எழுதியவர்: கௌரி சங்கர்
சொல்: சீப்பு
10.00 மணிக்கு வங்கி கிளையில் வேலை ஆரம்பித்துவிடும். கிட்டத்தட்ட 20 ஊழியர்கள் வேலை பார்த்துவந்தனர் கிளையில் – பெண்கள் 15 நபர்கள்.
9.55 மணிக்கு உள்ளே நுழையும் ஊழியர்கள் முதலில் தேடுவது டாய்லெட் தான். ஒரே நேரத்தில் அத்தனை நபர்களும் பயன்படுத்த முடியுமா? அங்கேயே டென்ஷன் ஆரம்பித்துவிடும். பலர் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பார்கள். அடுத்த கட்டம், ஒப்பனை செய்து கொள்ளுவது. ஒப்பனையின்றி பெண்கள் இருக்கையில் அமர மாட்டார்கள்.
அனைவரும் ஒருவழியாக 10.01க்கு இருக்கையில் அமர்ந்து விட்டனர். ஹேமா வரவில்லை. அவர் காஷியர் என்பதால் கவுண்டர் முன்பு கூட்டமோ கூட்டம்.
பதறிப்போன அதிகாரி ஆறுமுகம் டைனிங் ஹாலில் நுழைந்த போது ஹேமா சீப்பை தேடிக்கொண்டு இருந்தார். அவரும் தேடினார். தலை சீவாமல் இருக்கையில் அமரும் வழக்கம் ஹேமாவுக்கு கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. வேறு வழியின்றி இருக்கையில் உம் என்று முகத்தை வைத்துக்கொண்டு அவர் அமர, பின்புற தலையில் சொருகி வைத்திருந்த சீப்பு அடக்க முடியாமல் சிரித்தது.