எழுத்தாளர்: லட்சுமி பாலா
ஜெயா அப்போது தான் முதன் முதலாக தன் புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்திருந்தாள். ஆனால் புதுப்பெண்ணுக்கு உரிய எந்தவித மகிழ்ச்சியும் அவள் முகத்தில் இல்லை.
மாறாக பயம் மட்டுமே அவளைக் கொல்லாமல் கொன்று கொண்டு இருந்தது. அவள் அருகே இருந்த அவளது கணவன் நந்தன், “நான் இருக்கின்றேன் ஜெயா” என்று அவள் தோள்களைச் சுற்றிக் கையைப்போட்டவாறு அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
உள்ளே வந்த ஜெயாவைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள் நந்தனின் தங்கை மலர். ஆனால் தன் பயத்தை விடுத்து அவளை சிரித்த முகமாகவே பார்த்த ஜெயாவுக்கு கிடைத்தது என்னவோ முகத்திருப்பல் மட்டும் தான். இத்தனைக்கும் இது பெரியோர்கள் நிச்சயித்த திருமணம் தான்.
மலர் செல்வதைப் பார்த்த நந்தன், “நீ ஒன்னும் தப்பா நினைக்காத ஜெயா. அவள் சின்னப்பெண்” என்றான் மலரை விட வெறும் ஒரு வயதே பெரியவளான ஜெயாவைப் பார்த்து.
அவள் வெறுமனே தன் தலையை ஆட்டிக் கொண்டாள். தனக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போவதால், வேகவேகமாக தன் மகனிற்கு திருமணம் செய்திருந்தார் நந்தனின் தந்தை. எப்போதும் நந்தன் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் மலருக்கு, நந்தனின் மனைவி ஜெயாவை பிடிக்கவில்லை.
மலரோ இருபது வயதுப் பெண். அப்போது தான் கல்லூரியை முடித்திருந்தாள். இன்னும் செமஸ்டர் மதிப்பெண்கள் கூட வரவில்லை. அதற்குள் அவளது தந்தை நந்தனை அவளுக்கு திருமணம் செய்துவைத்திருந்தார்.
பார்த்ததும் ஒருவருக்கொருவர் பிடித்துப் போனதால், இருவருமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மலரிடம் இருந்து எதிர்ப்பு அதிகமாக வந்தது. காரணம், எப்போதும் தன்னுடன் மட்டும் பேசும் அண்ணன், சில நாட்களாக அலைபேசியில் ஜெயாவுடன் பேச, எல்லை இல்லாத வன்மத்தை ஜெயா மீது தேக்கி வைத்தாள்.
நந்தனுக்கு அன்னை இல்லை. பாட்டி மட்டுமே. அவர் நன்றாக தான் பேசுவது போல் இருந்தது மலருக்கு. அப்போது சொந்தக்காரர் ஒருவர் நந்தனை அழைக்க, அவன் சென்றதும், நந்தனின் பாட்டி அருகே சென்றவள், “நல்லா இருக்கீங்களா பாட்டி?” என்று அன்புடன் கேட்டாள்.
அதற்கு அவரோ முகத்தில் அடித்ததைப் போல, “இங்கப்பாரும்மா நான் நந்தாக்கும், மலருக்கும் மட்டும் தான் பாட்டி. என் பெயரு மாரியம்மா. நீ என்னை மாரியம்மைன்னே கூப்பிடு” என்று சொல்லிவிட்டு அவரும் தன் அறைக்குள் சென்றுவிட்டார்.
‘இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்தப்பாட்டி இந்த திருப்பு திருப்பிட்டு போகுது. ஒரு வேள பாட்டிய பாட்டின்னு கூப்பிட்டது தான் கோபமோ!’ என்று நினைத்துக் கொண்டாள்.
நந்தன் வீட்டில் இருக்கும் ஒவ்வொருத்தரையும் பார்க்க, ஜெயாவிற்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. ஆனால் நந்தன் நன்றாக பேசுவதால் இது அனைத்தையும் ஒதுக்கி வைக்க முடிவு எடுத்தாள்.
இப்படியே நாட்கள் சென்றது, பிரச்சனையும் ஆரம்பமானது. அதற்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டார் நந்தனின் தந்தை.
காலையில் எழுந்ததும் வழக்கம் போல, ஜெயா அனைவருக்கும் காபி கலந்து கொடுக்க, மலரிடமும் கொடுத்தாள். அதைக் குடித்துவிட்டு, என்றும் இல்லாததைப் போல இன்று, “இதைக் கழுவி வச்சிரு” என்றாள் அவள் முன்னே பொத்தென்று வைத்தபடி.
