எழுதியவர்: நா.பா.மீரா
தேர்வு செய்த படம்: படம் 10
சிற்பா ஓவியக் கல்லூரி. பல வண்ணங்களில் மலர்கள்… வளாகத்தில் குழுமியிருக்கும் பூவையர் கூட்டத்தோடு போட்டியிட முடியாமல் கூம்பியே கிடந்தன. இதோ ..கல்லூரி நேரம் முடிந்தால் கிளம்பிடுவர்.. இரவினில் வைத்துக் கொள்ளலாம் நம் ஆட்டத்தை என்று மொட்டவிளக் காத்திருந்தனவோ…
ஹேய் சரயு … நா மைன்ட்ல பிக்ஸ்பண்ணிட்டேன் . நீ இந்தப் போட்டியில கலந்துக்குற. நோட்டீஸ் போர்டைப் பார்த்த சரயு நிராசையுடன் மலர்விழியை வெறித்தாள் .
அந்த நதியைப் போன்று அமைதியானவள் சரயு. குழல் இனிது ..யாழ் இனிது எனும்படி இனிய குரல் வளம் அவளுக்கு.
ஆனால் பாவம் …மின்சார விபத்தில் பெற்றோரைப் பலி கொடுத்த அதிர்ச்சியில் அவளது பேசும் சக்தி பத்தே வயதில் பறிபோனது.
நிர்கதியாய்த் தவித்த தோழியைப் பெற்றோரிடம் பிடிவாதம் பிடித்து அடைக்கலம் கொடுத்த மலர்விழி சரயுவுக்கு யாதுமாகி நின்றாள்.
தாய் பத்மினி மறுக்க…
நானே நல்ல அனாதை விடுதியாப் பார்த்துச் சேர்த்து விட்டுடறேன் என்று கூறிய தந்தை பட்டாபிக்கு மறுமொழியாக…
நீங்க ரெண்டு பேர் சொல்லறதும் எனக்குப் புரியுது…ஆனா…சரயு எங்க இருப்பாளோ அங்கதான் நானும் இருப்பேன் ….
தான் நினைத்ததைச் சாதித்த மலர்விழி ….
வேறுவழியில்லாமல் நின்ற சரயுவை ஒற்றைச் சொல் நெருங்கவிடாமல் இன்றுவரை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள். சரயு அவளைத் தன் தாயினும் மேலாக நேசித்தாள்.
மலர் இடித்ததில் நிகழ் உலகிற்குள் பிரவேசித்த சரயு தோழியின் பிடிவாதம் அறிந்திருந்ததால் சம்மதமாகத் தலையாட்டி வைத்தாள்.
ஓவியத்தில் சரயுவின் ஆர்வத்தை கவனித்து, அவள் தேவைக்காகத் தன் பெற்றோரிடம் சங்கடப்படக்கூடாதென்று அவளுக்குச் சற்றும் ஒத்துவராத ஓவியப் படிப்பில் சேர்ந்த மலர்விழியின் அன்பில் நெகிழ்ந்த சரயு…..
இந்தப் பிறவியிலேயே இவளுக்கு நான் பட்ட நன்றிக் கடனை அடைக்க வழிகாட்டு ஆறுமுகனே …
சரயுவைக் கடைக்கு அழைத்துப்போய் ஓவியப்போட்டிக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொடுத்த மலர்விழி …..
சரயு …என் உள் மனசு சொல்லுதுடி …. இந்தப் போட்டியில நீ ஜெயிக்கப் போறேன்னு ….
மறுநாள் கல்லூரி முடிந்து வந்ததிலிருந்து தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வரைந்து தன் கற்பனை உருவத்துக்கு வடிவும் கொடுத்தாள் சரயு .
ஏய் …அட்டகாசமா வந்திருக்குடி …எனக்குத் தெரியாம ஏதாவது லவ்வா ….என்றவளை முறைத்த சரயு அது முழுக்க முழுக்கத் தன் கற்பனையே என்று ஓவியத்தில் இருந்த ஆண் உருவத்தைக் காட்டி சாடையில் மொழிந்தாள்.
கண்கள் மட்டும்தான் மிஸ்ஸிங் … சீக்கிரம் முடிடி…
மறுநாள் அவள் வரைந்திருந்த கண்களைப் பார்த்து, குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் விழிவிரித்தாள் மலர்விழி.
அப்படி என்னதான் அந்தக் கண்களில் இருந்தது?
