எழுதியவர்: திவ்யாஸ்ரீதர்
கேள்வி 5: மனிதன் ஏன் இவ்வளவு பேராசை கொண்டிருக்கிறான்?
உன் சக்தியால் மனிதனைக் கட்டுப்படுத்த முடியாதா, இறைவா?
இறைவா, உன்னிடம் நான் கேட்கும் மற்றொரு கேள்வி மனிதனின் பேராசையைப் பற்றியது. இந்த உலகில் மனிதன் ஏன் இவ்வளவு பேராசை கொண்டிருக்கிறான்? இந்தக் கட்டுக்கடங்காத பேராசையால் ஏற்படும் விளைவுகள் கொடியவையாக இருக்கின்றன. உன் அளவற்ற சக்தியால், இந்த மனிதனின் பேராசையைக் கட்டுப்படுத்த முடியாதா?
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தேவைகளுக்கு அப்பாற்பட்டு, மேலும் மேலும் எதையோ தேடியே ஓடுகிறான்.
ஒருவனுக்கு ஒரு பொருள் இருந்தால், மற்றொருவன் அதையே பத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறான். இந்த பேராசையானது தனிமனிதர்களை மட்டுமல்ல, நாடுகள், நிறுவனங்கள் என அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது.
ஒரு சிறிய நிலப்பரப்புக்காகப் போர் செய்கிறார்கள், உலக வளங்களுக்காக நாடுகளைச் சுரண்டுகிறார்கள், பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள்.
இந்தக் கட்டுக்கடங்காத பேராசைதான் ஊழல், கொள்ளை, வன்முறை, சுற்றுச்சூழல் அழிவு என அத்தனை தீமைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது.
இறைவா, நீ சர்வ சக்தி படைத்தவன் என்றால், இந்த மனித மனதில் குடிகொண்டுள்ள பேராசையை ஏன் நீக்க மறுக்கிறாய்?
இந்த பேராசையைக் கட்டுப்படுத்தி, மனிதர்களைப் போதுமென்ற மனதுடனும், பகிர்ந்து வாழும் எண்ணத்துடனும் ஏன் உருவாக்கவில்லை?
ஒருவேளை, மனிதனுக்கு நீ கொடுத்த சுதந்திரம் தான் இந்தக் பேராசைக்குக் காரணமா?
ஆனால், அந்த சுதந்திரம் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும்போது, அதைத் தடுக்கும் சக்தி உனக்கு இல்லையா?
அல்லது நீ வேண்டுமென்றே அனுமதிக்கிறாயா? மனிதனின் பேராசையின் விளைவாக இந்த உலகம் சந்திக்கும் துயரங்களைப் பார்க்கும் பொழுது, இந்த பேராசையை கட்டுப்படுத்த உன்னால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வருகிறது.
நீ ஏன் அதைச் செய்வதில்லை என்பதை நான் உன்னிடம் இருந்து அறிந்துகொள்ள விரும்புகிறேன், இறைவா.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.