எழுத்தாளர் பெயர்: பிரேமா காமேஸ்வரன்
சமூக வலைதளத்தில் காணொளிகளை பார்த்துக்கொண்டு வந்த தீபிகாவின் விரல்கள் சட்டென்று நின்றது. ஒரு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும் அந்த குழந்தைக்கு. அத்தனை அழகாய் அபிநயம் பிடித்தது, ‘மல்லி பூ வச்சு வச்சு வாடுதே’ என்ற பெண்ணின் தாப உணர்வுகளை கொட்டி எழுதி இருந்த பாடலுக்கு.
அழகாகத்தான் இருந்தது. அந்தப் பதிவிற்கான மக்களின் கருத்து பகுதியில் அத்தனை பேரும் கொண்டாடி தீர்த்திருந்தனர்.
அழகுச் செல்லம்
அழகு குட்டி
கியூட்
பியூட்டி
ஸ்வீட்
பட்டு குட்டி
என்று அத்தனை மக்களும் பாராட்டிக் கொண்டிருக்க ஒரு பதிவு மட்டும் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.
“அஞ்சு வயசு இருக்குமா இந்த குழந்தைக்கு? அது முகத்தில எத்தனை உணர்வுகளை காட்டுது.. இது சரியா? இது பெருமையா இருக்கா உங்களுக்கு? இது மூலமா அந்த குழந்தைக்கு நீங்க என்ன சொல்லிக் கொடுக்க வரீங்க? இதே அபிநயத்தை அந்த பொண்ணு 15 வயசுல இந்த பாட்டுக்கு செஞ்சா உங்களால் அக்செப்ட் பண்ணிக்க முடியுமா? இதுக்கு பேரு தான் கலையா? குழந்தையை குழந்தையா இருக்க விடுங்கடா..” நிஜம் தானே என்று எண்ண தோன்றியது.
தொட்டிலில் உறங்கி கொண்டிருந்த மகள் ஈரம் செய்து அசைய, எழுந்து சென்று பூவை போல் மகளை தூக்கி வந்து அவள் படுக்கும் சிறுமெத்தையில் படுக்க வைத்துவிட்டு ஈர துணியை அகற்றியவள் வெந்நீர் எடுத்து வந்து மெதுவாய் துடைத்து விட, குழந்தை பசிக்கு அழ அவள் பசியாற்றி முடியும் முன் ஈரம் செய்ய மீண்டும் வெந்நீர் வைத்து சுத்தம் செய்து ஈரம் உலர்ந்ததும் பருத்தி துணியினை இடையினில் கட்டித் தோளில் போட்டு தட்டிக் கொடுக்க தாயின் உடல் சூட்டில் கலைந்த தூக்கம் மீண்டும் வர கண்ணயர்ந்தாள் அந்த குட்டி தேவதை. மீண்டும் தொட்டிலில் போட்டு உறங்க வைத்து நிமிர, குழந்தையை பார்க்க வந்திருந்தார் அவளின் சின்ன மாமியார் மகாலட்சுமி.
வந்தவர்களை வரவேற்ற தீபிகாவின் தாய், “குழந்தை இப்போ தான் தூங்குறா.. இப்போ எழுப்பினா வாமிட் பண்ணிடுவா.. இன்னும் பத்து நிமிசம் தான் அவ தூக்கம். அவளே முழிச்சிடுவா.. தப்பா எடுத்துக்காதீங்க..” என்று தன்மையாய் கூற அவரும் சரி என தலையசைத்துக் கேட்டுக் கொண்டார்.
பெரியவர்கள் பேசிக்கொள்ள, கூடவே வந்திருந்த அவரது எட்டு வயது பேரன் சத்யனும் பெரியவர்கள் அருகில் அமைதியாக உட்கார்ந்து அவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டு இருந்தான்.
காலை பார்க்க வந்த தீபிகாவின் அத்தைப்பெண்ணின் மகள் ஒரு இடத்தில் உட்காராமல் வீட்டை இரண்டு பண்ணியது கண் முன் வந்து போக, சத்யனை பார்க்க வியப்பாக இருந்தது.
