படைப்பாளர்: சாஜிதா
மூச்சு வாங்கியது எனக்கு இருந்தும் நில்லாது ஓடினேன் நான்… கண்ணில் குத்தினால் கூட தெரியாது.. அந்த அளவுக்கு இருள் கவ்வி இருந்தது… பின்னாடி காலடி ஓசை.. சருகுகளில் உரசி “சரக் சரக்வென” சத்தத்தோடு கேட்டிட பயத்தினால் உறைந்து போன நான் அந்த ஊசியிலைக் காட்டில் ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தின் பின்னால் வாயை இரு கைகளாலும் பொத்திக் கொண்டு, கால்களைக் குறுக்கி வயிற்றோடு ஒட்டிக் கொண்டு, முதுகை வளைத்து ,என் மூச்சு சத்தம் கூட வெளியில் கேட்காத படி உட்கார்ந்து இருந்தேன்…
நீரருவி விழி நிரப்பிட இங்கு நான் சேர்ந்த விதம் எண்ணினேன்… கோயம்புத்தூரில் புகழ் பெற்ற ஐடி கம்பெனியில் பணி புரியும் இளம் பெண்.. பெயர் மதி வதனி…வருகின்ற சில தினங்களில் எங்கள் கம்பனியில் விடுமுறை என்பதால் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டோம்.. குறிப்பிட்ட விடுமுறை நாளும் வந்தது….
நானும் ,என் நண்பர்களான மோகனா, சுதன், ஹரீஷ் என நால்வரும் இணைந்து காரில் ஊட்டியை வந்தடைந்தோம்… இதமான மனதை மயக்கும் மாலை நேரம்.. ஊட்டியின் குளிர் என எங்களது நீண்ட வழிப் பயணத்தின் களைப்பை வெகுவாக மறக்கச் செய்தது…
ஹரீஷ் ஒரு பீர் கடையையே கொண்டு வந்திருத்தான்… இதைக் கண்ட சுதன் “நண்பேண்டா” என அவனை கட்டிக் கொண்டான்… பெண்கள் நாங்கள் இருவரும் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டோம்…”சரி இதெல்லாம் இருக்கட்டும்.. குளிச்சிட்டு ரெடியாகிட்டு நைட் பப்கு போவோம்… இங்க வேற குளிருக்கு இதமா செம்மயா எதாவது சிக்கும்..” என சுதன் கண்ணடித்துக் கூற “சீஈ பொம்ள பொறுக்கி “என அவன் முதுகில் ஒரு அடி கொடுத்து விட்டு மோகனாவும் நானும் தயாராக சென்றோம்…
நால்வரும் ரெடியாகி காரில் ஏறி நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சற்று தூரத்தில் உள்ள பப்பிற்கு சென்றோம்…”கண்ணை கவரும் பல வண்ண மின்சார விளக்குகள்…. அங்கங்களை ஆடவர் ரசிக்க மறைக்காது ஆடை அணிந்த யுவதிகள்… யுவதிகளை ருசிப்பது போல் மதுக்குவளையை வாயினுள் கவிழ்க்கும் யுவன்கள்… நடனமாடும் நாகரீக ஆசாமிகள்… காதை கிழிக்கும் மேற்கத்திய இசை…” என அந்த இடம் ஆரவாரமாக இருந்தது… நாங்களும் அதில் கலந்து கொண்டு” இதற்கு தானே ஆசைப்பட்டோம்” என்ற வகையில் சந்தோஷமாக அந்த பொழுதை அனுபவித்தோம்…
நேரம் நள்ளிரவைத் தாண்டி மணி இரண்டைத் தொட்டது…. மோகனாவிற்கும், சுதனிற்கும் போதை அதிகமாகி விட்டது… ” ஹரீஷ் வண்டிய எடு.. நாம ரூமுக்கு போகலாம்… இன்னும் இங்க இருக்க இருக்க இது ரெண்டும் குடிக்கும் தான்” என நான் கூற அதை ஆமோதித்து “சரி வா போகலாம்” என்ற ஹரிஷ் சுதனை கைத்தாங்கலாக பிடிக்க நான் மோகனாவைப் பிடித்து கொண்டு வண்டியில் ஏறினோம்…
