எழுத்தாளர்: சுஶ்ரீ
நான்தான் சிவக்குமார்,அஞ்சாப்பு படிக்கறேன்.என் கால் பரிட்சை நடக்கறப்ப வலி வலினு கத்திட்டே ஆஸ்பத்திரிக்கு போன அம்மா ரெண்டு நாள் கழிச்சு அங்கே இருந்து “உனக்கு அங்கச்சிப் பாப்பாடானு” புடவைத் துணில சுத்தி இதைக் கொண்டாந்தாங்க. மூக்கும் முளியுமா பார்பி டால் கணக்கா இருந்தாலும் ,நான் கேர்லா என்ன இதோட விளையாட?, இது வேண்டாம் எனக்கு.டயனோசர் பொம்மைதான் வேணும்.
சுரேஷ்பாபு கிட்ட பெர்ர்ரிய டயனோசர் இருக்கு, வாயை திறந்து பல்லை காட்டி பயமுறுத்தும். அது மாதிரி யாரும் எனக்கு வாங்கியே தரலை.
அம்மா இப்பல்லாம் என்னை கொஞ்சறதில்லை, எப்பப் பாரு அந்த குட்டியைதான் தூக்கி தூக்கி வச்சிக்கறாங்க. ரோஸ் கலர் சோப்புக் கட்டி மாதிரி இருந்த அந்த தங்கச்சியை எனக்கு பிடிக்கலை.
அப்பா கூட ஆபீஸ்ல இருந்து வந்தவுடனே, வைஷுக்குட்டி எங்கே என் செல்லக்குட்டி எங்கேனுதான் வரார்.
இந்தப் பாட்டி, ஏய் பட்டுப் பையா சிவுச் செல்லம் , இங்கே வாடா என் செல்லமேனு கூப்பிடறவங்க ஒத்தங்கதான் இப்பவும் என்னை ஆசையா கூப்பிடுவாங்க.
எங்கம்மாவை பாத்து அந்த குட்டி தேவதையை அளவோட கொஞ்சுங்க, பையன் ஏங்கிப் போயிடுவான்னு சொல்வாங்க,அப்ப அதெல்லாம் எனக்கு புரியலை.
கூடத்துல பழைய புடவைல கட்டின தூளில தூங்கிட்டிருக்கு அந்தவைஷு,பைஷு. மெதுவா தூளியை விலக்கி உள்ளே பாத்தேன்.ஒரு கட்டை விரலை வாயில போட்டுட்டு,வாயில எச்சல் ஒழுக தூங்குது.நறுக்குனு ஒரு கிள்ளு கிள்ளலாமானு யோசனை பண்ணிட்டே,அக்கம் பக்கம் யாரும் பாக்கலைனு உறுதி பண்ணிட்டு, கைய்யை தூளிக்குள்ளே கொண்டு போனேன்.
சட்னு வாயில இருந்த விரலை எடுத்துட்டு கண்ணை முழிச்சு பாக்கறா.என் முகத்தை பார்த்து கக்னு சிரிச்சிட்டு திரும்ப கண்ணை மூடித் தூங்கறா, சின்ன கட்டை விரல் திரும்ப அந்த சின்ன வாய்க்குள்ளே. யாரும் பாக்கலைனு திரும்ப உறுதி பண்ணிட்டு அந்த தூளிக்குள்ளே தலையை நுழைச்சேன். அம்மா வாசனை வந்தது தூளித் துணியிலிருந்து. இப்ப பக்கத்துல அந்த பஞ்சுமிட்டாய் முகம்.
கிள்ளினா பாவம் வலிக்குமே, குனிஞ்சு அந்த பட்டுக் கன்னத்தில் சின்னதா முத்தம் குடுத்துட்டு, தலையை வெளியே எடுத்தேன்.
பின்னால சிரித்தபடி நின்னது அம்மா. “ ஏண்டா சிவு, தங்கச்சி
வைஷுபாப்பா மேல அவ்வளவு ஆசை இருக்குதானே அப்பறம்
ஏண்டா அவ கூட விளையாட மாட்டேன்றே.”