மகளின் சேட்டையைத் தடுக்க அவள் போராட, அவளது மாமியார் தனது பேத்தியின் சுட்டித்தனத்தை சிலாகித்துக் கொண்டு இருந்தார்.
“எம் பேத்தி செம்ம ஷார்ப் தெரியுமா? ஒரு இடத்தில ஒரு நிமிசம் நிக்க மாட்டா.. அவ்ளோ சுறுசுறுப்பு.. எத்தனை கேள்வி கேப்பா தெரியுமா? பதில் சொல்லி மாள முடியாது. அதே போல ஒரு தரம் சொன்னா போதும் கற்பூரம் போல கத்துப்பா.” என்று கூறியவர், குழந்தையை அழைக்க நான்கு முறை அழுத்தி கூப்பிட்ட பிறகே, “என்ன கிரானி? சொல்லு” என சலிப்பாக வினவிய படி அருகில் வந்தாள்.
“அம்மு குட்டி ஒரு டான்ஸ் ஆடுங்க. இவங்க எல்லாம் நீ ஆடி பாத்தது இல்ல.” என்று கூறவும், சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தவள், “ஒரே போர்.. எப்போ பாரு ஆடு பாடுன்னு சொல்லிட்டுருக்க..” என முகத்தை சுளித்தாள்.
பெரியவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க, சரி என்று தலையாட்டிய குழந்தை தனது பாட்டியின் கைப்பேசியை எடுத்து,
ரா என் ராவெல்லாம்
லாங் ஆவுதே
ராபரி-கு
ரா வே ரா வே
ரா நீ பாத்தாலே
தீ ஆவுதே
தீ பிடிக்க
ராவையா வே
என்ற பாடலை ஒலிக்கச் செய்து அந்த பாடலில் நடித்த நடிகை ஆடியது போலவே அத்தனை ஆனந்தம் அவர்களுக்கு! வியந்து போனார்கள். கொண்டாடி தீர்த்து விட்டார்கள் பெரியவர்கள்.
எட்டு வயது சிறு மொட்டு, அதன் முகத்தில் தான் எத்தனை பாவங்கள்? உதட்டைச் சுளித்து அவள் செய்த பாவனை தீபிகாவை அதிரவே செய்துவிட்டது. ஆடி முடித்த குழந்தை பெரியவர்களின் பாராட்டை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் ‘இது எனக்கு பழக்கமே’ என்பது போல் மிக இயல்பாக கடந்து போனாது இன்னும் ஆச்சர்யமாக இருந்தது.
மாலை வந்திருந்த சத்யன் அதற்கு எதிர்மாறாக மிக அமைதியாக அமர்ந்திருந்தான்.
“அப்படியே அவன் அம்மா போல மண்ணு மாதிரி தான் இருப்பான். உக்காந்தா உக்காந்த இடம். ஒரு சூடிப்பும் இல்ல. இப்போ இருக்குற பிள்ளைக எல்லாம் எம்புட்டு பண்ணுதுங்க? இவன் ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்ல. என் மகன் இவன் வயசுல அப்படி துறுதுறுன்னு இருப்பான். இவன் அப்படியே அவங்க அம்மா வம்சம் போல.. என்னத்த சொல்ல..” என குறை பாடிக்கொண்டே இருந்தார்.
குழந்தையின் முகமே வாடி போனது.
குழந்தை விழித்துவிடவே, தூக்கிக் கொண்டு வர தீபிகாவின் அருகில் வந்து ஆசையாக குழந்தையை பார்த்தான் சத்யா. காற்றில் கவிதை வடித்த குழந்தையின் கையினுள் தனது ஒரு விரலை வைக்க இறுக பற்றிக் கொண்டாள் தீபிகாவின் மகள். சத்யனுக்கோ ஆனந்தம். பெரிதாய் விரிந்த அவனது விழிகளும், சிரிப்பும் அவனது மகிழ்ச்சியை கூறியது. கிளம்பும் வரை குழந்தையின் விரலை பிடித்தபடியே இருத்தான் சிறுவன்.