அண்ணி என்ற மரியாதை எல்லாம் மலரிடம் எப்போதும் கிடையாது. மலரின் எண்ணம் எல்லாம், இந்த வீட்டிற்கு சம்பளம் இல்லாத வேலைக்காரி ஜெயா என்பது தான். மலரின் மரியாதையற்ற பேச்சை நந்தனும் கண்டுகொள்ளமாட்டான். அவனது எண்ணம் எல்லாம், “சின்னப்பெண்” என்று கூறி கடந்து செல்வதில் தான் இருந்தது.
மலரின் பேச்சைக் கேட்டு கொதித்த ஜெயா, “உன் கப்பை நீயே கழுவு மலர்” என்றாள் கண்டிப்பாக.
அதனைக் கேட்டுக் கொண்டிருந்த நந்தனின் தந்தை, “ஏன்ம்மா நீ கழுவி வச்சாத் தான் என்ன?. மலர் உன்னை வேற்று ஆளா பார்க்காம தன் குடும்பத்தில் ஒருத்தியா பார்த்து ஒரு உதவி கேட்டா பண்ண மாட்டியா?” என்று சத்தம் போட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “என் பொண்ணு போற வீடு பணக்கார வீடு தானாம். ராணி மாதிரி வாழ்வா. அவளுக்கு சேவை செய்யுறதுக்குன்னு நிறையா வேலைக்காரங்களும் இருப்பாங்களாம். ஜோசியக்காரனே சொல்லிட்டான். அவளுக்கு சேவகம் பண்ற பொறுப்பு உன்கிட்ட இருந்து ஆரம்பிக்கட்டும்” என்று நகைச்சுவை போல் சிரித்துக் கொண்டே கூற, “இதெல்லாம் என்ன பேச்சு” என்பது போல் பார்த்த ஜெயாவின் பார்வை நந்தனை நோக்கிச் சென்றது.
அவனோ, “என்ன ஜெயா…” என்று செய்தித்தாளில் இருந்து முகத்தை நிமிர்த்தியவாறு முறைத்தான். அதில் அவளும் அடங்கித் தான் போனாள்.
சூதுவாது தெரியாத ஜெயாவோ, ‘என் மீது தான் தவறு போல’ என்று நினைத்துக் கொண்டு, மலர் குடித்து விட்டு வைத்த கிளாசை கழுவி வைத்தாள்.
அதனைப் பார்த்து விஷமமாக சிரித்த மலர், ‘இதெல்லாம் இவளுக்குப் போதாது என்று நினைத்தவளாக, மாரியம்மாவிடம் சென்றவள், “பாட்டி அந்த ஜெயா போட்டுட்டு வந்த நகை எல்லாம் பார்க்க முப்பது பவுன் இருக்குற மாதிரியே தெரியலையே!” என்று கேட்க, அதனை யோசித்தவர், “அட ஆமா” என்று நாடியில் கையை வைத்துக் கொண்டு, நந்தனை அழைத்தார்.
அப்போது தான் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்குள் அடி எடுத்து வைத்திருந்தாள் ஜெயா. அவள் முன்னே ருத்ரமூர்த்தியாக வந்து நின்ற நந்தன், அவள் நகை பெட்டியை அவள் முகத்தில் விசிறி அடித்தான். திடீரென்று ஏற்பட்ட தாக்குதலில் நிலை குலைந்த ஜெயா, அப்படியே தன் கன்னத்தைப் பிடித்தபடி கீழே விழுந்தாள்.
என்ன நடக்கின்றது என்று எதுவும் அவளுக்குப் புரியவில்லை. நிதானத்திற்கு வந்தவள், கலங்கும் கண்ணீருடன் கேள்வியாய் நந்தனைப் பார்த்தாள், “முப்பது பவுன் போடுறேன்னு சொல்லிட்டு வெறும் இருபத்தி எட்டு பவுன் தான் போட்டு இருக்கார் உங்க ஐயா” என்று சொல்லி குதிக்க ஆரம்பித்தான்.
அதில் உணர்ச்சி அடைந்தவளாக, தன்னை நிரூபிக்கும் நோக்கோடு, “இல்லைங்க என் அப்பா சரியாத் தான் போட்டாரு. நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நினைக்குறேன்” என்றாள் கலக்கமாக.
