எழுதியவர்: புனிதா பார்த்திபன்
சொல்: மஞ்சம்
ஆனந்தனுக்கு இன்று சம்பள உயர்வு. அவனுடைய ஏற்றம் நிதானமாகத்தான் இருந்தது. அதோ அவனப்பாரு காரு, வீடுன்னு வச்சுருக்கான் நீயும் தான் இருக்கியே என்ற ஏச்சுக்களெல்லாம் கேட்டாயிற்று. ஆனந்தன் மூடனல்ல அவனுள்ளும் கனவு உண்டு.
ஆர்பாட்டமற்ற அக்கனவுகளுக்குள் ஆசைகளுமுண்டு. ஆனால் அவனுடைய வாழ்க்கைப் போட்டியில் அவனுக்கு அவன் மட்டும்தான் போட்டியாளன். தன்னை முந்துவதே அவனுடைய இலக்கு. இது இயல்பிலே அவனுடைய குணமானாலும், ஒருநாள் தன் மகள் பாடம் படிக்கையில் மிகப்பெரிய விலங்கு “பூனை” எனப் படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.
“பூனையா?” என வியந்தவனிடம், கீரி, எலி, அணில், பூனை எனக் கொடுக்கப்பட்ட நான்கில் அது பெரியது என்றாள். எனில், நம்மைச் சுற்றியுள்ளவற்றை, நாம் அறிந்தவற்றை மட்டுமே நம்மால் ஒப்பிட முடியும்.
அதில் பெரிதாகிவிட்டால், தான் பெரிய ஆள் என எண்ணும் அறிவு, தன் வட்டத்துக்கு வெளியே நிற்கும் சிங்கத்தையோ, யானையையோ அறிவதில்லை. இந்நிகழ்வு இன்னும் அவன் குணத்திற்கு மணம் சேர்த்தது. மூன்றாம் படியிலிருந்து நான்காம் படிக்கு போக என்ன முயற்சி செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவன் சிந்தையாக இருக்கும்.
“அடுத்தவன்” என்கின்ற ஆரவாரம் ஒருபோதும் அவனிடமிருந்ததில்லை. இவற்றின் விளைவு, இரவில் மஞ்சத்தில் சாய்பவன் அறுபதே நொடிகளுக்குள் தூங்கிப்போவான். கனமற்ற மனதினன் அவனின் தூக்கம் ஒருநாளும் களவாடப்பட்டதேயில்லை.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.