அவர்கள் சென்ற பின் அடுத்தடுத்தும் உறவினர்கள் வரவும் தீபிகாவின் நாள்கள் அழகாய் போனது.
முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததில் சிலர் “மகாலட்சுமி வந்துட்டா” என்றும், “தலைச்சம் பிள்ளை வாரிசா பொறந்து இருக்கலாம். என்ன தான் இருந்தாலும் ஆம்பளை பிள்ளை போல ஆகுமா? இன்னும் இரெண்டு வருசம் கழிச்சு பையன் ஒன்னும் பெத்துக்கோ” என்றும் வந்தவர்கள் பேசிக்கொண்டு தான் சென்றனர்.
எதற்கும் பதில் சொல்லவில்லை தீபிகா. எல்லோருக்கும் புன்னகை ஒன்றை மட்டுமே பதிலாக தந்தாள். சொன்னால் மட்டும் விளங்கி விடுமா? இவர்களுக்கு பதில் சொல்லி அதற்கும் பேச்சு வாங்க அவள் தயாரில்லை.
முதல் குழந்தை பெற்ற புது தாய் அவள். அவளை மருட்டி வைத்தது சமூகம். என்ன செய்தாலும் எப்படி செய்தாலும் கேள்விகள் கேட்கப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டு கொண்டே இருந்தது. மூச்சு முட்டி போனது அந்த இளம் தாய்க்கு.
தன் இல்லம் செல்லும் நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது தீபிகாவுக்கு. கணவன் சதீஷ் வேலை செய்வதோ கொடைக்கானலில் உள்ள சர்வதேச பள்ளியில். பெரியவர்களுக்கு அந்த சீதோஷ்ணநிலை ஒப்பவில்லை. ஆதலால் தனிக்குடித்தனம் தான் அவர்களது.
அதற்கும் ஒரு மூச்சு பேசி தீர்த்துவிட்டு தான் சென்றார்கள் உறவினர்கள். மூளை குழம்பி வெளியே வந்துவிடும் அளவுக்கு அத்தனை விதமான அறிவுரைகள்… முடியவில்லை பெண்ணால்.
ஊருக்கு கிளம்புவதற்கு இரு நாள்கள் முன் வந்தார் பக்கத்து வீட்டில் வசிக்கும் நிஷா. தீபிகா வந்த நேரம் குடும்பமாக வெளிநாட்டிற்கு சென்றிருந்தார். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் முடிந்து, பத்தாம் வகுப்பு படிக்கும் வயதில் ஆண் குழந்தை ஒன்றுக்கு தாயாகி இருந்தவர். தீபிகாவை விட பன்னிரண்டு வயது மூத்தவர். உடன் அவள் மகனும், மகளும் வந்திருந்தனர்.
நீண்ட காலம் கழித்து பார்த்தவர்கள், பேசிக்கொள்ளவா விசயங்கள் இருக்காது. பேசிக்கொண்டே இருந்தனர். குழந்தையை நிஷாவின் மகன் தூக்கி வைத்திருக்க, நிஷாவின் பெண் குழந்தையின் விரல்களுக்குள் தன் ஒரு விரலை விட்டு பிடித்துக்கொண்டே மழலை மொழி பேசிக்கொண்டு இருந்தனர்.
பேச்சு நிஷாவின் பிள்ளைகளின் படிப்பில் வந்து நின்றது. அரபு தேசத்தில் நிஷாவின் கணவன் உழைக்க பணத்திற்கு குறைவில்லை நிஷாவுக்கு. எனவே அவர் தனது பிள்ளைகளை மருத்துவர் ஆக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருந்தார்.
ஆனால் இப்பொழுது மகன் எம்பிஏ படித்துக்கொண்டு இருக்க, மகளோ ஃபேஷன் டிசைனிங் படிக்க போவாதாக கூறினார். அதிர்ந்து தான் போனாள் தீபிகா.
