எழுதியவர்: வானவன் (ஆகாஷ்)
தேர்வு செய்த படம்: படம் 25
மீரா தன் வாழ்க்கையில் எவ்விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள். அலுவலகத்தில் அதிகநேரம் கழித்தாலும், அது அவள் மனதின் வெறுமையை நிரப்பவில்லை. வீடு திரும்பியதும், எப்போதும் போல கண்ணாடியின் முன் நின்று, தன்னுடைய முகத்தைப் பார்த்தாள். ஆனால், இன்று ஏதோ வேறு உணர்ச்சி தோன்றியது. கண்ணாடியில் பிரதிபலிக்கிற முகம் அவளுக்கு அடுத்தவர் முகம் போல தெரிந்தது. புன்னகை கண்டு பிடிக்க முடியாத அவளவுக்கு அவளைவிட்டு தொலைவில் சென்றது போல் உணர்ந்தாள்.
அந்த நொடியில், திடீரென்று அவள் மனதில் ஒரு கேள்வி எழுந்தது!
“நான் கடைசியா எப்போ சிரிச்சேன்?”
அவள் கடைசி சிரிப்பைக் கூட ஞாபகப்படுத்த முடியாமல் குழம்பினாள்.
“குழந்தை பருவத்தில் இருக்கும் கள்ளங்கபடமற்ற சிரிப்புகள் வயதாகி வருவதால் அழிக்கப்பட்டுவிட்டதா? எதற்காக இந்த உலகில் இவ்வளவு சுமைகளைத் தாங்கிக்கொண்டிருக்க வேண்டும்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
கண்ணாடியைச் சற்று நெருங்கிக் கவனித்தபோது, அவள் தன் வாழ்க்கையின் பிளவுகளை கண்ணாடியில் பார்க்கத் தொடங்கினாள்.
எத்தனை தருணங்களை இழந்தேன்? இன்னும் எவ்வளவு கண்ணீர் வடிக்க வேண்டும்? அவள் மனதுக்குள் கேள்விகள் அலைபாய்ந்தன.
அப்போது கைபேசியில் அழைப்பு வந்தது. அவளின் நண்பன் ஆரவ் அழைத்திருந்தான். அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை. அவன் எப்போதும் அவளுக்கு ஆறுதலாக இருந்தவன். அவன் மட்டும் அவள் இதயத்தின் இருண்ட பகுதிகளை நன்கு புரிந்துக்கொண்டு பேசுவான்.
“ஹலோ, ஆரவ்…” என அவள் மெதுவாக பேசத் தொடங்கினாள்.
“மீரா, ஏன் இவ்வளவு டல்லா பேசுற?”
“நான் எனக்கு தெரியாமலே சிரிப்பை இழந்துட்டேன் ஆரவ். எப்போ நான் கடைசி முறை சிரிச்சேன்னு கூட தெரியல. மனசே சரியில்ல”.
“அது எப்படி மா? நீ தான நம்ம ப்ரெண்ட்ஸ் கூட எல்லாம் எப்போதும் ஜாலியா பேசுவ”.
“ஆனா, இப்போ அது தொலைஞ்சிடுச்சு ஆரவ். நான் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழுறேன்னு தெரியல. எல்லாமே வெறுமை தான். என் வாழ்க்கை இப்போ சுமையா தெரியுது. நான் இப்போ ஒரு காத்தாடி மாதிரி. எந்தத் தெசை போறேன்னு கூட தெரியாத நிலை” என்று அவள் கண்ணீர் வடியாமல் சிரிப்பது போல கூறினாள்.
அவன் சற்று அமைதியாக இருந்தான். அவளுடைய வார்த்தைகளை பதினாறாவது முறை கேட்டது போல அவனுக்கு இருந்தது.
“மீரா, நீ எதுக்கு இவ்வளவு வெசனப்படுற? இப்போதைக்கு வாழ்க்கை உனக்கு சுமையா தெரியலாம். ஆனா, அதே வாழ்க்கை உனக்கு ஒரு நாள் சிரிப்பையும் கொடுக்கும்,” என்றான்.
“சிரிப்பு என்றால் என்ன, ஆரவ்? என்னோட சிரிப்பு போய் பல வருசம் ஆச்சு. எப்போ அந்த குழந்தை பருவ சிரிப்பு திரும்ப வரும்? வாழ்க்கை எப்போதும் இதே மாதிரி சுமையாத்தான் இருக்கும் போல”.
“மீரா, உன்னுடைய பிரச்சனை என்னன்னு இன்னும் நீ சரியா சொல்லல. என்னதான் நான் உன்ன புரிஞ்சுவச்சி இருந்தாலும் 100% கணிக்க முடியாது தானே. நான் ஒன்னும் தத்துவவாதி இல்லை. இருந்தாலும் பொதுவா சொல்றேன். தற்காலிக வாழ்க்கை சுமைக்கு நடுவே நீ உன் மகிழ்ச்சியை மறந்துட்ட. அதுதான் உண்மை. சிரிப்பு இங்கதான் இருக்கு. நமக்குள்ள மறைஞ்சிறுக்குற அந்த சின்ன சிரிப்பு உன்னை மீண்டும் சிரிக்க வைக்கும்” என்றான் ஆரவ்.
அவனுடைய வார்த்தைகள் ஊடுருவிக்கொண்டு அவளுடைய இதயத்தில் தொலைந்திருந்த நம்பிக்கையை எட்ட முயற்சித்தது. அவள் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள்.
“நீ என்ன சொல்ல வர? இப்போ நான் என்ன செய்ய?” என்று வலியுடன் கேட்டாள்.
“மீரா, வாழ்க்கை உன்னிடம் இருந்து எதை எடுத்தாலும், உன் சிரிப்பை மட்டும் முழுமையா எடுக்க முடியாது. நீ அத மறந்துட்டா, அது தான் பெரிய இழப்பு. உன் சிரிப்பை தேடி கண்டுபிடி” என்றுஆழமான குரலில் ஆரவ் சொன்னான்.
அந்த நேரத்தில், அவளின் கண்களில் ஒரு சிறு வெளிச்சம் தெரிந்தது.
“ஆரவ், நீ சொல்றது போல, நான் இதே சுமையோட இருக்க முடியாது. என்னால் சிரிக்க முடியும்” என்றாள் மீரா, ஒரு புது நம்பிக்கையுடன்.
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.