கவிஞர்: திவ்யாஸ்ரீதர்
பண்பாட்டின் வேரைக் காட்டும் பாரதத்தின் பெருமையிது – நம்
இல்லங்கள் தோறும் பொங்கும் இன்சுவைக் கொண்டாட்டமிது!
வடக்கில் அடவியில் இருந்து இராமன் வந்த நன்னாள் எனச் சொல்லி – மக்கள்
ஒளிசேர்த்து அகல்விளக்கேற்றி மகிழும் அன்புற்று;
தெற்கில் நரகாசுரனை வீழ்த்திய வீர நாளாகி – அந்தத்
தீமைகளும் சாம்பலான தீர்த்தத் திருநாளாகி!
சிவனின் இடப்பாகம் தனக்கெனக் கேட்டு – அன்னை
செவ்விழித் தவம் புரிந்து, பூமி தொழுது காத்து,
அர்த்தநாரீஸ்வரனாய் ஐக்கியமான நன்னாளும் – இந்த
அமாவாசைத் திருநாளில் சேர்ந்திடுமே மெய்யாளும்!
பலநூறு காரணங்கள் பரவி நின்றாலும் – இங்கே
பண்பாடு காக்கும் தீபத் திருவிழா என்றாலும்,
தித்திக்கும் தீபங்கள் திசையெங்கும் சுடர்விட – நல்
முத்துநிகர் முகங்களிலே புன்னகைகள் படர,
தெவிட்டாத பேரன்பும் திசையெட்டும் இன்பமும் – நாம்
தொட்ட இடமெல்லாம் மகிழ்ச்சியும் பொங்க,
ஒவ்வோர் ஆண்டும் எம்மைத் தேடிவரும் – இந்த
ஒளிவிழா என்றும் நம் நெஞ்சில் வாழும்!
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
