சித்திரைத் திருவிழா போட்டிக்கதை: அறம் செய்ய விரும்பு

by admin
105 views

எழுத்தாளர்: தஸ்லிம்

“ஹே சுதா உனக்கொரு விஷயம் தெரியுமா?!”.

“என்ன நிலாக்கா? என்ன விஷயம்?”.

நிலா, “கவர்மெண்ட்ல இருந்து தையல் பழகி அந்த சர்டிபிகேட் வச்சு இருந்தா இனாமா தையல் மெஷின் தர்றாங்களாம்.. ஊரே அங்க வி.ஏ.ஓ. ஆபீஸுக்கு வழியுது.. அங்க தான் ஏதோ லெட்டர் தருவாங்களாம்.. அதை வாங்கிட்டு போய் கலெக்டர் ஆஃபீஸ்ல கொடுக்கணுமாம்.. எல்லாரும் பேசிக்கிறாங்க”.

சுதா, “நிஜமா தான் சொல்றியாக்கா.. உனக்கு யாரு இந்த சேதி எல்லாம் சொன்னாங்க”..

நிலா, “நூறு நாள் வேலைக்கு போயிருந்தேன்.. அப்போ அங்க தான் பேசிக்கிட்டாளுக”.

சுதா, “அப்போ போய் என்ன ஏதுன்னாவது விசாரிச்சுட்டு செய்யாலாமேக்கா.. நானும் தான் ஒரு பத்து வருஷம் முன்னாடி தையல் பழகுனேன்”..

நிலா, “அது தெருஞ்சனால தாண்டி உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு இருக்கிறேன்.. நீ வேற தனியா கிடந்து புள்ளை குட்டியோட கஷ்டபட்டுட்டு இருக்க.. உன் புருஷனும் உன் கூட இல்ல.. அது தான் ஒரு தையல் மெஷின் உனக்கு தந்தாங்கான்னா நீயும் அதை வச்சு ஏதாவது பிழச்சுக்குவியேன்னு உன்கிட்ட சொன்னேன்.. எனக்கு கேள்விப்பட்டதுல இருந்தே உன் நியாபமாக தான் இருந்துச்சு.. அதான் உடனே வந்து சொல்லிட்டேன்”..

சுதா, “ரொம்ப நன்றிக்கா.. நான் அதுக்கு என்ன பண்ணனும்னு என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன்”..

அதன் படி அக்கம் பக்கத்தில் அது என்னவென்று விசாரித்து சுதா தன் தையல் பயின்ற சான்றிதழையும், ஆதார் அட்டையையும், குடும்ப அட்டையையும்  எடுத்துக் கொண்டு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றாள்..

அங்கு அந்த கிராம நிர்வாக அலுவலர் அன்று விடுமுறையில் இருக்க.. அவருடைய உதவியாளர் மட்டுமே பணியில் இருந்தார்..

சுதா அங்கு போகும் சமயத்தில் கூட்டம் எதுவும் இல்லாதிருக்க இவளிடம், “என்ன விஷயமாக வந்து இருக்கிறீர்கள்?” என்று அந்த உதவியாளர் கேக்க..

சுதா, “இந்த தையல் மெஷின் திட்டம் ஏதோ ஒன்னு இருக்காமே” என்று அவள் இழுக்க..

உதவியாளர், “ஆமா இப்போ அதுக்கு என்ன?” என்று அவர் கேக்க..

சுதா, “அதுக்கு எழுதிக் கொடுக்கணும்”..

உதவியாளர், “ஓஹோ.. அதுக்கு எழுதிலாம் கொடுக்க தேவை இல்லைம்மா.. உங்க சர்டிபிகேட் ஆதார் கார்டு ஸ்மார்ட் கார்டு இது மூனுக்கும் உள்ள ஜெராக்ஸ் வச்சு இருக்கிங்களா?” என்று கேட்க..

சுதா, “ம்ம் இருக்குங்கையா” என்றாள் சந்தோஷத்துடன்..

உதவியாளர், “அப்போ அந்த மூனையும் எடுத்துக்கோங்க.. அதுல ஒரு ப்ரூஃப் பின்னாடி மட்டும் உங்க ஃபோன் நம்பரையும் உங்களுக்கு சொல்லி தந்தாங்கள்ள அந்த டீச்சரோட ஃபோன் நம்பரையும் எழுதி தாங்க.. வி.ஏ.ஓ. வந்ததும் உங்களுக்கு சின்ன ஸ்லிப்ல ஒன்னு எழுதி தருவாங்க.. அதை வாங்கிட்டு போய் நீங்க கலெக்டர் ஆஃபிஸுக்கு கொண்டு போகனும்” என்று சொன்னார்.

அது வரை இவ்வளவு சுலபமாகவா நமக்கு ஒரு விஷயம் கிடைக்க போகிறது என்று துள்ளி குதித்து கொண்டிருந்த அவளது உள்ளம் அதள பாதாளத்தில் தொபுக்கென்று விழுந்தது.

சுதா, “ஐயா அந்த டீச்சர் நம்பர் எல்லாம் என்கிட்ட இல்லையே” என்றாள் பரிதவிப்புடன்..

உதவியாளர், “அப்போ ஒன்னும் பண்ண முடியாதுமா.. அந்த நம்பர் கண்டிப்பா வேணும்.. அது இருந்தா தான் வி.ஏ.ஒ. அதுல சைன் பண்ணி கொடுப்பாரு.. இல்லைன்னா தர மாட்டாரு”..

சுதா, “அது நான் தையல் பழகுனது எல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னாடிங்க.. அப்போ என்கிட்ட எல்லாம் எங்கங்க ஃபோன் இருந்தது.. இப்போ தான் இந்த பட்டன் போனே வாங்கி வச்சுருக்கேன்” என்று தன் ஃபோனை காட்டினாள்..

உதவியாளர், “அதெல்லாம் எனக்கு தேவை இல்லாதது மா.. நீங்க நிஜமாவே தையல் பழகி இருந்திங்கன்னா அவங்க நம்பர் உங்க கிட்ட கண்டிப்பா இருக்கும்.. அது எப்படி சொல்லிக் கொடுத்தவங்க நம்பர் கூட இல்லாம இருப்பிங்களா?” என்று கேள்வியுடன் நிறுத்த..

சுதா, “அய்யோ அப்போ எனக்கு கல்யாணம் கூட முடியலைங்க.. பொழுது போக்குக்குண்ணு இலவசமா சொல்லிக் கொடுத்தாங்களேண்ணு பழக போனது.. அப்போ இப்படி ஒரு சர்டிபிகேட் கொடுப்பாங்கன்னு கூட எனக்கு தெரியாது.. சும்மா ஆசையா வாங்கி வச்சது.. இப்போ அது உதவும்னு தெருஞ்சதும் எடுத்துக்கிட்டு ஓடி வந்துருக்கேன்.. புருஷனும் இல்லாம என் பிள்ளைகளை வளர்க்க ரொம்ப கஷ்டப்படுறேன் ஐயா.. அவங்க நம்பர்லாம் என்கிட்ட இல்லைங்க.. எப்படியாவது உதவி பண்ணுங்கையா” என்று கையெடுத்துக் கும்பிட்டு அழுதபடி கூற..

உதவியாளர், “அய்யோ என்னம்மா நீ.. கையை கீழ இறக்குமா.. நான் ஒன்னும் உன்கிட்ட சும்மா சொல்லிக்கிட்டு இருக்கலைம்மா.. வி.ஏ.ஓ. வந்தா என்ன சொல்லுவாரோ அதை தான் நானும் சொல்றேன்.. உனக்கு முன்னாடி வந்தவங்க கிட்டயும் இதை தான் சொல்லி அனுப்பினாரு.. நிறைய பேரு போலியான சர்டிபிகேட் காசு கொடுத்து வாங்கி கொண்டு வந்து கொடுத்துட்டு போயிட்டாங்களாம்.. ஏற்கனவே இங்க புகார் வந்துருக்கு.. அதோட ரெண்டு நாளைக்கு முன்னாடி இருந்து தான் இப்படி நம்பர் கேக்க ஆரம்பிச்சாரு” என்று அவளுக்கு விளக்கம் அளித்தான்..

சுதா, “அய்யய்யோ அப்படி எல்லாம் நான் எதுவும் பண்ணலங்க.. நான் உண்மையா பழகி வாங்குன சர்டிபிகேட் தான் இது”.. 