போம்மா எனக்கு டயனோசர்தான் பிடிக்கும்னு ஓடிட்டேன்.
இப்ப நான் கல்லூரி முடிச்சிட்டு வேலைக்கு போறேன்.வைஷு காலேஜ்ல இப்பதான் சேந்திருக்கா. இவ்வளவு வயசானப்பறமும், விவரம் நல்லா தெரிஞ்சும்,எல்லாருக்கும் என்னை விட வைஷுவைத்தான் பிடிக்கும்னு அம்மா மேலே,அப்பா மேல,எல்லாத்தையும் விட வைஷு மேல அசாத்திய கோபம்.எனக்கே தெரியும் நாம் தேவையில்லாம வைஷுவை வெறுக்கிறோம்னு.(ஆனா வைஷுவுக்கு என் மேல ஏக மரியாதை, பிரியம் உண்டுனு எனக்கு தெரியும்.)
அம்மா எத்தனையோ தடவை கெஞ்சிக் கூட கேட்டிருக்கா, அழுதிருக்கா தங்கையோட இணக்கமா இருனு. என்னமோ என் வரட்டுப் பிடிவாதம் வேணும்னே வைஷுவை வெறுக்கற மாதிரி காட்டிப்பேன். பாவம் வைஷு பாசத்தை காட்ட வழியின்றி என்னிடம் பயப்படுவாள்.
சமீபத்துல ஒரு செய்தி படிச்சேன், ஒரு மிலிடரி ஆபிசர், இரண்டு வயதான கைகளை ஃபோட்டோ எடுத்து எப்பவும் தன் கூடவே வச்சிப்பாராம்.கேட்டதற்கு அவை என் தாயாரோட கைகள், என் குடிகார அப்பாவுக்கு 3 குழந்தைகளை பெற்றுக்கொண்டு படாத பாடு பட்டு எங்களை வளர்த்த கைகள் இது. இதை வைத்து வணங்காமல் வேற எந்த தெய்வத்தை வணங்குவது என்பது அவர் கண்ணீருடன் கொடுத்த பதில்.
இதை படித்தால் தன் தாயாரை ஒரு நிமிடமாவது யாராலும் நினைக்காமல் இருக்க முடியாது. எனக்கும் என் அம்மா மேல பாசம் பொங்கிட்டு வந்ததை தடுக்க முடியலை.அது ஒரு சோம்பலான ஞாயிறு மத்யான நேரம். அம்மா சமைலறையை சரி பண்ணி விட்டு டி.வி. பாத்துக் கொண்டே ஓய்வு எடுக்கும் நேரம். போய் அருகில் உக்காந்து அவள் வலது கையை என் இரு கைகளால் மிருதுவாக பற்றிக் கொண்டேன். இது வரை செய்யாத செயல் இது, அம்மா ஆச்சரியமாய்
“என்னடா சிவு” என்றாள்.
“ஒண்ணுமில்லை, எங்களுக்காக எவ்வளவு கஷ்டப் படறே அம்மா நீ”
“என்னடா பெரிய கஷ்டம் இன்னிக்கு புதுசா எப்பவும் உள்ள வேலைதானே”
“எங்களுக்காகதானே இத்தனை வேலைகள் உனக்கு, அப்படியும் உன்னை சந்தோஷமா வச்சிக்க தெரியலையே எனக்கு”
“என்னாச்சு இன்னிக்கு என் சிவுக்குட்டிக்கு” கேட்டுக் கொண்டே என் தலையை கோதி விடற போதுதான் வைஷுவும் கூட வந்து ஒட்டிக் கொண்டாள். நான் முதல் முறையா வைஷவை இழுத்து பக்கத்தில் அமர்த்திக் கொண்டேன். அம்மாவோட கண்களில் கண்ணீர் ஆனால் நிச்சயமா துக்கக் கண்ணீர் இல்லை.
வைஷு அண்ணா, அண்ணானு கூப்படறா, வேற ஒண்ணும் அவளுக்கு பேச்சு வரலை,அவ கண்லயும் கண்ணீர். என் இரண்டு கைகளாலும் இருவரையும் அணைத்துக் கொண்டேன்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: