படித்ததில் என்னை வெகுவாக கவர்ந்தது, ஐயா சாண்டில்யன் அவர்களின் கடல்புறா கதாநாயகன் இளையபல்லவன் என்கிற கருணாகரன் கதாபாத்திரம்தான்.
காரணம் தமிழர்களின் பெருமை இளையபல்லவன் கதாபாத்திரம். இளையபல்லவன் செய்யும் வீரச் செயல்கள், வகுக்கும் போர்தந்திரங்கள், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க செய்யும் தந்திரங்கள் எல்லாமே தமிழர்களின் அனைத்து பெருமைகளையும் உயர்த்தி பிடிப்பதாகவே அமைந்திருக்கும், அப்பப்பா அப்படி ஒரு பிரமிப்பை தரும், நிஜத்தோடு கற்பனை கலந்த கதாபாத்திரம் அது.
இம்மாதிரியான செயல்கள் சாத்தியமா என்கிற கேள்வி தோன்றினால், முடியும் என்கிற பதிலை, தாரளமாக சொல்லலாம். அப்படியாக அந்த கதாபாத்திரத்தை படைத்திருப்பார் ஐயா சாண்டில்யன் அவர்கள். சந்திக்கும் பேராபத்துகளை, பதட்டப்படாமல், அநாயசமாக கையாண்டு, இப்படியொரு மனிதன் இருப்பானா என்று எதிரியே யோசிக்கும் அளவுக்கு இளைய பல்லவனின் செயல்கள் ராஜ தந்திரமாக இருக்கும். இவன் நல்லவனா, கெட்டவனா, நம்பலாமா, இப்படிபட்டவன், எப்படி மாவீரன் என்று அழைக்கப்படுகிறான், என்று அவனை எதிர்ப்பவர்கள் குழம்பும் அளவுக்கு செயல்பாடுகள் அமைந்திருக்கும். ஒருவனை பார்த்த உடனே, அவன் எப்படிப்பட்டவன் என்பதை தீர்மானம் செய்து, அதற்கேற்றாற் போல, தன் செயல்களை மாற்றிக் கொண்டு, வெற்றி பெறும் ஒரு அருமையான கதாபாத்திரம் இளையபல்லவன். தன் வீரர்களிடம் பரிவு, எதிரிகளிடம் வீரம், சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளும் ராஜ தந்திரம், அதற்கான பேச்சுத் தந்திரம், வாதத் திறன், காரணங்களை தொகுத்துக் காட்டும் சாமர்த்தியம், மட்டுமல்லாமல் காதலிகளிடம் காட்டும் அன்பு இப்படி எல்லாவகையிலும் மிகவும் சிறப்பாக, இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பொறாமைபடும் அளவிற்கு அமைக்கப்பட்டிருக்கும் இளையபல்லவன் கதாபாத்திரம்,
என்னை மட்டுமல்லாமல், நாவல் படிக்கும் பழக்கமுள்ள அனைவரையும் கவர்ந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
புத்தக உலா போட்டி: ராகவன் மாணிக்கம்
previous post