ஒரு பக்க போட்டிக்கதை: தாய்

by admin
105 views

எழுத்தாளர்: பெரணமல்லூர் சேகரன்

பூவாயி கைவிலங்குடன் போலீஸ் ஜீப்பில் ஏறுவதை அந்தத் தெருவே வேடிக்கை பார்த்தது. ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக வெறும் வாய்க்குக் கிடைத்த அவலாய் பூவாயியை மென்று கொண்டிருந்தார்கள் மக்கள்.

“நானா இருந்தாலுமே அந்தக் காரியத்தைத்தான் செஞ்சிருப்பேன்”

“என்னதான் ஞாயம் இருந்தாலும் பூவாயி செஞ்சது கொலதானே…இப்ப தெருவுல நிக்கிறது அவளோட பேரனும் பேத்தியுந்தானே”

“அவளும் மனுஷிதான.. எவ்வளவுதான் தாங்குவா..எதுக்குமே ஒரு அளவிருக்கு..எல்லை மீறும்போது அவ  எடத்துல யாரா இருந்தாலும் வேடிக்கை பார்க்கிறவங்களா இருக்க மாட்டாங்க..”

இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் பூவாயியின் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. ஜீப்பில் அவள் எதிரில் உட்கார்ந்திருந்த பெண் போலீஸையோ அப்பெண் போலீசுக்கு அருகில் அமர்ந்திருந்த ஆண் போலீஸையோ ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை பூவாயி. கடந்து செல்லும் சாலையில் அவள் மனதால் பின்னோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தாள்.

கணவனின் குடித்தொல்லை தாங்காமல் தற்கொலை பண்ணிக் கொண்டு ஒரு மழை இரவில் மாண்டுபோனாள் மருமகள் சிவகாமி. இப்போது எல்லா சுமையும் பூவாயி தலையில்.

ஐந்து ஆண்டுகள் போராடிப் போராடித்தான் குடும்பத்தை நடத்தி வந்தாள் பூவாயி. இப்படிப்பட்ட குடிகார மகனா என் வயிற்றில் வந்து பிள்ளையாகப் பிறக்க வேண்டும். அதைவிட நாண்டுகிட்டு சாகலாமே என்று கூட எண்ணியதுண்டு பூவாயி. ஆனால் அவள் காலையே சுற்றி வரும் பேரன் முருகன், பேத்தி சுமதியை நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் மென்று விழுங்கிக் கொண்டு காலத்தைக் கடத்தி வந்தாள். தன் கணவன் புற்றுநோயால் அவதிப்பட்டு இறந்த நேரத்திலேயே தானும் செத்துப் போயிருந்தால் இவ்வளவு துன்ப துயரங்களை அனுபவிக்க வேண்டியதில்லையே என்றெல்லாம்கூட எண்ணியதுண்டு.  ஆனால் மருமகள் சாவதற்கு முந்தைய நாள் பூவாயியிடம் சொன்னது உண்மையாகிவிடும் என்று எண்ணிப் பார்த்ததில்லை பூவாயி.

“அத்தை..மத்தவங்களப் போல இல்லாம நாம தாயா மவளாதான் வாழ்ந்துகிட்டிருக்கோம். இப்ப சொல்றதை மட்டும் என்னிக்கும் மறந்துடாதீங்க.. இன்னிக்கு இருக்கிறவங்க நாளைக்கில்ல..எனக்கு ஏதேனும் ஆயிடுச்சின்னா முருகனையும் சுமதியையும் தாயாயிருந்து நீதான் காப்பாத்தனும்.”

இந்த வார்த்தைகளில்தான் பூவாயியின் வாழ்க்கை வண்டி பயணித்தது. ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் புதிய வாழ்க்கை தொடங்க வேண்டியதாயிற்று. மகன் ராமன் கட்டுமானத் தொழிலாளியாக சம்பாதித்துக் குடும்பத்துக்காக செலவழித்தது அவனுடைய கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வருசந்தானிருக்கும் . எப்போதோ வாரத்துக்கொரு முறை குடித்துக் கொண்டிருந்தவன் குடியே கதியென்றாகிக் குடும்பத்தைச் சின்னாபின்னமாக்கிவிட்டான்.