“அக்கா என்ன சொல்றீங்க… புள்ளைங்கள டாக்டர் ஆக்கணும் சொல்லிட்டே இருப்பீங்க… இப்போ என்னாச்சு அக்கா? “ என்று வினவவும்,
ஆழ்ந்த மூச்சை எடுத்த நிஷா, “என்னத்த டா சொல்ல.. ஒரு ஸ்டேஜ் வரைக்கும் நாங்க சொன்னது எல்லாம் செஞ்சாங்க.. அதுக்கு பிறகு ரொம்ப மாறிட்டாங்க. அதும் இவன் கூட பேசவே பயந்தேன் தெரியுமா?” என்று கூறவும் தீபிகா திகைத்து போனாள்.
“என்னக்கா சொல்றீங்க?”
“டுவெல்த் முடிச்சதும் என்ட்ரன்ஸ் எக்சாம் எழுத சொன்னோம் தீபு.. இவன் என்ன சொன்னான் தெரியுமா? ஸ்கூல் முடிச்சதும் காலேஜ் போய் சேர்ந்தே ஆகணுமா? அப்படின்னு கேட்டான்.”
“என்னக்கா இப்படி சொல்லி இருக்கான்?”
“அடுத்து நடந்தது எல்லாம் சொன்னா உன்னால ஜீரணிக்க முடியாது டா.. அதெல்லாம் என் வாழ்க்கைல திரும்பி பாக்கவே நினைக்காத விசயங்கள்..
எது பேசினாலும் என்ன? எதுக்கு? ஏன்? அப்படின்னு கேள்வி கேட்டு எல்லாத்துக்கும் அகைன்ஸ்ட்டா பேசினான். எல்லாத்துக்கும் முடியாதுன்னு முகத்துக்கு நேரே சொல்லி… பயந்தே போனேன் டா… இவரும் இங்க இல்ல.
என்னப்பா உன் பிரச்சினைன்னு கேட்டா அதுக்கும் எகிறிக்கிட்டு வந்தான். வெளிய சொன்னா உன் பையனுக்கு பைத்தியம்னு சொல்லிடுவாங்கன்னு பயந்து போயிருந்தேன்.
இவனை எப்படி சரி பண்றதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருந்தப்ப அவங்க அப்பா லீவ் போட்டு வந்தார். நாங்க ரெண்டு பேரும் பேசி பார்த்தோம். வாய திறக்கல இவன். ஆனா படிக்க முடியாது அப்படின்னு நிலையா நின்னான். நல்ல மார்க்… 98% எடுத்து இருந்தான். ஆனா சந்தோசம் தான் பட முடியல.
இவரோட சைக்காட்ரிஸ்ட் ப்ரெண்ட் ஒருத்தர்கிட்ட சொல்ல, அவர் ஒரு டூர் போல ஊட்டி கூட்டிட்டு வர சொன்னார். கிட்டத்தட்ட ஒரு வாரம் அவர் வீட்ல தான் இருந்தோம்.
எங்க கிட்ட எல்லாம் ரெண்டு வார்த்தை மேல பேசாதவன் அவர்கிட்ட பேச ஆரம்பிச்சான். பேச வச்சார் அந்த மனுசன்!
இப்ப உனக்கு என்னடா வேணும் அப்படின்னு கேட்டதுக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டேன்னானு திரும்ப பேசி இருக்கான்.
1128 மார்க் எடுத்து இருக்க.. சூப்பர்டா தம்பி.. என்ன படிக்கப் போற? எந்த காலேஜ்? அப்படின்னு கேட்டதுக்கு,
12 முடிச்ச உடனே கண்டிப்பா காலேஜ் போய் சேர்ந்தே ஆகணுமா? ஒரு வருஷம் தள்ளிப்போனா ஆகாதா? அப்படின்னு இவன் கேட்டுருக்கான்.
