படைப்பாளர்: லீலா சந்தர்
ஆள் இல்லாத அடுக்கு மாடி கட்டிட பகுதியில்,என் பக்கத்து வீட்டு பெண் ஆடலரசியை துரத்தி கொண்டு….. “அரசி நில்லு, எங்க போற? ஆமா…. என்னை பார்த்துட்டு ஏன் இப்படி ஓடுற?”..என்று அவன்
கேக்கும் கேள்வி எதுவும்,அவன் துரத்தும் பெண்ணின் காதில் விழவில்லை…நீண்ட தூரம் அவள் ஓடியவள்… சட்டென்று நின்றாள் ….
“அரசி” என்று இவன் அழைக்க….
இவர்கள் இருவரும் மட்டும் அந்த கட்டிடத்தில் தனியே இருந்தனர்…..
“அரசி…. என்னாச்சு உனக்கு… ஊருல உன்னை பற்றி என்னென்னமோ பேசுறாங்க… ஆனா நீ என்னடானா…. இப்படி பேய் மாதிரி அர்த்த ராத்திரியில எங்க பள்ளி கட்டிடத்துல சுத்திகிட்டு
இருக்கியே”..என்று அவன் கேக்க ….
அவன் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத அந்த பெண்… அவனை பார்த்து பல்லை காட்டி சிரித்தாள்… “ஏய்,ஏன்? சிரிக்கிற…. இல்ல இல்ல.. நீ ஆள் சரியில்ல…. நான் போய் உடனே உன் அம்மாகிட்ட
சொல்லி உன்னை வந்து கையோடு அழைச்சிட்டு போக சொல்லுறேன்” என்றவன்…. அங்கிருந்து வீட்டுக்கு திரும்ப நினைத்தான்…..
ஆனால் அவனால் அந்த இடத்தை விட்டு நகரவே முடியவில்லை…
“என்னாச்சு? என் காலுக்கு… ஏன்?என்னால என் காலை இங்க இருந்து நகர்த்த முடியல” என்றவன், மீண்டும் வேகமாக தன் காலை இழுக்க… அவன் முன் திடிரென்று தோன்றிய அந்த பெண்…. “வம்சி அண்ணா …. நான் உங்க காலை எடுத்து விடவா” என்று கேட்டவள்…. அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் கால் அருகில் அமர்ந்து அவன் பாதங்களை கடித்து தின்றாள்….
“ஏய் ஏய் அரசி என்ன பண்ற… விடு என்னை” என்று வம்சி கத்தினான்….
“எனக்கு பசிக்குது அண்ணா…. அதான் உங்க காலை சாப்பிடுறேன்” என்றவள், வாய் நிறைய ரத்தத்துடன் வம்சியை பார்த்து மீண்டும் சிரித்தாள்… “ஐயோ யாராவது காப்பாத்துங்க.. காப்பாத்துங்க” என்று வம்சி கதறினான்..”இருங்க அண்ணா… எனக்கு தாகமா இருக்குது… நீங்க கொஞ்சமா உங்க ரத்தத்தை தரீங்களா?”.. என்று கேட்டவள்,மீண்டும் வம்சியின் காலை கடிக்க ஆரம்பித்தாள்…
“ஏய் விடு என்னை….எனக்கு வலிக்குது” என்று வம்சி கத்த….
“ஏன்? அண்ணா…எனக்கு தாகமா இருக்குன்னு நான் கொஞ்சமா உங்க ரத்தத்தை குடிச்சதுக்கே உங்களுக்கு வலிக்குதே…. ஆனா உங்க அப்பா என் ரத்தத்தை கொண்டு தான் நீங்க நிர்வாகம் பண்ண உங்களுக்கு இந்த பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுக்க போறாரு … அப்போ எனக்கு
எப்படி வலித்து இருக்கும்” என்று அந்த பெண் கேக்க…..
“என்ன சொல்ற நீ….உன் ரத்தமா!?..” என்று கேட்டவன்..அவள் சொன்ன வார்த்தையை கேட்டு திகைத்து போய் இருந்தான்…
“எனக்கு பசிக்குது…. உடம்பெல்லாம் வலிக்குது….. என்னோட உடம்புல புழு பூச்சி எல்லாம் ஊருது….என்னை இங்க இருந்து காப்பாத்துங்க அண்ணா…. நான் உங்க தங்கச்சி மாதிரின்னு எத்தனை முறை சொல்லி இருக்கீங்க.. அது உண்மைனா என்னை இங்க இருந்து வெளியே
தூக்கிட்டு வந்து,என்னை என் அம்மாகிட்ட சேர்த்துடுங்க அண்ணா”…என்ற பெண்….மீண்டும் கட்டிட பகுதியில் அழுதுக்கொண்டே நடந்து சென்றவளை மூச்சிறைக்க துரத்தி சென்ற வம்சி.. “அரசி போகாத மா, நில்லு அரசி, போகாதே “.. என்று தூக்கத்தில் உளறியவன்…. முகம் எல்லாம் வேர்த்து விருவிறுத்து உறக்கத்தில் இருந்து எழுந்தவன் கண் எதிரில் காபியுடன் நின்று இருந்தாள் வம்சியின் அம்மா விஜயா…
“என்ன டா கனவு கண்டியா..