மோகனாவும், சுதனும் பின்னால் இருக்க நானும் ஹரீஷூம் முன்னால் இருந்தோம்.. ஹோட்டல் சற்று தள்ளி ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்தது… மோகனாவும் சுதனும் போதையின் தாக்கத்தால் உளறிக் கொண்டே வந்தனர்…. அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது…” ஏய் வண்டிய நிறுத்துடா! நான் இறங்க போறேன்” என சுதன் கூற … “ஆமா! ஆமா! வண்டிய நிறுத்து… இவனை இங்கயே இறக்கி விட்டுட்டு நாம போலாம்… ஏய் நிறுத்துடா!” என வாய் குளறிக் கொண்டே மோகனா ஹரிஷின் கைப்பிடித்து ஸ்டியரிங்கை திருப்ப “ஏய் விடுடி! மோகனா விடு! ” என ஹரிஷும் கத்த “அய்யோ விடு! மோகனா பள்ளத்துல விழுந்துட போறோம்” என நானும் கத்த ஆஆஆ……. அய்யோ….. ஹேய்…. அம்மா….. என்ற நால்வரின் கூச்சலோடு வண்டி போய் ஒரு மரத்தில் மோதியது…
மெதுவாக மெது மெதுவாக கண் விழித்து பார்த்தேன்… நான் வந்த வண்டி இல்லை என் நண்பர்களைக் காணவில்லை…. ஆஆஆ ஆஆஆ….. உடம்பெல்லாம் வலி….. ஆடைகள் கிழிந்து இருந்தது…. கைகளில் சிராய்ப்பு…. தலை வின்னென்று வலித்தது…. கைகளை ஊன்றி எழுந்து நின்று நான் நிற்கும் இடத்தை அவதானித்தேன்… கால்கள் அடிபட்டதால் மிகவும் வலித்தது… அப்போது தான் புரிந்தது வண்டி மரத்தில் மோதியதால் நான் தூக்கி எறியப்பட்டுள்ளேன் என்று……
செய்வதறியாது நின்ற என் செவிகளுக்கு தூரத்தில் வண்டி ஒன்று வரும் சத்தம் கேட்டது… மழை பெய்திருந்ததால் சேறும், சகதியுமாக நிலம் ஈரலிப்பாக காணப்பட்டது… கீழே விழுந்ததால் என் உடலிலும் சேறு பூசிக் கொண்டது.. வண்டியின் சத்தத்தில் “என் நண்பர்கள் தான் என்னைத் தேடி வருகிறார்கள் போல ” என நினைத்து காலை எடுத்து வைத்தேன்… “மோக்” என ஒரு சத்தம்… “ஐயோ” என அலறி காலை எடுத்துக் கொண்டேன்… அந்த இடத்தில் இருந்து ஒரு தவளை பாய்ந்து ஓடியது…
பைன் மரக் காடுகளில்” வூட் புரோக்” எனும் மரத்தவளைகளும், சாம்பல் நிற ஆந்தைகளும், சிறுத்தைகளுமே அதிகம்.. தூரத்தில் வந்த வண்டி அருகில் வர வர மோட்டார் வண்டி என அடையாளம் கண்டு கொண்டேன்… எதற்கும் பயத்தில் மரத்திற்கு பின்னால் ஒளிந்து நின்று பார்த்தேன்…. யாரோ இரு ஆடவர்கள் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு சாக்குப் பையை சுமந்து கொண்டு வந்து கீழே போட்டனர்…
வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு சாக்குப்பையை கீழே போட்ட இருவரில் “டேய் நீ குழிய வெட்டுடா” என சிகரெட்டை பற்ற வைத்து கொண்டே ஒருவன் இன்னொருவனை ஏவினான்.. மற்றையவன் கையில் இருந்த கடப்பாறையால் குழியைத் தோண்ட, சிகரெட் புதைத்தவன் சாக்குப் பையை அவிழ்த்தான்…. எனக்கு இருளில் எதுவும் சரியாகத் தெரியவில்லை…
“டேய் பைக்கோட ஹெட் லைட்ட ஆன் பண்ணுடா.. இத குழில போட்டு மூடனும்… சரியா மூடுபடாம விட்டா நாய் நரி எதுவும் தோண்டி எடுத்துடு”ம் என குழி தோண்டியவன் கூற, மற்றையவன் ஹெட் லைட்டை ஆன் செய்தான்….