பூவாயி, சிவகாமி இரண்டு பேரும் நூறுநாள் வேலைக்குப் போய்தான் வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருந்தது.  நூறுநாள் வேலை இல்லாத நாளில் கூலிவேலையைத் தேடிப்பிடித்துப் போகவேண்டிய நிர்ப்பந்தம் இரண்டு பேர் தலையிலும் விழுந்தது. ராமன் கட்டுமானத் தொழிலில் அக்கறையில்லாமல் சதா குடித்துத் திரிந்ததால் வேலைக்கு யாரும் அழைப்பதுமில்லை. மனைவி சிவகாமி சாம பேத தான தண்டம் என முடிந்த அளவிற்கு முயன்று தோற்றுப்போனாள். இறுதியில் வாழ்க்கையைத் தொடர்வதில்லை என்னும் முடிவுக்கு வந்தாள்.

ரத்தக் கறையோடு பூவாயி வீட்டிலிருந்து வெளியே வர முற்படும்போது தலைவிரி கோலமாய் தன் கால்களைப் பிடித்துக் கதறிய சுமதியின் முகம் மீண்டும் மீண்டும் பாடாய் படுத்தியது பூவாயியை.பூப்பெய்தி செலவில்லாமல் வீட்டோடு சடங்கை முடித்துப் பத்து நாட்கள்தான் ஆகிறது. நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடூர விளிம்பிலிருந்து பேத்தியைக் காப்பாற்றியதில் பெற்ற தாயே இருந்த  ஒரே மகனை இல்லாமல் ஆக்கியது காணாமல் போனது.

பெருமூச்செறிந்த பூவாயி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க முயன்று கைவிலங்கால் தோற்றாள். பெண் போலீஸ் தன் கைக்குட்டையால் பூவாயியின் கண்ணீரைத் துடைத்தது ஆறுதலாயிருந்தது.

“பூவாயி..அழாதே. அஞ்சாறு வருமா பொண்டாட்டி  இல்லாம தெனவெடுத்துப் போன குடிகாரனுக்கு மகளையே பெண்டாள தோனுச்சே..இவனெல்லாம் இந்த பூமிக்கே பாரம். பெத்த மகன்னு கூட பார்க்காம போட்டுத் தள்னது என்னப்  பொருத்தவரைக்கும் சரிதான். நீ உண்மையான தாயா நடந்துகிட்டே..உம்மவ உங்கிட்டே சாகும்போது சொன்னதச் செஞ்சிட்ட..  நீ அழாத..பேத்தி பேரனப் பத்தி கவலப்படாத..உன்ன சீக்கிரமே பெயில்ல கொண்டுவர ஏற்பாடு பண்ணலாம். இத நான் காக்கிச்சட்டை போட்டுக்கிட்டு சொல்லியிருக்கக் கூடாது”

பெண்போலீஸிடம்பதில் பேச நா எழவில்லை பூவாயிக்கு. உள்ளூர்க்காரி உள்ளூரிலேயே போலீஸ்காரியாயிட்டேன்னு பார்க்கும்போதெல்லாம் பூவாயி சொன்னது நினைவுக்கு வந்தது. அப்படிச் சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று மனதுக்குள் இப்போது சங்கடப்பட்டாள்.

ஜீப் ஸ்டேஷன் முன்பு இரைந்து கொண்டே நின்றது. ஊரில் யாருக்கு எந்த பிரச்சனை என்றாலும் ஆஜராகி உதவி செய்வதே தலையாய பணியாய் செய்து வரும் செங்கோடன் அங்கு நிற்பதைக் கண்டாள் பூவாயி. பூவாயியைப் புன்னகை இழையோடு ஜீப்பிலிருந்து இறக்கினாள் பெண் போலீஸ்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!