ஏன் முகமெல்லாம் இப்படி வேர்த்து இருக்கு” என்ற விஜயா கையில் இருந்த காபியை வம்சியிடம் நீட்டினார்…”அம்மா… அரசி..?” என்று இவன் கேட்டதும்…”எந்த அரசி?… அந்த பக்கத்து வீட்டு ராஜி மவளா…. அவ தான் எவன்கூடவோ ஓடி போயிட்டாளே… எப்பா.. என்ன ஒரு திமிர் பார்த்தியா அந்த பொட்ட பிள்ளைக்கு” என்று ஆடலரசியை வசைப்பாடி கொண்டே விஜயா சமையலறை புகுந்தாள்…
“இல்ல…. அரசி யார்கூடவும் ஓடி போகல… அவளுக்கு என்னமோ ஆகியிருக்கு” என்று எண்ணிய வம்சி… சற்றும் தாமதிக்காமல் பக்கத்து வீட்டுக்கு சென்றான்…. “வாங்க தம்பி” என்று அழைத்த ராஜியின் கண்ணில் உயிர் இல்லை…. எப்படி இருக்கும்…பெண் பிள்ளை 16 வயதில் யாருடனோ ஓடி போய்விட்டாள் என்ற பழி சொல்லுக்கு ஆளான ராஜியின் கணவர் தூக்கு மாட்டி இறந்ததை நேரில் பார்த்த ராஜிக்கு,பெண்ணை ஒழுங்கா வளர்க்க வக்கு இல்லை என்ற அவபெயர் ஒரு பக்கம்
என்றால்,கணவனை பறிகொடுத்த கைம்பெண் என்ற அடையாளம் மறுபக்கம்…”அம்மா” என்று வம்சி அழைத்ததும்….ஒரு வருடத்திற்கு பிறகு தன்னை அம்மா என்று அழைக்க ஒருவன் வந்ததை பார்த்து ராஜியின் முகத்தில் சின்னதாக சந்தோசம் நிலவியது… “அம்மா…. அரசிக்கு என்னாச்சு… நம்ம ஊருல அவளை பற்றி என்ன என்னமோ சொல்லுறாங்க…
அவ யார்கூட பழகி வந்தால்” என்று வம்சி விசாரிக்க…
“நான் என்னத்த தம்பி கண்டேன்…. படிக்க போன பொண்ணு வீடு திரும்பல… என் புருஷன் போய் போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணதுக்கு அவங்க நாலு இடம் தேடிட்டு என் மவ ஏதோ ஒரு பையன் கூட ஓடி போயிட்டான்னு சொல்லிட்டாங்க… என் புருஷன்னும் அவமானத்துல
நாண்டுக்கிட்டு செத்து போயிட்டான்… என்னைக்காவது ஒரு நாள் என் மவ திரும்ப வருவான்னு நான் அவளுக்காக காத்து இருக்கேன்…
ஏன்னா என் மவளுக்கு காதல் கல்யாணம் எல்லாம் பிடிக்காது.. அவ டாக்டர்க்கு படிச்சி அவளோட வாழ்க்கையை எங்கள போல ஏழை மக்களுக்கு அர்ப்பணிக்க போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாள்… என் பொண்ணு இப்போ எங்க…. அவளுக்கு என்னாச்சுன்னு தெரியல “..என்று ராஜி கண்கள் கலங்குவதை பார்த்த வம்சிக்கு என்னவோ ஒன்று உருத்தியது…
“இத்தனை நாட்கள் கடந்து ஏன் ஆடலராசி என் கனவுல வரணும்… அதுவும் வந்தவள் ஏன் என்னென்னமோ பேசிட்டு இருந்தாள்” என்று வம்சி புல்பியவன்…. நேராக அவனுக்காக தன் அப்பா கட்டிக்கொண்டு இருக்கும் பள்ளிக்கு சென்றான்…. கட்டிட வேலையெல்லாம் வேகமாக நடந்து கொண்டு இருந்தது…. வரும் ரெண்டாம் தேதி பள்ளியின் திறப்பு விழா…. மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்த வம்சி…இருவர் பேசிக்கொண்டு இருந்ததை எதர்ச்சியாக கேட்டான்….
“இந்த பெரிய ஐயா பயங்கரமான ஆளு தான்….இந்த building கட்ட எத்தனை உயிரை பலி கொடுத்து இருக்காரு பார்த்தியா” என்று ஒருவன் சொல்ல…”இதெல்லாம் பெரிய இடத்து விவாகரம்… அதோ அந்த நுழைவாயில்ல ஒரு பெண்ணோட ரத்தத்தை கொண்டு அபிஷேகம் பண்ணி… அந்த பொண்ணை உசுரோடு காவு கொடுத்து இந்த பள்ளியை கட்டடமா எழுப்பி இருக்காரு… அவரு மட்டும் ரத்தம் சிந்தி இந்த கட்டிடத்தை கட்டல….