“நகையை எடுத்துட்டுப் போய் எடை போட்டுட்டு வந்துட்டேன்” என்றான் கோபமாக. அதில் பெண்ணவளின் மனது பெரியதாக அடிவாங்கியது.
தன் காதைத் தடவியவள், “என் காதில் உள்ள கம்பல், என் கையில் உள்ள மோதிரம் எல்லாத்தையும் சேர்த்தா முப்பது பவுன் வரும்ங்க” என்று அழுது கதறினாள்.
உடனே தன் குரலை செறும்பிய மாரியம்மா, “கம்பல், மோதிரம் எல்லாம் பிள்ளைப்பண்டம். அது எல்லாம் கணக்கில் வராது” என்று சொல்லி முகத்தை ஒரு வெட்டு வெட்டினார்.
அவர்கள் சொல்வது எல்லாம், அவளுக்குப் புதியதாக தெரிய, “பிள்ளை பண்டமா?” என்றாள் புரியாமல்.
“ஆமாம் அது எல்லாம் தாய் மாமன் சீர்” என்றான் நந்தன்.
தன் காதை தடவி பார்த்தவள், “ஆனா இது என்னோட அப்பா வாங்கியது தான். அதுவும் இல்லாம எனக்குத் தான் தாய் மாமாவே இல்லையே” என்று சொல்ல, இப்போது மலரோ, “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது நீ சொல்றது எதுவும் கணக்கில் வராது” என்று வாதிட்டாள்.
ஜெயா கோவிலுக்கு சென்றதும் நந்தனை அழைத்த மாரியம்மா, “அவள் நகையை எடை போட்டுட்டு வா” என்றார். அதற்கு அவன் மறுப்பு தெரிவிக்க, “அப்ப இந்த வயசான அப்பாவையும், பாட்டியையும், கல்யாணம் ஆகாத உன் தங்கச்சியையும் தனியா விட்டுட்டு அவள் பின்னாடி போகலாம்னு முடிவோட இருக்கியா?” என்று அவனை எப்படி அடித்தால் அடங்குவான் என்ற வித்தையை நன்றாக கற்று வைத்திருந்தார் மாரியம்மா.
அதில் அவன் மௌனமாக, “நீ இப்படியே இருந்தா, எல்லாமே அவள் கைக்கு போய்விடும். நீயும் அவள் பேச்சைக் கேட்டு தான் ஆடுவ” என்று அவர் வராத கண்ணீரை வரவைக்க முயன்றுகொண்டிருந்தார். அதற்கு அவனும் படிந்தான்.
மாரியம்மாவிற்குப் பயம், ஏனென்றால் நந்தனின் சம்பாத்தியத்தில் தான் அந்தக் குடும்பம் ஓடி கொண்டு இருந்தது. திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் பெண் எப்படி இருப்பாள் என்று தெரியாது. அதனால் ஆரம்பத்திலையே அவளைக் கட்டுக்குள் வரவைக்க முயன்றார்.
நந்தனின் தாய் அவனது சிறுவயதிலையே இறந்துவிட, அவனையும் மலரையும் வளர்த்தது அவர் தான். அதனால் அவர் எதை சொன்னாலும், மறுபேச்சு இல்லாமல் கேட்பான். இப்போதெல்லாம் மாரியம்மா நந்தனிடம், “உனக்கு மலர் மட்டும் தான் முக்கியம் நந்தா. உனக்கு பிள்ளை பிறந்தால் கூட அது இரண்டாவது தான்” என்று சொல்லியே வந்தார்.
நகை பிரச்சனை முடிந்து இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. இப்போதெல்லாம் நந்தன் ஜெயாவிடம் அவ்வளவாக பேசுவது இல்லை. ஜெயாவும் இதைப் பற்றி அவள் தந்தையிடம் எதுவும் வாய்திறக்கவில்லை. வயதான தாய் தந்தையிடம் இதைக் கூறி அவர்களை வருத்தப்பட வைக்க அவள் விரும்பவில்லை.
“பொண்டாட்டி போட்டுட்டு வந்த நகையை உரிமை கொண்டாடும் கேவலமான ஆள் நான் கிடையாது. ஆனா போடுறேன்னு சொன்ன நகையைப் போடாம ரெண்டு பவுன் குறைச்சு போட்டது உன் குடும்பத்தின் தப்பு தான்” என்று நியாயம் பேசினான் நந்தன்.
