எழுதியவர்: அருள்மொழி மணவாளன்
சொல்: மஞ்சம்
பள்ளிச் சீருடை அணிந்து, முதுகில் ஸ்கூல் பேக்குடன் காட்டிற்குள் நடந்து சென்று கொண்டிருந்தான் சேகர்.
‘காடு என்றால் அடர்ந்து இருளாக இருக்குமே! ஆனால் இங்கு மா, கொய்யா, பலா, ஆப்பிள், மாதுளை, சீதா என்று பழ மரங்கள் மட்டுமே இருக்கிறதே!’ என்று வியந்து ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்துக் கொண்டும், பசிக்கு பறித்து கடித்துக் கொண்டும் நடந்து கொண்டிருந்தான்.
வரிசையாக சீரான இடைவெளியில் நடப்பட்ட மரங்கள் கண்டதால், ‘ஒருவேளை நாம் காட்டிற்கு பதிலாக யாருடைய தோட்டத்திற்கோ வந்து விட்டோமோ?’ என்ற சந்தேகமும் அவனுக்கு வந்தது.
‘ஒருவேளை இது வேறு யாருடைய தோட்டமாக இருந்து, காவலுக்கு தோட்டக்காரன் இருந்தால், நாம் கனிகளைப் பறித்து உண்டதை பார்த்துவிட்டால், நம்மை பிடித்து கட்டி வைத்து அடிப்பானோ?’ என்ற எண்ணம் தோன்ற, அவனுக்குள் உண்டான பயத்தில் கண்கள் இருட்ட, மரங்கள் எல்லாம் நெருங்கியது.
அடர்ந்த மரங்களாக மாறி, சூரிய வெளிச்சம் உள்ளே நுழையாதபடிக்கு இருள் சூழ, பயத்தில் தன் பள்ளிக்கூட பையை முதுகில் சுமந்தபடியே கண்மண் தெரியாமல் வேகமாக ஓடினான்.
எங்கோ தூரத்தில் சலசலக்கும் நீர் ஓடும் ஓசை கேட்க, ‘வீட்டிற்கு செல்லும் வழி தெரியவில்லை, ஆற்றங்கரையோரம் நடந்து சென்றால் ஏதாவது ஒரு ஊர் வந்து விடும்’ என்று, ஆற்றை நோக்கி ஓட, ஆறோ 10 அடி ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
பாறையின் விளிம்பில் ‘இந்த கரடுமுரடான பாறையில் எப்படி நடந்து செல்ல முடியும்?’ என்று பயந்து இவன் நிற்க, பாறை அப்படியே மணல்மேடாய் மாறி சட்டென்று சரிந்தது.
புத்தகப் பையுனுடனேயே ஆற்றினில் பொத் என்று விழுந்து முழுவதும் நனைந்து விட்டான். நீச்சல் தெரியாததால் கைகளை தோணும் திசையெல்லாம் அடித்து தண்ணீருக்குள் மூழ்காமல் நீரோட்டத்தில் செல்ல, குளிரில் அவனுக்கு உச்சா வருவது போல் இருக்க, தண்ணீருக்குள் தானே இருக்கிறோம் என்று அப்படியே இருந்தும் விட்டான்.
எப்படியோ நீந்தி கரை சேர்ந்துவிட, திடீரென்று இருள் சூழ்ந்தது. தரையில் ஈர உடையுடன் படுத்து கிடக்க இடுப்புக்கு கீழே ஈரமாக இருப்பது போல் தோன்ற கண்களை கசக்கி மெதுவாய் எழ முயற்சி செய்தான்.
தனது அறையில் மஞ்சத்தில் படுத்து கிடந்தவன் வியர்வையில் குளித்து, படுக்கையிலேயே பாத்ரூமும் போய்விட்டான்.
அதன் பிறகுதான் கண்டது அனைத்தும் கனவு என்றும், கனவினிலேயே உச்சா போனதை மஞ்சத்தில் போய்விட்டோம் என்று நினைத்து, மஞ்சத்திடம் மன்னிப்பு கேட்டான், “மன்னிப்பாயா மஞ்சமே” என்று.
அவனது படுக்கையும் ‘இது தினமும் நடப்பது தானே! இன்று என்ன புதிதாக மன்னிப்பு எல்லாம் கேட்கிறான்?’ என்று நினைத்தது மஞ்சம்.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.