கதறிக்கொண்டே … கண்களைத் திறந்தவள் … தன் பெட்ரூமில் இருப்பதை உணர்ந்தாள் .
கடிகாரம் பார்க்க … மணி நடுநிசி பன்னிரண்டு. முகம் கழுவி …மீண்டும் படுக்கைக்கு வந்தவளுக்கு … உறக்கம் சதி செய்ய … தொலைக்காட்சி ஆன் செய்து …மனம் அதிலும் லயிக்காமல் … கொஞ்சநேரம் தனக்குப்பிடித்த மில்ஸ் அன் பூன் கலெக்ஷன் எடுத்துப் புரட்டியவள்… தன்னையறியாமல் உறங்கிப்போனாள்.
வீடு வந்த நிவாஸ் .. சாப்பாட்டுடன் இரண்டு முட்டை ரோஸ்ட் செய்து உண்டு… சிறிதுநேரம் டிவி பார்த்தவன் … மனத்தில் ஒயின் அருந்தும் ஆசை வர .. லைட்டாக இரண்டு பெக் குடித்துவிட்டுப் போய்ப்படுத்தான் .
அன்றும் … கனவில் .. அந்த தேவதையோடு கூடிச் சல்லாபித்தான் நிவாஸ். இருவரும் உறவாடிக் களைத்தனர்…நிவாஸின் கனவும் கலைந்தது. நிராசையாக உணர்ந்தான் அவன்.
ஒருபுறம் ஆபீஸ் வொர்க் பிரஷர் … மறுபுறமோ… தினம் தினம் …. திகிலூட்டும் கனவுகள் …. கொஞ்ச நாட்களாத்தான் இப்படி…என்னன்னே புரியல … மிகவும் சோர்வாகவும், களைப்பாகவும் உணர்ந்தாள் மானசா.
ஊம் … அந்த அழகிய தேவதை… அவளோட சல்லாபிக்கிற தருணங்கள் … தித்திப்பாத்தான் இருக்கு. ஏதாச்சும் ஒரு சக்தி அந்த அழகிய ராட்சசிய என் கண்ணுல காமிச்சா கடத்திட்டு வந்து ….. ஏற்கனவே ஏக்கத்தில் இருந்த நிவாஸ் மேலும் சோர்ந்தான் .
ஊம்…இருபத்திநான்கு மணிநேரமும் தூங்கிக்கிட்டே இருந்தா.. அவ கூடவே இருக்கலாம் ..
ரியாஸ் டார்லிங் …ரொம்ப ஹாப்பியா இருக்குடா…நாம நெனைச்சா மாதிரியான வாழ்க்கை …. காற்றில் அசைந்தன மரத்தில் இருந்த இலைகள் .ஆமாண்டி வர்த்தினி மை ஸ்வீட் ஏஞ்சல் …. .நீ பக்கத்துல இருந்தா நா கள் குடிச்ச வந்தா மாறிடறேண்டி….
மீண்டும்…கலீர்… கலீர் என்ற பெண்ணின் சிரிப்பொலியுடன் இலைகள் அசைய …. சற்று நேரம் அங்கே ஒரு அமானுஷ்யம் கலந்த மௌனம் .
டேய் ரியாஸ் …நாம ஒரு வேளை …தப்புப் பண்ணறோமா? அதுவும் அந்தப் பொண்ணு ஸ்ட்ரெஸ்டா ….பீல் பண்ணறப்போ எனக்கு ரொம்ப கில்டியா இருக்குடா …. ஒத்தை ஆளா கவனிக்க யாருமே வேற இல்லாம இருக்கு பாவம்…
என் நிலைமையும் அதுதானே டார்லிங் …உன் ஆளு திகில் கூடி டென்ஷனாயிடுது… என் ஆளு பொம்பள சுகம் கிடைச்ச ஏக்கத்துல நிராசையா பீல் பண்ணறாப்பல …..
