வஞ்சி சொல்லும் போட்டி கதை: யாரோ இவள்

by admin 2
62 views

எழுதியவர்: திவ்யா

அம்மா நான் நேத்தே சொல்லிட்டேன், எனக்கு இன்னைக்கு லஞ்ச் வேணாம்னு நீ ஏம்மா பேக் பண்ணுன? என கல்லூரி டூருக்கு கிளம்பின ரவி கத்த, சாப்பிடலைன்னாலும் பரவால்ல, நீ எடுத்துட்டு போப்பா என பாந்தமாக சொன்ன கண்மணியை முறைத்து விட்டு லஞ்ச்சை பேக்கில் திணித்தபடியே நகர்ந்தான். 

           ரவியை வழியனுப்பிவிட்டு உள்ளே திரும்பிய நொடி, “கண்மணி கண்மணி” என கணவன் அழைக்க “அச்சோ, இருங்க எடுத்து தரேன்” என அவசரமாய் பீரோவைத் திறந்து ஃபைலோடு சேர்த்து மடித்த துணிகளையும் இழுத்து வேகமாய் கணவனிடம் கொடுக்க, நல்ல ஆளு நீ என பைலை வாங்கிக் கொண்டு கிளம்பினான் மூர்த்தி. 

         “அம்மாடி மாத்திரை தீர்ந்து போச்சு வேலையை முடிச்ச பிறகு வாங்கிட்டு வாம்மா, மாத்திரை போடலைன்னா பிறகு அதுக்கு வேற ஆஸ்பத்திரி, 

டாக்டர்னு அலையணும்” என தன் பங்கிற்கு கண்மணிக்கு செய்து முடித்த திருப்தியோடு கண்மணியின் மாமியார் நடைபயிற்சிக்குச் சென்றார். எத்தனை வேலை செய்தாலும் டயர்டா, எனக்கா? நெவ்வவ்வவ்வவர் என உள்ளம் கொக்கரித்தாலும் உடல் கொஞ்சம் ரெஸ்ட் வேணும் ப்ளீஸ் எனக் கெஞ்சியது. உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ஒரு டீ குடிப்போம். ரெஸ்ட் அன்டு ரெஃப்ரஷ் (rest and refresh), ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் என தனது யோசனைக்காக தன்னைப் பாராட்டி விட்டு டீ தயாரிக்கச் சென்றாள்.

               இதோ அடுத்து அவளின் மருமகள், “ஆன்ட்டி, ஆரவ்க்கு ப்ரேக்ஃபாஸ்ட் மட்டும் கொடுத்துடுங்க, நான் ஆபிஸ் கிளம்பறேன் என அழகாய் ஒன்றரை வயது மகனை கண்மணியிடம் ஒப்படைத்துவிட்டு நழுவினாள் மேகலா. உண்மையில் இவள் ஒரு காட்டுமரம். சுற்றி உள்ளவர்கள் கட்டுக் கொடியென தன்மேல் படர்ந்து தன்னைப் பயன்படுத்தி அவர்கள் வளர்வதை அறியாத காட்டுமரம்.

           அவள் கைபிடித்து நடை பழகிய மகன்கள் கட்டியவள் கைபற்றிச் சென்றனர். அவளுக்கு மாங்கல்யம் சூடிய மணவாளன் மண் நீங்கி விண்ணுலகம் செல்ல, நீ முன்னே செல் நான் பின்னே வருகிறேன் என மாமியாரும் சிவபதம் அடைய என்னை மட்டும் ஏன் விட்டு வச்சிருக்க, பரமசிவா! பரந்தாமா! என்னையும் சீக்கிரம் உன்கிட்ட கூப்புட்டுக்கப்பா! என நிதமும் கண்ணீர் விட்டுக் கதறினாள் கண்மணி.

          அதன்பிறகு நிமிடங்கள் கரைந்து வருடங்களாய் மறைய இதோ இப்போதும் அதே கண்மணி, அதே காட்டுமரமாய் ஆனால் நூற்றுக்கணக்கான சொந்தங்களுடன் ஒரு ஆஸ்ரமத்தில். இங்கும் அவள் காட்டுமரம் தான். தான் யார் என்பதை உணராத, தன்னை அர்ப்பணித்து பிறரை வாழ வைத்த வளர வைத்த காட்டுமரம்.

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!