வஞ்சி சொல்லும் போட்டி கதை: தனிமை வரம்

by admin 2
44 views

எழுதியவர்: திவ்யா 

பட்டென கதவை அறைந்து சாத்திய அபிராமி விடுவிடுவென அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டாள். என்னமோ ஏதோவென கதவைத் தட்டிய அம்மாவிற்கு என்னையக் கொஞ்ச நேரம் தனியா விடும்மா, ப்ளீஸ் என பதில் சொல்லிவிட்டு படுக்கையில் விழுந்தாள். “என்னடி, பெரிசா புருசன்? தாலி கட்டிட்டா அவனுக்கு நீ அடிமையா? பொண்ணுங்க நாம பொறுத்துப் போற வரை தான் ஆளுங்க ராஜா, நாம மட்டும் பொங்கி எழுந்தா அவனுங்க கூஜா. சரிதான் போடான்னு தூக்கி போட்டுட்டு வாடி, உன்கிட்ட கை நிறைய பணம் கொட்டுற வேலை இருக்கு. சப்போர்ட்டுக்கு அப்பா, அம்மா, நான்னு எல்லோரும் இருக்கோம்” என தோழி ரம்யா சொன்னது காதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டது.

             “ஆமா அதுதான் சரி, எடுத்தோம் கவிழ்த்தோம்னு வாய்ல வந்ததை பேசறது, பிறகு வந்து சாரி அபி பூரி அபிங்கறது. நானும் மனுசிதான? இது ஒத்து வராது. ரம்யா சொன்ன மாதிரி விட்டுட்டு நம்ம வாழ்க்கையை புதுசா தொடங்கனும் ” என நாலே நாளில் சமாதானமாகக் கூடிய சண்டையை  டைவர்ஸ் வரை இழுத்து விட்டாள் ரம்யா.

          இதுதான் இறுதி முடிவு என எழுந்த அபி அம்மாவிடம் சென்று “அம்மா இனி எனக்கும் அவருக்கும் ஒத்துவரும்னு தோணலைமா, அதனால நான் அவர்கிட்ட டிவர்ஸ் வாங்கிடலாம்னு இருக்கேன் ” என சுற்றி வளைக்காமல் போட்டு உடைத்தாள். இதையே எதிர்பார்த்தது போல அம்மா சற்றே நிமிர்ந்து, கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசத்துல நீ எடுத்த இதே முடிவைத்தான் நான் என் கல்யாணம் முடிஞ்ச நாலாவது மாசத்துல எடுத்தேன். ஆனா அப்போ என் அம்மா சொன்னது, “அம்மாடி, இதுதான் உன் முடிவுன்னா இதோட உன்னோட கல்யாண வாழ்க்கையை தலை மூழ்கிடு. அடுத்து ஒரு திருமண பந்தத்தை நீ எதிர்பார்க்காதே. ஏன்னா கல்யாணம்கறது ரெண்டு குடும்பங்கள் இணையும் நிகழ்வு மட்டுமல்ல அது இரு மனங்களும் இணையும் நிகழ்வு. நீ பெரிசா நான் பெரிசான்னு சண்டை போட்டு ஜெயிக்க இது போட்டி இல்லம்மா, உன்னைவிட எனக்கு எதுவும் பெரிசில்லன்னு விட்டுக்கொடுத்து ஒருத்தர ஒருத்தர் ஜெயிக்க வைக்க வேண்டிய புனிதமான பந்தம். இதுல நான் எதையுமே மிகைப்படுத்திச் சொல்லலை. கண்ணை மூடி மிகைப்படுத்தப்பட்ட உன் கற்பனையை கொஞ்சம் நிஜத்தோடு ஒப்பீடு செய்யச் சொல்றேன் அவ்வளவு தான், உனக்கும் மாப்பிள்ளைக்கும் என்ன சண்டைன்னு நான் கேட்கமாட்டேன்,  ஏன்னா என் தீர்ப்பு மகளுக்காக ஒரு தலைப்பட்சமா இருக்கலாம் அதனால நீ உன் மனசு கூட பேசு, அது பொய் சொல்லாது, பொல்லாங்கு பேசாது, தனியா யோசி, தப்பு உன் மேலன்னா தாராளமா இறங்கிப்போ, தப்பு மாப்பிள்ளை மேலன்னா தயங்காம அம்மாகிட்ட சொல்லு, உன் வாழ்க்கையை மீட்டு உன் கையிலயே கொடுத்துடறோம். இது உன் வாழ்க்கைம்மா, அவசரம் மட்டும் வேணாம் ” அவ்வளவு தான். 

             நாலுநாள் நிறைய யோசிச்சேன். பிரிஞ்சிடலாம்னு உறுதியா இருந்தேன். சரி சரின்னு நாலுநாள் பத்து, பதினைந்து, இருபதுன்னு ஒரு மாசம் ஓடியே போச்சு, தூபம் போட்ட யாரும் என்ன ஏதுன்னு விசாரிக்க கூட இல்லை. மாறாக சம்பாதிச்ச திமிரு, அந்த திமிர புருசன்கிட்ட காமிச்சா கம்முனு இருப்பானா? இவன் இல்ல எவனும் இவள வச்சு வாழ மாட்டான்னு பேச ஆரம்பிச்சாங்க. நான் செய்த தப்பு புரிஞ்சுது, உன் அப்பா மேல வச்சிருந்த என் அபிப்ராயமும் மாறிச்சு. நேரா உன் அப்பாகிட்ட வந்தேன்,  உன் அப்பாவப் பார்த்ததும் அழுகை வெடித்தது. கண்ணீரைத் துடைச்சு கையைப் பிடிச்சார். அப்போதிலிருந்து இப்போ வரை எத்தனையோ சண்டை, வாக்குவாதம் வரும் எல்லாம் முடிஞ்சு கொஞ்சம் தனியா யோசிச்சா எல்லாம் சரியாகும். இதில் முக்கியமா நீ கவனிக்க வேண்டியது நாலு சுவத்துக்குள்ள நடக்குற எதையும்  யாருகிட்டயும் சொல்லக் கூடாது. அதுதான் குடும்ப வாழ்க்கைக்கான அச்சாணி. ஏன்னா அத வச்சுத்தான் உன் மனசுங்கற வண்டிய கவிழ்க்க முடியும். யோசிச்சுப் பாரு. படிச்ச பொண்ணு சீக்கிரம் புரிஞ்சுப்பனு நம்பறேன் என தனிமையில் அவளுடன் அவள் பேசட்டும் என கதவடைத்துச் சென்றாள் அம்மா.

              நான்காவது நாள் அம்மாவிடம் கூடச் சொல்லாமல் கணவன் வீடு சென்றவள் மறுநாள் கணவன் கைபிடித்து அம்மா வீட்டிற்கு வந்த அபி ஆச்சர்யமாய் விரிந்த அம்மாவின் கண்கள் கேட்ட கேள்விக்கு, உன்கிட்ட தனியாகச் சொல்லும் அளவிற்கு ரகசியம் ஏதும் இல்லை என கண்களால் பதில் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!