உதவியாளர், “அதை அவர் நம்ப மாட்டாருமா.. ஏதோ அவரு தான் காசு வாங்கிட்டு எல்லாருக்கும் பொய்யா கையெழுத்து போட்டு கொடுக்குற மாதிரி சொல்லிட்டாங்களாம்.. அவரே ரொம்பவே கை சுத்தமான ஆளு.. அவரை போய் இப்படி சொன்னா அவருக்கு அது பெரிய இழுக்கு மாதிரி பார்க்குறாரு.. அதுனால அவர் மேல தப்பு சொல்லிருவாங்கலோன்னு ரொம்பவே கவனமா இருக்காரு.. அதுனால நம்பர் கண்டிப்பா வேணும்.. உன்னை பார்த்தாலும் வேற பாவமா இருக்கு”..

“சரி நீ பழகுணப்போ உன்கூட பழகுனவங்க யாரோட நம்பராவது வச்சு இருக்கியா? அவங்க கிட்ட அந்த டீச்சர் நம்பர் இருக்கான்னு கேட்கலாம்ல” என்று யோசனை சொன்னதும்..

சரி என்று யோசித்தவள்.. அப்போது அவளுடன் பழகியவர்கள் மூன்று பேர் எண்கள் மட்டுமே அவளிடம் இருக்க.. அவர்களுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி அந்த டீச்சர் எண்ணை கேட்டாள்.. அவர்களுக்கும் அந்த எண் எல்லாம் தெரியவில்லை.. போதாதற்கு அவர்களுக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே இப்பொழுது தான் தெரியும் என்றும் உனக்கு அவரின் எண் கிடைத்தால் எனக்கும் தா என்றும் கேட்டுக் கொண்டார்கள்..

யார்கிட்டேயும் இல்லையாம் என்று அவள் அவனிடம் சொல்ல.. அவனுக்கும் அவளைப் பார்க்க பாவமாக தான் இருந்தது.. ஆனாலும் அவனால் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாதே முடிவு அவரின் கையில் தானே என்று நினைத்தவன், “அந்த சர்டிபிகேட்ட தாம்மா பார்ப்போம்” என்று கேட்க..

அவள் கொடுத்ததும் அதை வாங்கி பார்த்தவன் அதில் ஒரு கல்லூரியில் இருந்து வந்து பயிற்றுவித்த தாக போட்டு இருக்க.. அந்த கல்லூரி எண்ணை தேடி எடுத்தவன் அந்த எண்ணிற்கு முயற்சித்து பார்த்தான்.. அவர்களோ ஆமாம் அப்படி ஒன்று பத்து வருடத்திற்கு முன் நடந்தது.. ஆனால் அந்த டீச்சரின் எண்ணை இப்படி யார் கேட்டாலும் ஃபோனில் கொடுத்து விட முடியாது.. நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்.. ஆனால் இன்று ஒரு மணி வரை மட்டுமே கல்லூரி இயங்கும்.. அதற்கடுத்து இரண்டு நாட்கள் விடுமறை.. அதற்குள் வர முடிந்தால் வாங்க” என்று சொல்லி வைத்து விட்டார்கள். 

அவர்கள் ஊரில் இருந்து அந்த கல்லூரியோ ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. இப்பொழுதே பனிரெண்டு மணி ஆகி இருக்க இப்பொழுது பேருந்தை பிடித்துப் போனாலும் அங்கு சென்று சேர முடியாது என்று புரிய வர அதை அவன் சுதாவிற்கும் புரிய வைத்தான்..

அதை கேட்டு விரக்தி புன்னகை கீற்று அவள் இதழில் வெளியானது.. “இந்த உலகத்தை பாருங்களேன் போலியான சர்டிபிகேட் எடுத்துக் கொடுத்தவங்களுக்கு எல்லாம் எந்த கேள்வியும் இல்லாம சுலபமா எல்லாம் கிடைச்சுருச்சு.. ஆனா உண்மையா பழகுன எனக்கு அதை நிரூபித்து கேக்க வேண்டிய கட்டாயமா இருக்கு.. எப்போவுமே இந்த உலகத்துல போலிகளுக்கு தான் மதிப்பு அதிகம் போல.. இந்த தையல் மெஷின் கிடைச்சதுனா அதை வச்சு பொழைப்பு நடத்தி என் புள்ளைகளுக்கு ஒரு வயித்து கஞ்சியவாவது ஒழுங்கா ஊத்தலாமேன்னு கனவோட வந்தேன்.. எல்லாம் கனவாவே போயிருச்சு.. சரி ரொம்ப நன்றிங்க எனக்காக மெனக்கெட்டிங்க.. நான் போயிட்டு வர்றேன்” என்றவள் திரும்பி நடக்க..

“ஏம்மா” என்று அவன் அழைக்க..