என்ன என்று மெதுவாக தலையை நீட்டி எட்டிப் பார்த்தேன்… ஒரு பெண்ணின் உடல்… தூரம் மற்றும், ஹெட் லைட் வெளிச்சம் வேறு சரியாக தெரியவில்லை…மெது மெதுவாக கால்களை ஊன்றி எட்டிப் பார்த்தேன் அது வேறு யாரும் இல்லை “மோகனா!….” “ஐயோ மோகனா!” என நான் இட்ட கூச்சலில் அந்த இருவரும் என்னை கண்டு கொண்டனர்…
“யார்ரா அது அவளை பிடிடா நம்ள மறஞ்சி இருந்து வாட்ச் பண்ணி இருக்கா” என்று என்னை இருவரும் துரத்த ஆரம்பித்தார்கள்…. அவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள தான் நில்லாமல் ஓடி வந்து இங்கு மறைந்து இருக்கிறேன்…
அவர்கள் இருவரும் பேசும் சத்தம் தெளிவாக கேட்டது… “கைல சிக்கினா அவளையும் சேத்து புதச்சிடனும்” என்றனர் இருவரும்… மெதுவாக அரவமின்றி ஒவ்வொரு மரமாக மறைந்து மறைந்து வந்த எனக்கு நீரின் சலசலப்பு சத்தம் கேட்டது… தைரியத்தை வரவழைத்து கொண்டு உடலின் ஒட்டு மொத்த பலத்தையும் ஒன்று திரட்டி நீரோடையை நோக்கி ஓட என்னைக் கண்டு கொண்ட அவர்கள் பின்னால் துரத்தி வர கால் தடுக்கி மேட்டிலிருந்து உருண்டு கீழே “சாண்டினுல்லா” ஏரிக்குள் விழுந்து விட்டேன்….
எனக்கு நீச்சல் கூட தெரியாது …இரு கைகளையும் மேலே உயர்த்தி “ம்ம்ம்ம்ம்” என மூச்சுக்கு ஏங்கி மூழ்கிக் கொண்டே போக , “சீசீசீ” அடியே! எந்திரிடி” என அடித்து எழுப்பினாள் என் நண்பி தஸ்னீம்… “என்னடி ஆச்சு? அம்மா! ஐயோனு! கத்துற நானும் எவ்வளவு எழுப்பினேன்… எந்திரிக்கவே இல்லை நீ! அது தான் தண்ணி தெளிச்சு எழுப்பினேன்” . என கூறினாள் ..
“அப்போ… நான்! நான் !” என நான் உளற, ” நீ தூக்கத்துல தான் உளறினடி…. எதுவும் கனவு கண்டியா?… எந்திரி போ! ப்ரெஸ் ஆகு…” என என்னைத் துரத்தியவள். .. “ஹேய் நில்லுடி! ஒரு குட் நியூஸ்டி…. நம்ம ஐடி கம்பெனி நாலு நாள் லீவு அறிவிச்சு இருக்காங்க…. நான் ஊட்டிக்கு ட்ரிப் போகலாம்னு பிளான் போட்டு இருக்கேன்…” என தஸ்னீம் போனை நோண்டிக் கொண்டு கூற எனக்கு தூக்கி வாரிப்போட்டது…இது கனவு மட்டும் தானா இல்லை நனவில் நடக்குமா என்று விக்கித்து நின்றேன் நான்….
முற்றும்.