நாம இதுக்கெல்லாம் கவலைப்பட்டா வேலைக்காகாது டார்லிங் …இதோ கிட்டத்தட்ட ஆறு மாசம் ஓடியே போச்சு … இன்னும் ஒரு ஆறு மாசம் அவ்வளவுதான் …
நாம ஜாலியா சல்லாபிக்கறதுக்கு உடல்கள் தேவைன்னு முடிவெடுத்துத்தானே இவங்களைச் சரியாத் தேர்ந்தெடுத்தோம் …….
டென்ஷன் ஆகாதேடா ரியாஸ் …ஊம் .. நாம மட்டும் 2015 வெள்ளப் பேரிடர்ல மாட்டி …இந்த DLF வளாகத்துல அநியாயமாச் சாகாம இருந்திருந்தா … அடுத்து வந்த தை மாசத்துல கல்யாணம் பண்ணி … இந்நேரம் குழந்தை குட்டிகளோட சந்தோஷமா இருந்திருப்போம்
அந்த நாள நெனைச்சா … ஆத்திரமாவும்… அழுகையாவும் வருதுடி வர்த்தினி … குரல் கம்ம ரியாஸ் கூற …மீண்டும் அந்த வளாகத்தில் இருந்த இலைகள் காற்றில் ஆட…. சனி, ஞாயிறுகளில் அலுவலகத்துக்கு வருகை தரும் மானசா மற்றும் நிவாசுக்காகக் காத்திருக்கத் தொடங்கின அந்த இரு ஆவிகளும். அவர்கள் வீடு திரும்பும் ஆளரவமற்ற நேரம்தான் அவை சல்லாபிக்க ஏற்ற தருணம் .
பாவம்… மானசா..நிவாசுக்கு… இவை எதுவுமே தெரிந்திருக்கவில்லை. சொல்லப்போனால் அவர்கள் ஒருவரை ஒருவருவருக்கு அறிமுகமே இல்லை.
கிளையண்ட் மீட்டிங்கிற்கு நேரமாகிவிட்ட பரபரப்பில் நடந்த மானசா தன் ஐ.டி. கார்டு கீழே விழுந்ததைக் கவனிக்கத் தவறினாள்.
எக்ஸ்க்யூஸ் மீ மேம் … உங்க ஐ.டி.. நிவாஸ் கொடுக்க
நன்றி கூறிவேகமாக நடந்தாள்
உலக மகா நடிப்புடா சாமி …..இதுங்க ரெண்டும் சனி, ஞாயிறு …. அந்தப் பார்க்கில அடிக்கிற கூத்துக்கு அளவே இல்லே…ஆனா… தெரியாத மாதிரியே நடிக்குதுங்க ….
அந்த வளாகத்தின் வாட்ச்மேன் … கள்ளத்தனமாக — இவர்களை நோட்டமிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் . அவன் என்ன ஜோசியமா கண்டான் ….உண்மையிலேயே அவர்களுக்கு ஒருவரையொருவர் அறிமுகமில்லையென்று.
வர்த்தினி டார்லிங் … இந்த ஒரு வருஷம் ரொம்ப ஜாலியா … என்னமோ ஒரு ஆத்மதிருப்தி கெடைச்சுட்டா மாதிரி ஒரு பீலிங் … நாம இவங்கள விட்டு விலகிடலாம் … நீ வேற உன் ஆளு ரொம்ப பயப்படுதுன்னு சொல்றே ….
சரிடா …ரியாஸ் ….சொன்ன வர்த்தினியின் குரலில் பழைய கலகலப்பில்லாமல் …. ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி கூடியிருந்தது .
தன்னை எதிர்நோக்கி இருக்கும் அதிர்ச்சிஅறியாமல் …. சைக்கியாடிரிஸ்டைப் பார்க்கக் கிளம்பினாள் மானசா .
உங்க கனவு, பயத்துக்கெல்லாம் தனிமைதான் காரணம் . மிஸ் மானசா அதோட …நீங்க கர்ப்பமா வேற இருக்கீங்க …. சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோங்க ….