இங்க ஒரு கன்னி பெண்ணோட பங்கும் இருக்கு” என்று அந்த நபர் சொல்ல…. இவர்கள் பேசியதை கேட்ட வம்சி வேகமாக பள்ளியின் நுழைவாயில் இருக்கும் இடத்துக்கு சென்றவன்….
“என்ன? உயிரோட ஒரு பெண்ணை இங்க புதைத்து இருக்காங்களா.. அப்போ… அப்போ அந்த பொண்ணு அரசியா?” என்று வம்சி தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவன்…நேராக தன் வீட்டிற்கு சென்று அவன் தந்தை இருக்கும் அறைக்குள் புகுந்து..
“அப்பா…. அரசியை என்ன பண்ணீங்க… அப்போ அரசி இந்த ஊரை விட்டு எவன்கூடவோ ஓடிப் போயிட்டாள் என்று கட்டுக்கதை கட்டிவிட்டு அந்த பொண்ணை நீங்க காவு கொடுத்து இருக்கீங்க?,அப்படித்தானே?” என்று வம்சி கேக்க…. “ஓ…. உண்மை தெரிஞ்சிடுதா… ஆமா,நான் தான் பக்கத்து வீட்டு ஆடலரசி என்ற கன்னி பெண்ணை காவு கொடுத்தேன்…..சரி நீ ஏன் இப்போ இப்படி கத்துற…. புது கட்டிடம் கட்ட கன்னி பெண்ணை காவு கொடுக்கணும்ன்னு சாமியார் சொன்னாரு,அதான் கொடுத்தேன்… பார்த்த தானே…
இந்த கட்டிடம் இவ்ளோ சீக்கிரம் வளர்ந்து நிக்க இதெல்லாம் தான் காரணம்” என்று வம்சியின் அப்பா திமிராக சொன்னார் .. “அப்படியா!?… காவு கொடுத்தா தான் ஒரு கட்டிடத்தை கட்டி முடிக்க முடியும்னா,அப்போ நான் உன்னை காவு கொடுத்து அதே கட்டிடத்தை இதை விட சீக்கிரமா கட்டி முடிச்சு.. பல ஏழைகளுக்கு இலவச கல்வி கொடுக்க ஏற்பாடு பண்ணுறேன்” என்ற வம்சி,தன் கைகளால் அவன் தந்தையின் கழுத்தை பிடித்து நெரித்தான் …
வெளியே மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்க பட்டது…
“வம்சி என்னை விடு… என்னை விடு… இதெல்லாம் நான் உனக்காக தான் பண்ணேன்,என்னை விடு வம்சி ” என்று அவன் தந்தை கதற கதற…. வம்சி தன் கையால் அவன் தந்தையின் கழுத்தை அழுத்த…. பாதி உயிர் பிரிந்த நிலையில்…. வம்சியின் அப்பா தன் இடது பக்கம் இருக்கும் கண்ணாடியை எதர்ச்சியாக பார்த்த தருணம்…
தன் கழுத்தை நெரித்து கொண்டு இருந்த வம்சியின் உருவம் தெரியாமல், அங்கே ஆடலரசியின்
உருவம் தெரிந்ததை பார்த்து அதிர்ந்து போனவன் “அரசி… நீயா!?” …..என்ற வார்த்தையை இறுதியாக உச்சரித்த நிலையில் உயிரை இழந்தார்…
அடுத்த சில நொடிகளில்… “அப்பா கதவை திறங்க… என்ன அப்பா,என்ன சத்தம் அங்கே “..என்று கேட்டுக்கொண்டே வம்சி தன் தந்தையின் அறைக்கதவை திறந்தவன் கண் எதிரில் கால்மீது கால் போட்டுக்கொண்டு வம்சியின் அப்பா அவனைப் பார்த்து சிரித்தவர்…
“வம்சி…
நம்ம பள்ளிக்கூடம், ஏழை எளிய மக்களுக்கான இலவச பள்ளிக்கூடமாக அமையும் என்று பேப்பர்ல அறிக்கை கொடு”… அதற்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் தண்ணி கொடு,ரொம்ப தாகமா இருக்கு, அப்படியே பக்கத்து வீட்டு ராஜி அம்மா கிட்ட சொல்லி அவங்க கையால
சாப்பாடு செஞ்சி கொடுக்க சொல்லு…ரொம்ப பசிக்குது ”… என்று சொல்லும் தன் தந்தையின் பேச்சைக் கேட்டு குழம்பிய வண்ணம் அந்த அறையில் இருந்து வெளியே வர முயன்ற வம்சியின் கண்களில் எதர்ச்சியாக அருகில் இருந்த கண்ணாடி தெரிய, அந்தக் கண்ணாடியில் தன் தந்தை அமர்ந்திருக்கும் இருக்கையில் பிரதிபலித்தது ஆடலரசியின் உருவம்…
முற்றும்.