100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: நாட்டுக்கோழி முட்டை

by admin 3
199 views

எழுதியவர்: அருள்மொழி மணவாளன்

சொல்: முட்டை

தாம்பரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி முடிச்சூரில் அமைந்துள்ளது குமரனின் வீடு. அவனது தந்தை அந்த காலத்தில் வாங்கி போட்ட 3 கிரவுண்டு இடம், இப்பொழுது அவனுக்கு ஆடு கோழி முயல் வளர்ப்பதற்கு உதவியாக இருக்கிறது.

நிரந்தர வேலை இல்லாமல் கிடைத்த வேலைகளை செய்து கொண்டு காலத்தை கடத்திக் கொண்டிருந்த குமரனுக்கு திருமணம் முடிந்ததும் நிலையாக ஒரு வேலை செய்யும்படி மனைவி கூறினாள்.

நாட்டுக்கோழி என்று மக்கள் விரும்பி வாங்கவும், அவன் ஆசைக்காக வளர்த்த முயலும் கோழியுமே அவனது தொழிலாக மாறியது.

அதில் போதிய வருமானம் வர இப்பொழுது நாட்டு கோழி பண்ணை அவன் இடத்திலேயே வைத்து, பராமரிக்க ஆள் போட்டு தொழில் செய்து வருகிறான். ஆரம்பத்தில் பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணி குடிபெயர்ந்து தாம்பரம் சென்று விட்டதால், வாரம் ஒரு முறை நாட்டுக்கோழி முட்டைகள் கொண்டு வந்து தர கூறினார்.

முதலில் ஒரு வீட்டிற்கா என்று தயங்கிய குமரன், அவர்களுக்கு தேவையான முட்டைக்கு அதிகமாகவே எடுத்துக்கொண்டு தாம்பரம் சென்று விற்க, வியாபாரம் சூடு பிடித்தது.

இயற்கை உணவு, இயற்கை முறையில் குஞ்சு பொரிக்க செய்வது என்று அனைத்தும் நல்ல முறையில் பராமரிக்க, வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியடைந்தான்.

அவனது தொழில் போலவே குடும்பமும் பெருகியது. ஆண், பெண் என்று இரு குழந்தைகள் இருக்க, மனைவியும் அவனுக்கு உதவியாக இருந்தார்.

தங்கள் கோழியை பார்த்துக் கொள்ளும் கணவன் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை இருக்க, அவளையும் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் படிக்க வைத்தான் குமரன். அப்பெண் கயல் படிப்பில் படு சுட்டியாக இருந்தாள்.

கால் வருட பரிட்சை விடுமுறையில் பிள்ளைகளும் பண்ணையில் வேலை செய்தனர். அப்போது அவர்கள் பண்ணைக்கு வந்து ஒருவர், முட்டைகள் வாங்கிக் கொண்டு, பணம் குறைவாக கொடுக்க, குமரனின் மகளுக்கு கணக்கு தெரியாமல் பேசாமல் வாங்கிக் கொண்டாள். ஆனால் அதை கவனித்த கயல் அவரிடம் நீங்கள் ஐம்பது ரூபாய் பணம் குறைவாக கொடுத்திருக்கிறீர்கள் என்று கூறி முட்டையின் விலையையும் சொல்லி மொத்தம் இவ்வளவு என்று விளக்கமாக கூறி, மீதி பணத்தையும் கேட்டு வாங்கினாள்.

அதை கவனித்துக் கொண்டே அங்கு வந்த குமரன், கயலை பாராட்டி மகளிடம் ஒழுங்காக கணக்கு பார்க்க மாட்டாயா என்று கடிந்து கொண்டார். அதன் பிறகு சிறு சிறு கணக்குகள் கேட்க கயல் எல்லாவற்றிற்கும் சரியாக பதில் சொல்ல அவரது மகளோ திரு திருவென்று விழித்தாள்.

“வியாபாரத்திற்கு கணக்கு மிகவும் அவசியம். நம் தொழிலே முட்டை வியாபாரம்தான், ஒரு முட்டைக்கு இவ்வளவு என்றால் அவர்கள் வாங்கும் முட்டைக்கு கணக்கு பார்த்து பணம் பெற வேண்டும். கவனமாக படி” என்று மகளுக்கு அறிவுரை கூறினார்

பள்ளி திறந்ததும் பரீட்சை முடிவு மதிப்பெண்கள் கொடுக்க, கணிதத்தில் முழு மதிப்பெண் வாங்கியதை மகிழ்ச்சியாக கொண்டு வந்து தன் வீட்டில் காண்பித்தாள் கயல்.

குமரனின் மகளோ கணக்கு பாடத்தில் பூஜ்ஜியம் மதிப்பு எடுத்திருக்க, “உன் அப்பா நாட்டுக்கோழி முட்டை விற்கிறேன். நீ கணக்கு பாடத்தில் முட்டை வாங்கி வந்திருக்கிறாய்!”என்றான் வருத்தமாக.

முற்றும்.

📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!