எழுதியவர்:அருள்மொழி மணவாளன்
சொல்: ஊஞ்சல்
சென்ற வருடம் விபத்தில் கணவன் இறந்து விட, வீட்டு வேலை செய்து தன் மூன்று பிள்ளைகளையும் வளர்த்தாள் மங்கை. மூத்தவனுக்கு பத்து வயது, அடுத்து இரண்டு பெண் பிள்ளைகள் ஐந்து வயது, இரண்டு வயது என்று.
அவர் வேலை செய்யும் வீட்டில், அவர்கள் மகளுக்கு பிறந்தநாள். மங்கையை பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு மதிய உணவிற்கு வா என்று சொல்லியிருந்தார்கள்.
இரவு உறங்கும் பொழுது தன் பிள்ளைகளிடம் “நாளை மதியம் முதலாளியின் வீட்டில்தான் நமக்கு சாப்பாடு, அவர்கள் மகளுக்கு பிறந்தநாள், அதனால் நம்மை வரச் சொல்லி இருக்கிறார்கள்” என்று கூற,
மகன் “நான் வரலை அம்மா, சின்ன தங்கையை வேண்டும் என்றால் அழைத்துச் செல்லுங்கள். நானும் பெரிய தங்கையும் பள்ளிக்கு செல்லவேண்டும்” என்றான்.
“முதலாளி அம்மா கண்டிப்பாக எல்லோரையும் கூட்டிட்டு வர சொன்னாங்க. நாளைக்கு ஒரு நாள் தானே, பெரியவளுக்கும் லீவு போட்டுவிடலாம்” என்க, “மகனோ கண்டிப்பாக நான் வரவில்லை” என்று கூறி விட்டான்.
அதனால் மறுநாள் பெண் பிள்ளைகள் இரண்டையும் அழைத்துக் கொண்டு முதலாளியின் வீட்டிற்கு வந்தாள் மங்கை. நெருங்கிய சொந்தம் என்று கிட்டத்தட்ட 15, 20 பேர் வந்திருக்க, அனைவருக்கும் வீட்டிலேயே உணவு தயாரிக்கும் வேலை நடந்தது.
பிள்ளைகளை அங்கே ஓரிடத்தில் அமர்ந்திருக்கும் படி சொல்லிவிட்டு வீட்டு வேலைகளை பார்க்க தொடங்கி விட்டாள். வீட்டிற்குள் பிள்ளைகளின் விளையாட்டு சத்தம் கேட்க மங்கையின் மகள்கள் இருவரும் மெதுவாக வீட்டிற்குள் சென்றனர்.
வீட்டின் நடுவில் அழகான வேலைப்பாடுகள் நிறைந்த மர ஊஞ்சல் ஒன்று இருக்க, அதில் பிள்ளைகள் மாறி மாறி விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
அதைப் பார்த்ததும் சின்ன பிள்ளையும் தானும் விளையாட வேண்டும் என்று தன் அக்காவிடம் கூற, அவளும் தன் தங்கையை அழைத்துக் கொண்டு அவர்கள் அருகில் சென்று, “என் தங்கச்சியையும் கொஞ்ச நேரம் ஊஞ்சலில் உட்கார வைக்கிறீர்களா?” என்றாள்.
எல்லோ பிள்ளைகளும் 10 வயதிற்கு மேலே இருக்க, பிறந்தநாள் காணும் பெண்ணும் உடனே குழந்தையை தூக்கி ஊஞ்சலில் உட்கார வைத்து ஆட்டினாள். மற்ற பிள்ளைகள் குழந்தையை கீழே இறக்கிவிட்டு, இருவரையும் வெளியே செல்லும்படி கூறி, பிறந்தநாள் பெண்ணிடமும் “வேலைக்காரியின் பிள்ளைகள் நமக்கு சமமாக ஊஞ்சலில் ஆடலாமா?” என்றனர்.
தன் தங்கையே வேகமாக ஊஞ்சலில் இருந்து இறக்கியதும், கீழே விழுந்து விடாதபடிக்கு விரைவாகச் சென்று அவளை தூக்கிக் கொண்ட அக்காவிற்கு, அவர்கள் பேசியது காதல் விழ, அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள்.
சிறிது நேரத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் சத்தம் வீட்டிற்குள் கேட்டது.
வீட்டுக்குள் நடந்த விஷயம் எதுவும் அறியாத மங்கை, வீட்டு வேலைகளை முடிந்ததும், தன் பிள்ளைகளை தேட, எதிலேயும் கலந்து கொள்ளாமல் தன் தங்கையை மடியில் வைத்துக் கொண்டு வெளியேவே அமர்ந்திருந்தாள் பெரியவள்.
மகளின் முகம் சரியில்லாமல் இருக்க, அங்கு வைத்து எதுவும் கேட்டு பிரச்சனை பண்ண வேண்டாம் என்று உணர்ந்த மங்கை, மதிய உணவு உண்டதும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார்.
பள்ளியில் இருந்து வந்த அண்ணன், தங்கை இருவரும் சோகமாக இருப்பதை கண்டு என்னவென்று விசாரிக்க, நடந்ததை அனைத்தையும் கூறினாள் பெரியவள்.
தன் தங்கைகளின் கவலையில் உள்ளம் வருந்திய அண்ணன், அவர்களுக்கு தந்தையாக மாறினான். “இதுக்குத்தான் சோகமா இருக்கீங்களா? கொஞ்சம் பொறு, அண்ணன் உனக்கு ஊஞ்சல் கட்டி தருகிறேன்” என்று, அவர்கள் வீட்டின் அருகில் இருந்த வேப்பமரத்தில், தாழ்வான கிளையில் வீட்டில் இருந்த கயிறை வைத்து இரு பக்கம் கட்டி, நடுவில் ஒரு மரப் பலகையை வைத்து தங்கையை உட்கார வைத்து ஆட்டி மகிழ்ந்தான்.
குழந்தையும் முன்னும் பின்னும், செல்லும் ஊஞ்சலில் மகிழ்ச்சியாக விளையாடியது. இவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள சிறு பிள்ளைகளும் வர, “ஒவ்வொருவராக எல்லோருமே விளையாடலாம்” என்று கூறி அனைவரையுமே ஊஞ்சலில் உட்கார வைத்தான்.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.