சரி ஒரு வருஷம் கழிச்சு போகலாம் அப்படின்னு இவர் சொன்னதுக்கு அப்படி எல்லாம் ஒரு வருஷம் வேஸ்ட் பண்ண முடியாது நான் படிக்கணும் அப்படின்னு சொன்னானாம். என்ன பேசினாலும், கேட்டாலும் எதிர்த்து மட்டும் தான் பேசி இருக்கான்.
இப்படியே அவனை பேச வச்சதுல, அவன் சொன்னது கேட்டு எனக்கு மனசே விட்டு போச்சு திபு…
ஆட சொல்லி, பாடச் சொல்லி, ஓட சொல்லி, குதிக்க சொல்லி, படிக்க சொல்லி கிட்டத்தட்ட குரங்கு போல அவனை எல்லாத்தையும் செய்ய சொன்னதுல்ல அவன் யார்ன்னு அவனாலயே கண்டுபிடிக்க முடியாம போயிடுச்சு. அவங்க என்னை எப்படி வளர்க்கறாங்கன்னா வாட் ஐ அம் நாட்.. அப்படின்னு சொன்னானாம்.
எங்கிட்ட அந்த திறமை இல்லை அப்படின்றத அவங்களால அக்சப்ட் பண்ணிக்கவே முடியல.. என்கிட்ட எல்லாமே இருக்கிறதா நினைச்சு இல்லாத விஷயத்தை எல்லாம் செய்ய சொன்னாங்க.. என்னால முடியவில்லை. அதனால எதிர்த்து பேச ஆரம்பிச்சேன் இப்போ அவங்க நான் சொல்றத கவனிக்க ஆரம்பிக்கிறாங்க.. இப்படித்தான் என்னால அவங்களோட அட்டென்ஷனை என் மேல திருப்ப முடிஞ்சுது அப்படின்னு சொன்னானாம்.
மனசு விட்டு போச்சுடா எங்க ரெண்டு பேருக்கும். எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம்? சம்பாதிக்கிறோம்? நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்கோம்?
எல்லாம் இவங்க ரெண்டு பேருக்காக தானே.. இவங்கள நம்ம புரிஞ்சுக்காம விட்டுட்டோமே அப்படின்னு ரொம்ப பீல் பண்ணோம்.. அதுக்கு அப்புறம் தான் புள்ளைங்க மனசு என்னனு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டோம்..
அவங்களோட ஆசை சரியா இருக்கிற பட்சத்துல அதை நிறைவேத்த ட்ரை பண்ணோம். அந்த வகையில் என் பிள்ளைங்க ரெண்டும் தங்கம். தப்பான எந்த ஆசையும் இல்லை.
அவனுக்கு எம்பிஏ முடிச்சுட்டு ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணனும்னு ஆசை. இவளுக்கு ஃபேஷன் டிசைனிங் பண்ணனும்னு ஆசை.
உனக்கு தான் தெரியுமே சின்ன வயசுலயே அவ அழகாக டிராயிங் பண்ணுவா, கலர் பண்ணவா அப்படின்னு. சோ அவங்களுக்கு அந்த டேலண்ட் இருக்குன்னு புரிஞ்சுது.” என்று அவர் கூற,
“அட ஆமாக்க.. அவ வரையுற எல்லாமே யூனிக்கா இருக்கும்… கலர் காம்பெனேஷன் சூப்பரா இருக்கும்ல” என்றாள் தீபிகா சந்தோசமாக.
“அதே தான் டா… இரண்டு பிள்ளைகளையும் அவங்க ஆசைப்படி படிக்க வச்சாச்சு.
நான் வளர்ந்தப்ப இருந்த சமூகம் இப்ப இல்ல.. அம்மா, அப்பா என்ன சொன்னாலும் நம்ம நல்லதுக்காக சொல்லுவாங்க அப்படின்னு கண்ண மூடிட்டு போற புள்ளைங்க இல்ல.
யோசிக்கிறாங்க.. ஆசைப்படுறாங்க.. அத பத்தி தெரிஞ்சுக்கவும் செய்றாங்க.. அதுக்காக போராடவும் செய்றாங்க..