மலரோ ஒரு படி மேலே சென்று, “சரியான திருட்டுக் குடும்பம்” என்று ஜெயாவைக் கடக்கும் போது எல்லாம் மொழிபவள், அன்று ஒருபடி மேலே சென்று, “ஒன்னுமே போடாமா இவள் அப்பன் இவளை எங்க தலையில் கட்டிவச்சிட்டான்” என்று விஷத்தைக் கக்கும் வார்த்தைகளைக் கூறினாள்.
ஜெயாவின் பொறுமை எல்லை கடந்தது, மலரை நோக்கி, “ஏன் இப்படி எல்லாம் பேசுற மலர்” என்றாள் ஆற்றாமையுடன், உடனே அவள், “நான் பொதுவா சொன்னேன். குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்” என்று அதற்கும் சேர்த்தே பேசினாள்.
அவர்களின் குடும்ப அரசியல் ஜெயாவிற்கு புரிபடவில்லை. ஒருநாள் கோவிலில் வைத்து அவள் தன் மனதுடன் பேச ஆரம்பித்தாள்.
‘அவங்க பண்றது நல்லதோ, தப்போ, அதை அவங்களுக்கு அப்படியே நான் திருப்பி செய்தா என்ன?’ என்று அவளுக்கு எண்ணம் வர, நேராக நகைக்கடைக்கு சென்றவள், அவர்கள் போட்ட தாலி செயினைக் கழட்டி அதை எடைபோட்டாள்.
அதுவோ அவர்கள் சொன்ன ஏழு பவுன் இல்லாமல் வெறும் ஐந்து பவுன் மட்டுமே இருந்தது. உடனே தனக்குள் சிரித்துக்கொண்டவள், போரில் வெற்றி அடைந்த வீர மங்கையைப் போல வீட்டை நோக்கி நடைபோட்டாள்.
தாலி செயின் ஐந்து பவுன் இருக்கும் விஷயத்தை நந்தனிடம் கூறி, “நாங்க பண்ணது தப்புன்னா நீங்க பண்ணதுக்குப் பெயர் என்ன?” என்றாள்.
“உண்மையைத்தான் சொல்றியா?” என்று நம்பமுடியாமல் கேட்டான். ஏனென்றால் செயின் செய்ய நந்தன் கடைக்கு செல்லவில்லை. மாரியம்மா தான், “நீ வேலைக்குப் போ நந்தா. நானும் உன் ஐயனும் இதைப் பார்த்துக்குறோம்” என்றனர்.
இத்தனைக்கும் அது நந்தனின் காசு தான். ஜெயா, “ஆம்” என்று தன் தலையை ஆட்ட, நந்தனால் எதுவும் பேசமுடியவில்லை. தலைகுனிந்து நின்றான்.
பின் அவளிடம் மன்னிப்பைக் கேட்க, மிகுந்த கெஞ்சலுக்குப் பிறகே இறங்கி வந்தாள் ஜெயா. “நீங்க என்னை நம்புறீங்க தானே” என்று அவள் கேட்க.
“நம்புறேன் ஜெயா. ஆனா இதை என் வீட்ல கேட்க முடியாது. குடும்பம் பிரியக்கூடாது. நீயும் இதைப்பற்றி யார்கிட்டையும் பேசாத” என்றான்.
“ஐயோ உங்களுக்கு ஏன் புரியமாட்டேங்குது. இது தங்கத்தைப் பத்தின விஷயம் கிடையாது. நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். என் அப்பாவை என்ன பேச்சு பேசுனா தெரியுமா உங்க தங்கச்சி. உங்கக்கிட்ட கேட்டா சின்ன பொண்ணுன்னு சொல்றீங்க. எந்த ஊரில் சின்ன பொண்ணு இந்த மாதிரி எல்லாம் பேசுது? நீங்க இருந்தாலும் இவ்வளவு அப்பாவியா இருக்கவேண்டாம்” என்றாள்.
“குடும்பம் பிரியக்கூடாது ஜெயா…” என்று திரும்பவும் அதே வார்த்தையைத் தான் கூறினான்.
அவளுக்கே அலுத்துப்போய் விட்டது, “உங்களுக்கு எல்லாம் பட்டா தான் புத்தி வரும்” என்று திட்டிவிட்டு சென்றுவிட்டாள்.