போட்டி நாள் …
புகழ் பெற்ற சேவை மையத்தின் நிறுவுனரும் அவர் மகன் அஸ்வத்தும் வந்திருந்தனர்.
டிசைனிங் நிறுவனம் நடத்தி வரும் அஸ்வத் எல்லா ஓவியங்களையும் வெகு ஆர்வமாகப் பார்வையிட்டான் .
பெண்டாஸ்டிக் …ரொம்ப வித்தியாசமான அப்ரோச் …சரயுவின் ஓவியத்தையும், அதில் இடம் பெற்றிருந்த வரிகளையும் பார்த்துப் பிரமித்தான் அஸ்வத்.
ஒரு ஆணின் உருவத்தைத் தத்ரூபமாக வரைந்து அதில் பெண்ணின் விழிகளைத் தீட்டி …
மூடிய இமைகளுக்குள் விழிப்பாவைகளின்
மௌனயுத்தம் ஏனோ ? விழியாய் ..ஒளியாய்
உன்னில் நான் இருக்கையிலே …
கைகூப்பி விழிகளால் தன் நன்றியைத் தெரிவித்தாள் சரயு.
மேடையில் முதல் மற்றும் சிறப்புப் பரிசை வாங்க ஏறியபோதும் மௌனமாய்ப் பெரியவரின் பாதம் பணிந்து பெற்றுக் கொண்டவள் ஒன்றும் பேசாமல் இறங்க…
வாய் திறந்து நன்றி கூடச் சொல்ல முடியாதோ …என்று எண்ணிய
அஸ்வத்துக்குப் பிறகுதான் தெரிந்தது அவள் பேசும் திறனற்றவள் என்று.
கிளம்புமுன் தனியே அமர்ந்திருந்த சரயுவிடம், உங்களைப் பற்றி உங்க பிரின்சி சொன்னாங்க …மிஸ்.சரயு … உங்களுக்கு ஒக்கேன்னா அப்பாகிட்டச் சொல்லி உங்கவீட்டுல வந்து பொண்ணு கேக்கறேன் … சைகையில் அவன் மொபைல் நம்பரைக் கேட்டுப் பதிவு செய்தவள் …டெக்ஸ்ட் செய்வதாக சமிக்ஞை செய்து நகர்ந்துவிட்டாள்.
சற்றுமுன் மலர்விழி பேசியது சரயுவின் மனக்கண்ணில் நிழலாடியது.
ஏய், ஆள் செம்ம ஹாண்ட்சம்டி .. பரிசை நீ கலெக்ட் பண்ணு …அந்த அஸ்வத்தை நா கரெக்ட் பண்ணுறேன்…சொல்லியவளை முதுகில் ஓங்கி அடித்தாள் சரயு.
வீடு வந்து சேரும் வரை ஒரே அஸ்வத் புராணம்தான் மலர்விழிக்கு …
மறுநாள் காலை அருகில் இருந்த காபி ஷாப்பில் சந்திக்க விரும்புவதாக அஸ்வத்துக்கு மெசேஜ் அனுப்பினாள் .
காபி ஷாப் …
தன் கையில் இருந்த கடிதத்தை அஸ்வத்திடம் நீட்டினாள்.
மலர்விழி இஸ் ரியலி கிரேட் …அவங்க உன்னைத் தாய் ஸ்தானத்துல இருந்து பார்த்துகிட்டாங்க … நா உனக்குத் தாயுமானவனா இருப்பேம்மா…. சொன்ன அஸ்வத்திடம் ..
தயங்கியவாறே இன்னொரு சிறு கடிதம் நீட்டினாள் சரயு.
என்னோட தேடல் நா தீட்டிய ஓவியத்துல இருக்குற உருவம்தான் …என்னைக் கட்டிக்கிறவருக்கு நா ஒளியாவும்..அவர் எனக்கு ஒலியாவும் இருக்கணும்னு விரும்பறேன்.
உங்க கருணை தந்த உரிமையிலே ஒரு ரிக்வெஸ்ட் …மலர்விழி உங்களைக் காதலிக்கிறா … அவளை நீங்க மணந்தா…எனக்குத் தந்தையும் கிடைச்சிடுவார் …
நிமிர்ந்து சரயுவை நோக்கியவன்… அந்த விழிகள் தன்னிடம் யாசிப்பது பொறுக்காமல் சம்மதமாகப் பெருவிரல் உயர்த்தினான் .
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.