துல்லியமாக அதிர்ந்த மானசா, இது எப்படிச் சாத்தியம் …குழம்பினாள். திடீரென்று அவசரமாக ஆபீஸ் வரச்சொல்லி வர்ஷா அழைக்க … ரோபோ மாதிரி வர்ஷா கேட்டதற்கெல்லாம் பதில் சொல்லிக் கிளம்பினாள் .
கால் போன போக்கில் நடந்தவள் … அந்த பிளாட் வாசலில் சென்று … காலிங் பெல்லை அழுத்த ….கதவு திறந்த நிவாஸ் … நீங்க யாரு …உங்களுக்கு என்ன வேணும் …குழப்பத்துடன் கேட்க ….ஏற்கனவே மோன நிலையில் இருந்த மானசா …அவன் மீதே மயங்கிச் சரிய ….அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்தவாறு உள்ளே சோபாவில் அமர்த்தி…. தண்ணீர் தெளித்தான்.
மயக்கம் கலைந்து விழித்தவள் … ரியாஸ் வந்துட்டீங்களா என்றவாறு அவனைக் கட்டியணைக்க ….
நா வேண்டிக்கிட்ட மாதிரி ஒரு வேளை …ஏதாச்சும் சக்தி …இந்த தேவதையை என்கிட்டே கொண்டு வந்திருச்சோ ….ஆனா …ரியாஸ்னு ஏதோ பேர் சொன்னாளே…. ரொம்பச் சின்னப் பொண்ணா வேற தெரியறா …
சாப்பிட லைட்டாகக் கொடுத்தான் . சட்டென்று சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்தாள். சோர்ந்தவள் …தானாகச் சென்று பெட்ரூமில் படுத்துக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்துக் கண் விழித்தவள் … நீங்க யாரு …என் பெட்ரூமில் எப்படி … அதிர்ந்தாள் மானசா .
ரிலாக்ஸ் ப்ளீஸ் … சற்று முன் நடந்ததையும் … இது தன் பிளாட் என்றும் கூற… குற்றஉணர்ச்சியில் கூனிக் குறுகினாள் மானசா.
சார் .. எக்ஸ்ட்ரீம்லி சாரி பார் த இன்கன்வீனியன்சஸ் …நா கெளம்புறேன் .
இப்போ மணி ராத்திரி ஒண்ணு…நா கூட வந்தாலும் சேப் இல்ல …என்னை உங்களோட நண்பனா நெனைச்சு உங்கப் பிரச்சனையைப் பகிர்ந்துக்கலாமே. …
மானசாவின் மனதும் ஆறுதல் தேட …. தன்னைப் பற்றி முழுமையாகச் சொன்னாள். இந்தப் பொண்ணுக்கு இப்படி ஒரு சோதனையா … மலைத்தே போனான் நிவாஸ்.
தன்னைப் பற்றி அவளிடம் பகிர்ந்து சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தான் நிவாஸ். சோர்வில் அவள் உறங்கி …மறுநாள் ஐந்து மணிக்குத்தான் கண் விழித்தாள்.
நிவாஸ் போட்டுக் கொடுத்த காப்பியைக் குடித்தவள்…எனக்குக் கொஞ்சம் சோர்வா இருக்கு …என் பிளாட் வரை துணைக்கு வரமுடியுமா நிவாஸ் ?
வொய் நாட் … மானசா மனசு வைச்சா வாழ்க்கையிலும் துணைக்கு வரத் தயார்தான் …என்ன வயசுதான் இடிக்குது…
நிவாஸ் …நா…நா..இந்த நிலைமையில ….உங்களை எப்படி …தேம்பத் தொடங்கியவளை …இதமாக அணைத்து….நெற்றியில் முத்தமிட்டவன்…. இது நம்ம குழந்தை மானசி …என்று மென்மையாக அவள் வயிற்றிலும் முத்தமிட்டான்.
இந்தக் கண் கொள்ளாக் காட்சியில் ….குற்ற உணர்ச்சி விலகி… மானசாவை உரியவனிடம் ஒப்படைத்த திருப்தியில் காற்றில் கலந்தாள் வர்த்தினி.
முற்றும்.