மெல்லிடை பெருத்து
வயிறும் வரிக்கோடிட
நுதழிலழைந்த கேசக்கருமை உதிர்ந்து விழிவளையமாக
குழந்தைக்கழிவு நெடியும்
மகப்பேறு ரணத்தின்
ஆறாத மிச்சங்களும்
செதுக்கியுதிர்த்து வேற்றொருவளாக்கி
எஞ்சிவிழுந்த துண்டுகளின் அடையாளம் பிஞ்சொன்றாகியிருக்க
பெயரும் உறவும்
உருவுமே மாறியவுனை
முப்பதாண்டு முகவரியில் முதலெழுத்தைக்கூட மாற்ற
திராணியற்றவன் இதற்கீடாய் இதென எதைத்தருவது
அறியாமலே உனை
அன்னார்ந்து பார்க்கிறேன்
பிள்ளைமுன் நிற்கும்
என் முதலெழுத்து
வேகமாய் முகத்தை
மறைத்துக் கொள்கிறது!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: மெல்லிடை
previous post