நம்ம கஷ்டப்படறது எதுக்கு? அவங்க சந்தோஷமா இருக்கணும்றதுக்காக தானே.. அவங்க சந்தோஷம் இதெல்லாம் தான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், நான் சொல்றத தான் நீ செஞ்ச ஆகணும்னு பேசி என்ன ஆகப்போகுது? தப்பா இருந்தா கண்டிக்கலாம்… புத்தி சொல்லலாம்.. இவங்க தான் ரொம்ப தெளிவா இருந்தாங்களே..
அதான் அவங்க விருப்பம் போல விட்டாச்சு.. இப்போ அவங்க காலேஜ்ல அவங்க தான் டாப்பர். அவங்க சந்தோஷமா இருக்காங்க, அதனால நாங்களும் சந்தோஷமா இருக்கோம்..”
என இடைவெளி இல்லாமல் பேசி முடித்தவர் முகம் புன்னகைத்து இருக்க, அருகில் இருந்த நீரை எடுத்து பருகினார். தீபிகாவின் பார்வை தன் குழந்தை மீதும், அவளை தூக்கி வைத்திருப்பவனின் மீதும் மாறி மாறி பாய்வதைக் கவனித்த நிஷா,
“என்ன தீபு ரொம்ப பயப்படுத்திட்டேனா? பயப்படாத டா.. எல்லாம் நல்லதாவே நடக்கும்.. உனக்கு இன்னும் நாள் இருக்கு.. அவ மனசையும் புரிஞ்சுக்க ட்ரை பண்ணிட்டா போதும். மத்ததெல்லாம் அதுவா நடக்கும்.” என்று கூறியவர் மகனை அழைத்து அவன் கையில் இருந்த குழந்தையை வாங்கி அவள் பட்டு கன்னத்தை இரு விரலில் தொட்டவர், அதை தன் இதழில் வைத்து முத்தம் கொஞ்சினார்.
குழந்தைக்கு என்று வாங்கி வந்திருந்த உடைகளை எடுத்துக் கொடுத்தவர் குழந்தையின் பிஞ்சு பாதங்களைப் பிடித்து தான் வாங்கி வந்திருந்த மெல்லிய வெள்ளி தண்டையை அணிவித்தார். தீபிகாவிற்கு என கொண்டு வந்திருந்த வெளிநாட்டு ஆடையையும் வாசனை திரவியத்தையும், பேரீச்சம் பழங்களையும் கொடுத்தவர் தீபிகாவின் தாயிடமும் பேசிவிட்டு வெளியேறினார்.
இத்தனை நாள்கள் வந்தவர்கள் எல்லோரும் தீபிகாவை குழப்பிவிட்டு மட்டுமே சென்றிருக்க, நிஷா வந்து கொஞ்சமாய் குழந்தை வளர்ப்பினை பற்றி எடுத்துரைத்து சென்றிருந்தார்.
குழந்தை என்பது களிமண் அல்லவே.. நாம் நினைத்தது போல அடித்து பிசைந்து, குழைத்து வார்ப்பதற்கு… அவர்களும் தனி மனிதர்களே.. பெற்றவர்கள் மூலமாக உலகிற்கு வாழ வந்தவர்கள் தானே.. அவர்கள் வாழ நினைப்பது தவறில்லாத வாழ்வாக இருப்பின் உடன் நிற்பது தானே பெற்றோரின் கடமை… தவறாக இருக்கும் நேரத்தில் சரியான பாதையை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தாலே போதும்.. அவர்களே தங்கள் வாழ்வைப் பார்த்துக்கொள்வார்கள்.
தன் மகளின் வாழ்வு, அவள் விருப்பமாக இருக்கவேண்டும், அதற்கு தானும், தன் கணவனும் துணை நிற்க வேண்டும் என்ற தெளிந்த மனதோடு தனது பயணத்திற்காண பொருள்களை எடுத்து வைக்க சென்றாள் அந்த இளம்தாய் தீபிகா.
முற்றும்.
அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.