நந்தனின் மாற்றத்திற்கும் காலம் வந்தது. வரவேற்பு அறையில் இருந்த மேஜையில் கத்தையாக சில ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டு, தன் அறைக்குள் சென்றிருந்தான் நந்தன். அங்கே வந்த மலரோ, அதில் இருந்து நூறு ரூபாய் தாள் ஒன்றும் ஐநூறு ரூபாய் தாள் ஒன்றும் எடுத்துவைத்துக்கொண்டாள். அதை அறையில் இருந்து வெளியே வந்த நந்தனும் பார்த்துவிட்டான்.
மேஜையின் அருகே சென்றவன், “மலர் நீ எடுத்த ரூபாயைக் கொடு. நான் இன்னும் கணக்கு பார்க்கல. நான் பார்த்ததும் வாங்கிக்கோ” என்று தான் சொல்லி இருப்பான், அதற்குள் மலர், “என்னைத் திருடின்னு சொல்றியா?” என்று கேட்டு கத்தினாள்.
நந்தனுக்கு எதுவும் புரியவில்லை, “என்ன பேசுற மலர்..” என்று கேட்கும் போதே அங்கே வந்த மாரியம்மா, “என்ன பிரச்சனை” என்று கேட்டார்.
“இவர் பணத்தை நான் எடுத்துட்டேன்னு சொல்றார் பாட்டி” என்று கூறி அழுதாள்.
“மலர்கிட்ட ஏன்டா கேட்குற?. உன் பொண்டாட்டி தான் வெளிய இருந்து வந்தவ அவளிடம் கேளு” என்று திரும்பவும் ஒரு சண்டையை ஆரம்பித்தார். இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயா எதுவும் பேசவில்லை.
மாற்றம் நிகழ்ந்தது நந்தனின் மனதில். ஆனால் அங்கே அவன் எதுவும் பேசவில்லை. இதனை தவறாக புரிந்துகொண்ட ஜெயா, ‘அண்ணன் தங்கச்சி பாசம் தான் முக்கியம்ன்னா எதுக்காக கல்யாணம் முடிக்கணும்?’ என்று கோபத்துடன் நினைத்தாள்.
நந்தன் எதுவும் பேசாமல் தன் செயலில் காட்டினான். மலரிடம் இப்போதெல்லாம் பேசுவதே இல்லை. அதனால் மலரின் கோபம் எல்லாம் மொத்தமாக ஜெயாவின் மீது இறங்கியது. ஜெயாவுக்கும் மாற்றம் உண்டானது. தினமும் இங்கே நடக்கும் நாடகத்தைக் கண்டு எரிச்சல் அடைந்தவள், “வன்மக் குடோன்’ என்ற யூடியூப் சேனல் ஒன்றைத் துவங்கி, அதில் மலர் கூறும் வன்மத்தை எல்லாம் கதை போல் கூற ஆரம்பித்தாள்.
அதில் அவளின் மனது மிகவும் லேசானது. அவளுக்கு ஏகப்பட்ட சப்ஸ்கிரைபர்கள் பெருகினர். அவர்களுடன் உடையாடும் போது அவளுள் நல்லவிதமாக மாற்றம் உண்டானது.
நந்தன் தன் வேலையில் கவனத்தை செலுத்தினான். மலருக்கு வரனும் வர அவளுக்குத் திருமணத்தையும் முடித்தான். மலர் இல்லாததால் பெரியவர்களும் அவர்கள் பாட்டுக்கு இருந்தனர்.
அதன் பிறகு தனது பக்கத்தின் பெயரை வன்மத்தில் இருந்த அன்பாக மாற்றி வைத்தாள் ஜெயா.
நந்தனின் தந்தை கூறியது போலவே, பெரிய பணக்கார இடத்திற்கு தான் மணமுடித்து சென்றிருந்தாள் மலர். ஆனால் ஒன்று அவளுக்கு நாலு பேர் சேவை செய்யவில்லை. இவள் தான் அங்கு ஒரு வேலைகாரி போல நாத்தனார், அவரது குடும்பம் என்று அவர்களுக்கு சேவை செய்துகொண்டிருந்தாள்.
நகைகள் பட்டாடைகள் என் அவள் கணவன் வாங்கி குவித்தாலும், அடிமை போல் தான் அவளை நடத்தினான். இங்கே அண்ணனின் அன்பில் பாதுகாப்பாக இருந்தவள், வன்மத்தின் உச்சத்தால் மாற்றம் அடைந்து சுயமாரியாதை இல்லாத வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்.
நந்தனும், ஜெயாவும் மாற்றத்தால் இன்னும் அன்னியோன்யமாகினர்.
முற்றும்.
அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.