படைப்பாளர்: வெ. முத்துராமகிருஷ்ணன்
திருமணம் முடிந்த மிருதுளாவிற்கு கார் ஓட்ட வேண்டும் என்று மிகவும் ஆசை. இரண்டு சக்கர வாகனத்தை மிக அருமையாக சாலையில் ஒட்டி செல்லும் அவளுக்கு கார் என்றால் மட்டும் ஒரு பயம் இருந்தது.
கனவுகளுடன் கணவனிடம் தனக்கு கார் கற்றுக் கொடுக்குமாறு பலமுறை கேட்டும் அவர் “உனக்கு தைரியம் இல்லை” என்று சொல்லி அவளை நிராகரித்து விட்டார்.
தினமும் உறங்கும்போது அவள் தான் வேகமாக கார் ஓட்டி சாலையில் செல்வது போல கனவு காண்பாள். “இந்த கனவு ஒருநாள் பலிக்காதா?” என்று மிகவும் ஆசையுடன் இருந்தாள்.
கணவன் வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டான். அவன் எடுத்துச் செல்லாதால் கார் வீட்டின் வாசலில் இருப்பதை பார்த்து “இந்த காரை ஓட்டினால் எப்படி இருக்கும்?” என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அவள் வீட்டு வாசலில் ஏலியன் வந்து நின்றான்.
முதலில் பயந்து “நீ யார்?” என்று கேட்டாள்.
“கனவில் நீ கார் ஒட்ட வேண்டும் என்று நினைத்தவுடன் அதை தெரிந்து கொண்டு உனக்கு கார் ஓட்ட கற்று கொடுக்க வந்திருக்கிறேன்” என்று சொன்னான்.
முதலில் பேச தயங்கி பயந்த மிருதுளா பிறகு அது ஆசையுடன் தன்னிடம் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் பேசியதை பார்த்து மெதுவாக பேச்சு கொடுக்க தொடங்கினாள்.
“உன்னால் முடியும் தயங்காதே” என்று சொல்லி அவளை உற்சாகப்படுத்தி காரினில் உட்கார வைத்து ஸ்டீரிங்கை பிடிக்க வைத்து அருகில் இருக்கும் சீட்டில் ஏலியன் உட்கார்ந்து கொண்டான்.
ஏலியன் என்ற தோழன் கொடுத்த உற்சாகத்தில் மிருதுளா மெதுவாக காரை சாலையில் செலுத்த தொடங்கினாள்.
சாப்பாடு உறக்கம் என்று இரண்டையும் மறந்து ஒரு நாள் முழுவதும் ஏலியனுடன் அந்த சாலையில் கார் ஓட்ட பழகிக் கொண்டாள்.
“நீ இனிமேல் கண்டிப்பாக சாலையில் தைரியமாக கார் ஓட்டி விடுவாய்” என்று அவளுக்கு உத்திரவாதம் கொடுத்து விட்டு ஏலியன் அவளிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டான்.
மறுநாள் காலை ஊரிலிருந்து திரும்பிய கணவனிடம் தான் மிக அருமையாக சாலையில் கார் ஓட்டுவதாக சொல்லி கணவனை அருகில் உட்கார வைத்துக் கொண்டு சாலையில் அவள் காரை செலுத்த அவன் “மிக அருமையாக ஓட்டுகிறாய் உனக்கு யார் இப்படி பயிற்சி கொடுத்தது?’ என்று அவளைக் கேட்டான்.
அவள் ஏலியனை பற்றி எதுவும் சொல்லாமல் “நானே முயற்சி செய்தேன்” என்று சொல்லி சமாளித்து கணவனிடம் “கற்றுக் கொண்டேன் கற்றுக் கொண்டேன்” என்று பாடிக்கொண்டே ஆனந்தமாக சாலையில் கார் ஓட்டினாள்.
தன்னுடைய திறமையை வெளி கொணர்ந்ததுடன் கனவை நினைவாக்கிய ஏலியனுக்கு மனமார்ந்த நன்றி சொன்னாள் மிருதுளா.
முற்றும்.