அவள் திரும்பியதும்.. அந்த தையல் மெஷின் கொடுக்குற ஸ்கீம் எப்போவும் உள்ளது தான்.. நீ மூணு நாள் கழிச்சு கூட அந்த நம்பரை வாங்கி தா.. உனக்கு கண்டிப்பா தையல் மெஷின் கிடைக்கும்.. நம்பிக்கையோட போ என்று சொல்ல.. அவள் முகத்திலோ மலர்ச்சி..

சுதா, “நிஜமாவா சொல்லுறீங்க.. மூணு நாள்ல முடுஞ்சுரும்னு சொன்னாங்களே” என்று பதைபதைப்புடன் கேட்க..

உதவியாளர், “அப்படி எல்லாம் இல்ல.. இது வருஷம் முழுசும் இருக்கும்.. இப்போ தான் இங்க நிறைய பேருக்கு அதை பத்தி தெரிய வந்துருக்கு.. அதுனால எல்லாரும் இப்போ திடீர்னு வர்றாங்க போல” என்றதும்..  தன் வாழ்வில் நல்ல மாற்றம் கண்டிப்பாக ஏற்படும் என்று சந்தோஷத்துடன் அவனுக்கும் நன்றி நவிழ்ந்து விட்டு வீடு திரும்பினாள் சுதா..

அவள் வீட்டிற்கு போய் கொண்டிருக்கும் போதே அவளுக்கு ஒரு அழைப்பு வர.. அதில் இவளுடன் பழகிய ஒருவர் தான் வேறொருவரிடம் கேட்டு அந்த டீச்சரின் எண்ணை பெற்று விட்டதாகவும்.. அதை அவளுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் சொல்ல.. அவளுக்கோ சந்தோஷம் தாங்கவில்லை..

உடனே கிராம நிர்வாக அலுவலகத்துக்கு ஓடியவள் தனக்கு அந்த எண் கிடைத்து விட்டதை சொல்லி விட்டு அவன் கேட்ட தரவுகளை கொடுத்து விட்டு அங்கிருந்து வந்தாள்.  மூன்று மாத இடைவெளியிலயே அவளுக்கு தையல் இயந்திரமும் கிடைக்க ஒப்புதல் கிடைத்து மறு மாதமே அவள் கையில் வந்தும் சேர்ந்து விட தன் திறமையையும் பெருக்கி கொண்டு அவள் வாழ்வில் நன்முறையில் சுதா முன்னேறினாள்.. அவள் நினைத்ததை விட கூடுதலாகவே அவள் வாழ்வின் தரம் உயர்ந்தது..

எப்பொழுதும் ஆட்சியையும் அதிகாரத்தையும் மட்டுமே குறை சொல்லி கொண்டிருக்கிற நாம் எப்போது நம் குறையை உணர போகிறோம்.. ஒரு தையல் இயந்திரம் இனாமாக கிடைக்க போகிறது என்றவுடன் போலியான சான்றிதழை தயாரித்து அதை ஆதாரமாக வைத்து தகுதியே இல்லாதவர்கள் கூட அதை பெறுவதற்கு முயற்சி செய்வதினால் யாருக்காக அதை அரசு கிடைக்க சகலமும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறதோ அவர்களுக்கு கிடைக்க அவர்கள் போராட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள பட்டிருக்கிறார்கள்.. அது மட்டுமா மக்களின் அந்த செயல் தான் அந்த நேர்மையான கிராம அலுவலர் நடத்தையின் மீதும் சந்தேகத்தை தூண்டி அவரையும் அவரின் நேர்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி இருக்கிறது.. இப்படி அத்திப்பூத்தார் போல இருக்கின்ற நேர்மையான அதிகாரிகளை கூட மக்களின் நடத்தை மாற்றி விடுகிறது.. நல்ல அரசு இல்லை நல்ல அதிகாரிகள் இல்லை அரசியல் எல்லாம் சாக்கடை என்று பொத்தாம் பொதுவாக அனைவரையும் தூற்றாமல் முதலில் நாம் அனைத்திலும் நேர்மையாக இருக்க முயற்சிப்போம்.. மக்கள் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் லஞ்சம் வாங்குகிறவனுக்கு ஏது வழி.. நல்ல மக்களுக்கு நல்ல அரசு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நம்மில் இருந்தே மாற்றத்தை உருவாக்குவோம் நன்றி ..

முற்றும்… 

அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள்  கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://aroobi.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/

You may also like

Leave a Comment

error: Content is protected !!