மண்ணுக்கடியில் ஜனித்து
பெண்ணுக்கென்றன்றி
பெரும் சமுதாயத்திற்கும் போதையான
மீப்பெரு போதை வஸ்து!
சாதி மத சாயலில் சதிராட்டமாடி சமூகத்தை கூறு போடும் கவண்வில்!
திருமணச் சந்தையில்
அத்தியாவசிய பொருளானதிது
காலம் தொலைக்கும்
எத்தனையோ பருப்பொருளில் ஒன்றாகி காணாமல் போக
கற்பனை செய்கிறேன்!
கற்பனைக் காட்சியே
இறகுபோல் இலகுவாகிறது
தீய கண்ணும் ஏக்கப் பார்வையும் “எத்தனை” “எத்தனை” என்ற வார்த்தைகளும் வற்றிப் போகக் காண்கிறேன்!
பொன் பூட்டா பெண்ணழிகில் பேரன்புடன் நனைகிறேன்!
இவையாவும் தாண்டி
புன்னகை மண்ணாக
பூமிக்கடியில் புதைந்துபோன எத்தனையோ பூவரசிகளின் தொடர்கதை முற்றுப்பெறக் கண்டேன்!
கண்ட கற்பனை மெய்யாக வேண்டி விழி திறவுகையில்
மெய்யடக்கத்தை நொடியில்
முடக்கி ஆள்கிறது இந்த மாயை!
புனிதா பார்த்திபன்
படம் பார்த்து கவி: மண்ணுக்கடியில்
previous post